புஷ்பம் என்கிற சொல் தமிழில் பூவை குறிக்கின்றது. பூக்கள் அழகும், மென்மையும் நிறைந்தவை மாத்திரம் அல்ல அன்பின் அடையாளமாகவும் விளங்குபவை. ஆனால் மிக குறுகிய வாழ்நாளை பூக்கள் கொண்டிருக்கின்றன. பூவை போல அழகும், மென்மையும் கொண்ட, அன்பின் அடையாளமான செல்ல மகளுக்கு பெற்றோர் சூட்டிய பெயர் புஷ்பராணி என்பதாகும். ஆனால் அவளின் ஆயுளும் பூக்களை போல குறுகியதாக இருக்கும் என்று பெற்றோரும் சரி, உற்றோரும் சரி நினைத்தே பார்த்திருக்க மாட்டார்கள்.
அம்பாறை மாவட்டத்தில் தனி தமிழ் கிராமமான காரைதீவில் செல்லையா – சீனிப்பிள்ளை தம்பதியின் 08 ஆவது பிள்ளையாக 23.09. 1961 இல் புஷ்பா மலர்ந்தார். கடைக்குட்டியான இவர் செல்ல பிள்ளையாக கொண்டாடப்பட்டார். சுட்டித்தனமும், கெட்டித்தனமும் நிறைந்த புஷ்பா காரைதீவு விஷ்ணு வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியையும், விபுலாநந்த மத்திய கல்லூரியில் உயர் தர கல்வியையும் பயின்றார்.
க. பொ. த உயர் தரத்தை விஞ்ஞான பிரிவில் பயின்று எவ்வித மேலதிக மீட்டல் வகுப்புகளும் இல்லாமலேயே பேராதனை பல்கலைக்கழகத்தின் பல் வைத்திய பீடத்துக்கு தெரிவானார். காரைதீவில் இருந்து முதன்முதலாக பல் வைத்திய பீடத்துக்கு தெரிவான சாதனை மாணவி என்கிற பெருமையும், பெருமிதமும் செல்லையா புஷ்பாவையே சேரும். அவர் பேராதனை பல்கலைக்கழக பட்ட படிப்பை நிறைவு செய்கின்ற நாள் நெருங்கி கொண்டிருந்தது.
புஷ்பா நிறைவு ஆண்டு பரீட்சைக்காக 19. 04. 1991 இல் காரைதீவில் இருந்து அரச பேரூந்தில் பேராதனை பல்கலைக்கழகம் நோக்கி பயணித்தார். பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஏராளமானோர் அதில் பயணித்திருந்தனர். இவர்களில் புஷ்பாவின் நெருக்கமான தோழர்களும் அடக்கம். சியம்பலாண்டுவ சந்தியில் உள்ள இராணுவ முகாமில் பஸ் சோதனையிடப்பட்டது. எல்லோரும் புறப்பட்ட நிலையில் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் வைத்து பஸ்ஸை மறித்தவர்கள் புஷ்பாவை பிடித்து கொண்டு சென்றனர்.
புஷ்பா கடத்தி செல்லப்பட்டார் என்று கதை பரவியது. பிடித்து சென்றவர்கள் இராணுவம் என்று பிசுபிசுக்கப்பட்டது. காரைதீவு கிராமம் சோகத்தில் மூழ்கியது. பல் வைத்தியம் தெரிந்த ஒருவரின் சேவை இராணுவத்துக்கு தேவை என்பதாலேயே புஷ்பாவை பிடித்து சென்றனர் என்றும் காற்று வாக்கில் பேச்சுகள் அடிபட்டன. குடும்பத்தினர் புஷ்பாவை கண்டு பிடித்து மீட்பதற்கு பகீரத பிரயத்தனங்கள் மேற்கொண்டார்கள். இன்று வருவார்… நாளை வருவார் என்றெல்லாம் குடும்பத்தினர் வழி மேல் விழி வைத்து காத்திருந்ததுதான் மிச்சம். பெற்றோர் நிரந்தர நோயாளிகளாகி ஒருவர் பின் ஒருவராக இறந்தே போனார்கள்.
புஷ்பாவின் அன்பு சகோதரர்களில் ஒருவரான செல்லையா இராசையா அந்த கால நினைவுகளை எம்முடன் பகிர்ந்து கொண்டார். அன்றைய ஜனாதிபதி ஆர், பிரேமதாஸ முதல் ஜனாதிபதிகளுக்கு முறைப்பாடுகள் செய்தும், சர்வதேச மனித உரிமைகள் ஸ்தாபனம், செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகளுக்கு தகவல்கள் வழங்கியும், ஜனாதிபதி ஆணை குழுக்களுக்கு வாக்குமூலம், சாட்சியம் கொடுத்தும், காணமல் ஆக்கப்பட்டோர் சங்கம் ஊடாக போராட்டம் நடத்தியும் கண்மணி புஷ்பாவை கண்டு பிடிக்க முடியாமல் போய் விட்டது என்று கண்கள் கலங்க கூறினார். புஷ்பா இராணுவத்தால் வழி மறித்து கடத்தப்பட்டார் என்று அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பாராளுமன்றத்தில் காரசாரமான உரை ஆற்றினார். வீரகேசரி உள்ளிட்ட தேசிய பத்திரிகைகளில் அது உரிய முக்கியத்துவத்துடன் கொட்டை எழுத்துகளில் பிரசுரமானது. ஆனால் அவ்வாறு ஒரு கைது நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கவே என்று சொல்லி பாதுகாப்பு தரப்பு கை விரித்தது.
செல்லையா இராசையா அந்த காலங்களில் தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தார். அண்ணன் அமிர்தலிங்கம், முடிசூடா மன்னன் இராஜதுரை, கவிஞர் காசி ஆனந்தன் என்று தமிழர்களால் சிலாகிக்கப்படுகின்ற தலைவர்களுடன் சேர்ந்து பாத யாத்திரைகளில் ஈடுபட்டவர். காரைதீவு ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் கோட்டையாக விளங்கியது. தொழினுட்ப உத்தியோகத்தரான செல்லையா இராசையா அரசாங்க கடமையின் நிமித்தம் வடக்கில் பணியாற்றி கொண்டிருந்தபோதிலும் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவராக அறியப்பட்டிருந்தார். இப்பின்னணிகளில்தான் தங்கை புஷ்பா கடத்தப்பட்டாரா? என்றும் சிந்திக்க வேண்டி உள்ளது என்று அவர் எமக்கு தெரிவித்தார்.
செல்லையா இராசையா கிளிநொச்சியில் கடமையாற்றி கொண்டிருந்தபோது 1987 ஆம் ஆண்டு ஆனையிறவில் இராணுவத்தின் சோதனை சாவடியில் வைத்து புலிகள் இயக்க உறுப்பினர் என்கிற சந்தேகத்தில் பிடிக்கப்பட்டு ஐந்து நாட்கள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் வவுனியா யோசெப் முகாமுக்கு மாற்றப்பட்டு அங்கு இரண்டு வாரங்கள் அடைத்து வைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய மனைவி, அவருடைய மேலதிகாரி ஆகியோர் உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க தவறி இருந்தால் காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பார் என்று செல்லையா இராசையா தெரிவித்தார். இருந்தாலும் உடல், உள ரீதியான சித்திரவதைகளில் பாதிப்புகளில் இருந்து அவரால் இன்னமும் விடுபட முடியாமல் உள்ளது என்றார். அவரை முடக்குவதற்கு முயன்று முடியாமல் போன கோபத்தைதான் அவரின் செல்ல தங்கை மீது காட்டியிருக்கின்றனர் என்கிற அவரின் வலுவான சந்தேகத்தை புறக்கணிக்க முடியாதுள்ளது.
அவரின் தங்கையை புலிகள் பிடித்திருந்தால் விடுவிக்க வேண்டும் என்று கோரி புலிகளின் யாழ்ப்பாண தலைமை காரியாலயத்துக்கு கடிதம் அனுப்பி இருந்தார் என்றும் ஆனால் அவ்வாறு அவர்கள் செய்திருக்கவில்லை என்று புலிகளின் யாழ்ப்பாண தலைமை காரியாலயம் எழுத்துமூலம் பதில் அனுப்பியது என்றும் தெரிவித்த செல்லையா இராசையா அவ்வாறு எழுத்துமூல உத்தரவாதத்தை பாதுகாப்பு தரப்பு தந்திருக்கவில்லை என்றார்.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சான்றிதழை தங்கைக்காக பெறவில்லையா? என்று நாம் வினவியபோது இனம் தெரியாத நபர்களால் காணாமல் ஆக்கப்பட்டார் என்றுதான் சான்றுப்படுத்தி தர முடியும் என்று அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர் என்றும் அதனால் அச்சான்றிதழை பெற விரும்பவில்லை என்றும் செல்லையா இராசையா கோபத்தை கொட்டினார். சியாம்பலாண்டுவ சந்தியில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகில் வைத்து முன்னரும் பலர் பிடித்து செல்லப்பட்டிருக்கிறார்கள், இலங்கை போக்குவரத்து சபை சாரதி ஒருவர், அட்டப்பள்ளத்தை சேர்ந்த கிராம சேவையாளர் ஒருவர் ஆகியோரை குறிப்பிட்டு சொல்ல முடியும், அவர்களை குறித்தும் இது வரை எந்த தகவலும் இல்லை, புஷ்பா கடத்தப்பட்டமையை நேரில் கண்ட உயிருள்ள சாட்சிகளில் ஒருவரான புஷ்பாவின் மிக நெருக்கமான தோழி கல்முனையில் தனியார் பல் சிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார் என்று முன்வைத்தார் செல்லையா இராசையா.
நீங்கள் நஷ்ட ஈடு பெற முயலவில்லையா? என்று கேட்டபோது அப்போதைய கால பகுதியிலேயே 500,000 இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடு அரசாங்கத்திடம் இருந்து பெற்று தருவார் என்று தமிழ் அமைச்சர் ஒருவர் உத்தரவாதம் வழங்கி இருந்தார் என்றும் ஆனால் தங்கையின் உயிர் விலை மதிப்பற்றது என்பதால் அந்த அமைச்சருக்கு பின்னால் செல்லவில்லை என்றும் செல்லையா இராசையா குறிப்பிட்டார்.
ஆனால் செல்லையா இராசையாவின் சிந்தனையில் குடும்பத்தினர் மற்றும் உறவுகள் ஒன்று சேர்ந்த விலை மதிப்பற்ற மகத்தான காரியம் ஒன்றை செய்துள்ளார்கள். அது என்னவென்றால் காணாமல் ஆக்கப்பட்ட புஷ்பாவின் பெயரில் புஷ்பா பொருளாதார கல்வி சமூக அபிவிருத்தி அமைப்பு என்கிற பொதுநல அமைப்பை 2009 இல் உருவாக்கி இந்நாட்டின் எல்லா சமூகங்களையும் சேர்ந்த மக்களுக்கும் பொதுநல சேவைகளை வழங்கி வருகின்றார்கள். காரைதீவை சேர்ந்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் பொதுவாக தேசிய நல்லிணக்கத்துக்கு குறிப்பாக தமிழ் – முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்ட நிலையில் இதை குறிக்கின்ற வகையில் உலகிலேயே மிக உயரமான சுவாமி விபுலாநந்தர் சிலை காரைதீவு பிரதான வீதியில் முச்சந்தியில் புஷ்பா பொருளாதார கல்வி சமூக அபிவிருத்தி அமைப்பால் 2016 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட திருகோணமலை மாவட்டத்தின் மூதூரை சேர்ந்த றிஸானா நபீக்கின் குடும்பத்தை முதன்முதல் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி நிதி அன்பளிப்பு வழங்கியதும் புஷ்பா பொருளாதார கல்வி சமூக அபிவிருத்தி அமைப்புதான். கல்வி மற்றும் உயர் கல்வி கற்க வழி அற்ற மாணவர்களுக்கு இவ்வமைப்பு நிதி உதவிகளை வழங்கி வருகின்றது. சாதனை மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கின்றது, விசேடமாக பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுக்கின்றது. உயர் கல்வி கற்று கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட செல்லையா புஷ்பராணி புஷ்பா பொருளாதார கல்வி சமூக அபிவிருத்தி மூலமாக காலத்தை கடந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார். பூக்கள் கடவுளின் ஆசிர்வாதத்தை பெற்றவை.