இன்றைய நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டங்கள் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, என இன்றும் தீர்வு இன்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. வீதியோரத்தில் தற்காலிக கொட்டகை அமைத்து போராட்டத்தை ஆரம்பித்த மக்கள் இரவு, பகல், மழை, வெயில் என பாராது பல நாட்களாக அந்த கொட்டகைகளிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வாகன இரைச்சல்கள், வீட்டில் உள்ள ஏனைய உறவுகளையும் பிரிந்து போராட்ட களத்தில் இருக்கின்றமை, நீதி கிடைக்குமா என்ற ஏக்கம், அரசியல்வாதிகளின் போலி வாக்குறுதிகள், காலநிலைத் தாக்கம், சூழல் பாதிப்புக்கள், தொடர் விசாரணைகள் என்பவற்றால் நாளாந்தம் அந்த மக்கள் உடல், உள ரீதியாக பாதிப்படைந்து மிகவும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இப்போராட்ட களத்தில் உள்ள தாய்மாரில் அதிகமானவர்கள் வயது முதிர்ந்தவர்கள். அவர்களது உடல் தொடர் போராட்டத்தால் இன்னும் மோசமடைந்து வருகின்றது. இன்னும் சில தாய்மார் போராட்ட களத்திலேயே மடிந்தும் உள்ளனர். இந்த நிலையில் சர்வதேச அழுத்தம் காரணமாக கொண்டுவரப்பட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர்
தொடர்பான அலுவலகமும் போட்ட களத்தில் உள்ள தாய்மாருக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. அந்த அலுவலகம் சர்வதேசத்தை திருப்திப்படுத்துவதற்கான ஒரு நகர்வே தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தையோ அல்லது தீர்வையோ வழங்கக் கூடிய வகையில் அமையவில்லை என்பது அந்த மக்களின் குரலாக உள்ளது.
இந்த நிலையில் அந்த மக்களுக்கு ஆறுதலாகவும், உறுதுணையாகவும் இருந்து அவர்களது கோரிக்கையை வலுப்படுதி தீர்வைப் பெற அழுத்தம் கொடுக்க வேண்டிய தமிழ் அரசியல் தலைமைகள் அதனை கண்டு கொள்ளாமல் போகின்றார்கள் . இதன் காரணமாக தமிழ் தலைமைகள் மீதும் மக்கள் அதிருப்தியடைந்து. அவர்களும் அந்த மக்களிடம் இருந்தும்,
அவர்களது மனங்களில் இருந்தும் காணாமல் போகிறார்கள்.
இந்தநிலையில், உள்நாட்டில் நம்பிக்கையிழந்த பாதிக்கப்பட்ட அந்த தாய்மார் தமது நியாயமான கோரிக்கை தொடர்பிலும், நீதியான போராட்டம் தொடர்பிலும் நேரடியாக ஜெனீவா வரை சென்றும் முறையிட்டுள்ளனர். அந்த தாய்மாரின் நிலமையை புரிந்து
மனச்சாட்சியுடனும், இதய சுத்திடனும் சர்வதேச சமூகம் அணுக வேண்டும். அவர்களால் வழங்கப்படக் கூடிய அழுத்தங்களின் மூலம் அந்த மக்களுக்கான ஒரு நீதியை பெற முடியும் என்ற நிலையே தற்போது உருவாகியுள்ளது. இதனைப் புரிந்து அனைத்து தரப்புக்களும் இணைந்து பாதிக்கப்பட்ட அந்த தாய்மாருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க ஒன்றுபட முன்வரவேண்டும். தம் வாழ்வை தொலைத்தவர்கள் மீது தமிழர் அரசியல் துன்புறுத்தல்களை மேற்கொள்ளப் போகிறதா, என்ற கேள்வியுடன் இருக்கின்றது.
தமிழர் தாயகமெங்கும் தமது உறவுகளை தொலைத்த பல்லாயிரக்கணக்கான பெற்றோர்கள், ஆயிரக்கணக்கான இளம் பெண்கள், நூற்றுக்கணக்கான குழந்தைகள் தங்களுடைய பிள்ளைகள், கணவன்மார், தாய் மற்றும் தந்தைகளை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதிற்குப் பிறகு, 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்றும் அவர்கள் வாழ்க்கை கண்ணீரிலும் சோற்றிலும் காலக்குறைதலின் இடர்பாடுகளிலேயே சுழல்கின்றது. மகிழ்ச்சியும், நிம்மதியும், எதிர்கால கனவுகளும் இழந்த நிலையில், மனிதராக எங்கள் சக சமூகத்துடன் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.
தாம் சார்ந்த இனமும் நிலமும் எதிர்கால சந்ததியும் இனிமையும் மகிழ்ச்சியும் பெற வேண்டும் என்பதற்காகப் போராடிய அவர்களுக்கு இறுதியில் அன்பும் வாழ்வும் கைகூடாமல் உயிர்வாழ்வுக்கான உந்துதலோடு மீண்டும் உறுதிகொண்டிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. செம்மலை புதைகுழி உள்ளிட்ட பல்வேறு புதைகுழிகளில் உயிரோடு மூடப்பட்ட உயிர்களின் உணர்வுகளை எந்த இதயம் தாங்கிக் கொள்வது? இத்தகைய கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்த அந்தப் பெற்றோர்களின் போராட்டம் நெஞ்சை கலங்கச்செய்வதோடு, மனித குலத்தின் சிந்தனையையும் கேள்வி எழுப்புகிறது.
யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு கிடைக்காத நிலையே தொடர்கிறது. யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலும், யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியிலும் பலர் காணாமல் போகச் செய்யப்பட்டார்கள். இராணுவ சுற்றுவளைப்புக்களின் போதும், பொலிஸ் மற்றும் புலனாய்வுத்துறையின் செயற்பாடுகளின் போதும் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். அத்துடன், இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இராணுவத்தினரதும், அரசாங்கத்தினதும் கோரிக்கைக்கு
அமைவாக விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பலர் சரணடைந்திருந்தார்கள். இன்னும் சிலர் பலர் முன்னிலையில் அவர்களது குடும்ப உறுப்பினர்களால் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டனர். முன்னைய மஹிந்த அரசாங்கம் சரணடைந்த மற்றும் கையளிக்கப்பட்ட 12 ஆயிரம் வரையிலான விடுதலைப் புலி உறுப்பினர்களை
புனர்வாழ்வளித்து விடுதலை செய்திருந்தது. சரணடைந்த மற்றும் கையளிக்கபட்ட இன்னும் சிலர் காணாமல் போயிருந்தனர். இராணுவ புனர்வாழ்வு நிலையங்களில் இருப்பதாக ஆதாரங்கள் வெளியாகி இருந்த சிலரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தமது பிள்ளைகள் எப்போது வருவார்கள்..?, தமது
கணவனமார் எப்போது வருவார்கள்…?, தன்னுடைய அப்பா எப்போது வருவார்..?, தன்னுடைய சகோதரர்கள் எப்போது வருவார்கள்…? என போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
வன்னியில் இருந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்களின் ஒருவரின் கருத்து “நான் வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவணிதா, நாங்கள், உண்மை மற்றும் நீதிக்காக 2,800 நாட்களுக்கு மேலாக இடைவிடாத முயற்சியில் ஒன்றுபட்டு நிற்கிறோம். 2009 மூன்றாம் மாதம் நான்காம் தேதி தான் எனது மகள் காசிப்பிள்ளை ஜெரோனி கடத்தப்பட்டார் நாங்கள் இரட்டை வாய்க்காலில் இருந்து மாத்தலன் நோக்கி சென்று கொண்டிருக்கும்போது இடையில் வைத்து என்னையும் எனது மகளையும் பிடித்தார்கள், நான் எனது மகளை அவர்களிடம் விட்டுக் கொடுக்கவில்லை ஏனெனில் அவர்கள் ராணுவமா என தெரியவில்லை ஏனெனில் கருப்பு உடை அணிந்து கருப்பு துணியில் முகத்தை மூடி இருந்தார்கள். அவரது வாகனத்தை அவதானிக்கும் போது பல பெண் பிள்ளைகள் இருந்தார்கள், அதனால் எனது மகளை தனியாக விடாமல் நானும் அவர்களுடன் அவர்களது வாகனத்தில் மாத்தலனை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது ஒரு வயல் வெளியில், ஒரு பக்கம் கடற்கரை மற்ற பக்கம் வயல்வெளி அதில் என்னை வீழ்த்திவிட்டு விட்டு, சப்பாத்து காலால் என்னை உதைந்து விட்டு மகளை அழைத்துச் சென்று விட்டார்கள். நான் அப்படியே தலைசுற்றி விழுந்து விட்டேன் நிமிர்நது பார்க்கும்போது அந்த வாகனம் மிகத் தூரமாக சென்றுவிட்டது. எனது கணவர் நாங்கள் சென்ற இடத்தை தெரிந்து கொண்டு தேடி வந்தார், அவரிடம் நடந்தவற்றை கூறி அழுதேன். ஐந்தாம் மாதம் பதினேழாம் தேதிகளில் எங்களிடம் வந்து உடனடியாக வாகனத்தில் ஏறச் சொல்லி அழைத்தார்கள் நான் வரமாட்டேன் எனக் கூறிய போது நமது பிள்ளைகளை மட்டு வாய்க்கால் அப்பால் தான் கொண்டு சென்றுள்ளோம் நீங்கள் வாருங்கள் காட்டுகின்றோம் எனக் கூறினார்கள் அழைத்துச் சென்று வவுனியா செட்டிக்குளம் ராமநாதன் முகாமில் விட்டார்கள், அதன் பின்னரும் எனது மகளைத் தேடிக் கொண்டுதான் இருந்தேன். 2009 டிசம்பர் மாதம் எங்களை மீண்டும் எமது இடத்தில் கொண்டு வந்து விட்டார்கள். விடும்போது எனது மகளை கேட்டு அவர்களிடம் அழுதேன் அழும் போது சில ராணுவ வீரர்கள் அவர் புணர்வாழ்வழிக்கப்பட்டு வருவார்கள் என கூறினார்கள். ஆனாலும் எனக்கு அதில் நம்பிக்கை இல்லாமல் நான் எனது மகளை அன்று தொடக்கம் தேடிக்கொண்டிருந்தேன். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தார், அப்பொழுது ஒரு பத்திரிகையில் எனது மகள் ஜனாதிபதிக்கு அருகில் பாடசாலை சீறுடையுடன் இருக்கும் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது.
அவள் உயிருடன் இருப்பதை பார்த்தேன், பார்த்து விட்ட பின்பு தான் நான் போராட்டத்தை ஆரம்பித்தேன். நான் அவரை நேரில் சந்தித்து கதைத்த போது அவர் எனது மகளை விசாரித்து விட்டு என்னிடம் அழைத்து வந்து விடுவதாக கூறினர். 2017 ஆம் ஆண்டு அளவில் எனது வீட்டிற்கு எனது மகளை அடையாளம் காண்பதற்காக ஜனாதிபதி செயலகத்திலிருந்து இரண்டு பேர் வருகை தந்திருந்தார்கள். வருகை தந்தவர்கள் எனது மகளுக்கும் எங்கள் குடும்பத்துக்குமான அனைத்து தொடர்புகளும் உறவுகளும் பொருந்துகின்றது எனக் கூறி சென்றார்கள், அத்துடன் இரண்டு கிழமைகளில் எனது மகளை கொண்டு வந்து விடுவதாக கூறிச் சென்றார்கள், ஆனால் இன்று வரை எனது மகளை நான் பார்க்கவில்லை, எனது மகள் உயிருடன் தான் இருக்கிறார், ஆனால் ஒரு சில கதைகள் எனது மகள் உகண்டாவில் உள்ளார் என்றும் அவருடன் சேர்த்து 365 பேரை தாம் வைத்திருக்கிறார்கள் என்றும் சில தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது. இன்று வரை நாங்கள் இந்த போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம் எதுவிதமான பதிலும்கிடைப்பதாக இல்லை.
30,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர், இது இனப் போருக்கு முன்னும், பின்னும், பின்னரும் நமது இனத்தை பாதித்த வேதனையான உண்மையாகும். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக, இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்
தடைச் சட்டத்தை (PTA) தமிழ் இளைஞர்களுக்கு எதிரான ஆயுதமாகப் பிரயோகித்து, எமது இனத்திற்கு அச்சத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் நீண்டகால இருப்பு அச்சத்தின் சூழலை நிலைநிறுத்தியுள்ளது, இது தமிழ் மக்களை
திட்டமிட்ட இலக்கு வைக்கும் ஒடுக்குமுறைக் கருவியாகும்.
பதினைந்து வருடமாக கலங்கிய விழிகளும் உடைந்துபோன இதயத்துடன் இன்னும் உயிரோடு பிள்ளைகளுக்காய், கணவனுக்காய், அப்பாவிற்காய் என்று அலைந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு என்ன நீதியை கொடுத்து விட்டிருக்கிறது இந்த உலகம் .
உடைந்துபோய், மனம் முழுக்க ரணமாக மாற்றமுடியா அழுகையோடும் ஏக்கத்தோடும் அலைந்து கொண்டிருக்கும் எங்கள் பெண்களுக்கு என்ன விடை கிடைக்கும்? நெஞ்சு வெடித்து அழுவது மட்டுமே அவரகளிடம் உள்ள ஆற்றுப்படுத்தல் . எத்தனை நாட்கள் அவர்கள் இப்படியே புலம்பிப் புலம்பித்திரிவது. எங்கிருக்கிறானோ பிள்ளை எப்படி வரப்போகிறாரோ மனுசன் ? என்னை வந்து பாப்பாரோ அப்பா என்றும் குழந்தை மனதாய் குமுறிக்றொண்டிருக்கும் உறவுகளின் வலிகளும் வேதனைகளும் தீராதா ?