மனுவல் உதயச்சந்திரா, வீட்டில் ஒவ்வொரு உணவு வேளையிலும், கடந்த 16 வருடங்களுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட தனது புதல்வருக்காக ஒரு கிண்ணத்தில் உணவு பரிமாறி வைப்பதை இன்றும் வழக்கமாகக் கொண்டுள்ளார். தான் வீட்டில் இல்லாத போதும் தனது மகள், மகளின் பிள்ளைகள் இவ்வாறு உணவை பரிமாறி வைப்பார்கள் என்கிறார் உதயச்சந்திரா.
இந்தக் கதையை எழுதுவதற்காக அவரை நான் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது கத்தரிக்காய் கறியும், சோறும் சமைத்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனுக்கும் ஒரு கிண்ணத்தில் பரிமாறி வைத்துவிட்டு தானும் தனது கணவரும் உண்ட கதையை என்னுடன் பகிர அவர் மறக்கவில்லை.
“இன்று கத்தரிக்காய் கறி காய்ச்சு சோறு சாப்பிட்டுவிட்டு இருக்கின்றோம். கஷ்டமாகத்தான் இருக்கு,” என்கிறார், மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவியும், காணாமல் ஆக்கப்பட்ட, 24 வயதுடைய தன்னுடைய புதல்வரான அன்ரன் சனிஸ்ரன் பிகிறாடோவுக்கு என்ன நடந்தது என அறியாது பரிதவிக்கும் தாயுமான மனுவெல் உதயச்சந்திரா.
வீட்டிலும் கிராமத்திலும் ஜெசிந்தன் என அறியப்பட்ட உதயச்சந்திராவின் புதல்வரான அன்ரன் சனிஸ்ரன் பிகிறாடோ கடற்றொழில் செய்து வந்துள்ளார். வீட்டின் ஒரே வருமான மூலமாக இருந்த அவரை, அவரது மோட்டார் சைக்கிளியே கடற்படை அதிகாரிகள் கடந்த 2008ஆம் ஆண்டு பிற்பகுதியில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் இரவு வேளையில் விசாரணைக்கென அழைத்துச் சென்றுள்ளனர்.
“2008ஆம் ஆண்டு செப்டெம்பர் 12ஆம் திகதி இரவு தூங்கிக்கொண்டிருந்த பிள்ளையை இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றார்கள். அவரது மோட்டார் சைக்கிளில்தான் அழைத்துச் சென்றார்கள். விசாரணக்கு என அழைத்துச் சென்றார்கள். அதன் பின்னர் இதுவரையிலும் வீதியில் நின்று தேடிக்கொண்டிருக்கின்றோம்.” என்கிறார் உதயச்சந்திரா.
தலைமன்னார் கடற்படை முகாமில் தனது நண்பனின் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அறிந்த ஜெசிந்தனின் நண்பர் ஒருவர் இது தொடர்பில் தாய்க்கு அறிவித்துள்ளார். தகவலையடுத்து முகாமுக்கு விரைந்த தாய்க்கு ஏமாற்றமே மிஞ்சியது. தன்னுடைய பிள்ளையின் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறித்து தாய் உதயச்சந்திரா முகாம் அதிகாரிகளுக்கு குறிப்பிட்டபோது விசாரணைக்காக அழைத்து வந்ததாகவும் திருப்பி அனுப்புவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். எனினும் இதுவரை அவர் வீடு திரும்பவில்லை.
“மகனுடைய மோட்டார் சைக்கிள் தலைமன்னார் நேவி கேம்பில் (கடற்படை முகாம்) நிற்பதாகவும் அதனைத் தான் கண்டதாகவும் 2009ஆம் ஆண்டு என் மகனின் நண்பர் ஒருவர் எனக்குச் சொன்னார். பைக்கின் நம்பர் யூஜே – 4890. இந்த பைக் நேவி கேம்பில் நின்றதை தான் கண்டதாக சொன்னார். நான் போய் பார்த்தேன். எனினும் தூரத்தில் நின்றதால் என்னால் பைக்கின் இலக்கத்தை குறிப்பெடுக்க முடியாமல் போய்விட்டது. அப்போது என் மகனின் நண்பர் இது ஜெசிந்தனின் சைக்கிள்தான் என்று சொன்னார் . அப்போது நான் நேவி கேம்பில் கதைத்தேன். எனினும் அவர்கள் இங்கு கூட்டிவரவில்லை என்று கூறினார்கள். அப்போது நான் சொன்னேன். அங்கு நிற்பது எங்களுடைய பைக்தான் என்றேன். அப்போது அவர்கள் சொன்னார்கள் விசாரணை செய்துவிட்டு விட்விடுவோம் என்றார்கள். இன்று வரையிலும் அவர் வரவில்லை.”
விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட தனது மகன் தொடர்பில் மறு தினமே (12 செப்டெம்பர் 2008) பொலிஸில் முறைப்பாடு செய்த மனுவல் உதயச்சந்திரா, இன்று வரை பல்வேறு இடங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளார், எனினும் எவ்வித பிரயோசமுனம் இல்லை. தன்னுடைய மகனை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற ஒரே நோக்கில் ஊரில் ஏமாற்றுக்காரர்களிடம் பணத்தையும் கொடுத்து ஏமாந்துள்ளார் உதயச்சந்திரா.
பொலிஸ் முதல் ஓஎம்பி வரையில் என்னுடைய பதிவு இருக்கு. எல்லா இடமும் பதிவு செய்திருக்கின்றேன். பூசா வரை தேடியிருக்கின்றேன். காசுகளை கொடுத்து ஏமாந்து இருக்கின்றேன்.
காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளைக்காக மாத்திரமன்றி வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் தொடர் போராட்டத்தில் ஓயாது குரல் கொடுத்து வருகின்றார் அன்னை உதயச்சந்திரா.
“காணாமலாக்கப்பட்ட பிள்ளைகள் மற்றும் உறவுகளுக்காகவே, உறவுகளாகிய நாங்கள் இன்று வீதியில் இறங்கி கண்ணீர் சிந்திப்போராடி வருகிறோம், இதற்கு சர்வதேசம் நீதியைப் பெற்றுத் தர வேண்டும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக அம்மாக்கள் இன்று சுமார் 2500 நாட்களாக வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். உயிரோடு ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகளை மீட்கவே இன்று வீதியில் இறங்கிப் போராடுகின்றோம். நாங்கள் இறப்பதற்கு முன் எமது பிள்ளைகளின் நிலை என்ன என்று எமக்குத் தெரிய வேண்டும்.” என்கிறார் அவர்.
நாட்டில் காணப்படும் தமிழர்களுக்கான பாதுகாப்பற்ற சூழல், அச்சுறுத்தல்கள் மற்றும் அச்சம் காரணமாக தன்னுடைய மற்றுமொரு ஆண் பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்பிய விடயத்தையும் பகிர்ந்தார் சந்திரா.
“அப்பாவுக்கு (கணவருக்கு) இயலாது. மகன்தான் உழைத்தார். அவரை மீண்டும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கின்றமை, அச்சுறுத்துகின்றமை போன்ற காரணங்களுக்காக அவரை வேறு நாட்டுக்கு அனுப்பியுள்ளோம்.”
தன்னுடைய ஒரு பிள்ளைக்கு என்னவானது எனத் தெரியாது, மற்றுமொரு பிள்ளை பிரிந்து சென்று எங்கோ ஒரு தேசத்தில் வாழ்கிறது. இவ்வாறு பெற்றப் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ முடியாது பல்வேறு கஷ்டங்களை அனுபவிக்கும் உதயச்சந்திரா மற்றும் அவரது கணவர் ஆகியோர் என்றோ ஒருநாள் விடிவு பிறக்கும் என நம்புகின்றனர். தன்னுடைய பிள்ளை இருந்திருந்தால் இன்று அவர் தனது காதலியை கரம் பிடித்திருப்பார். நாங்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்போம் என்கிறார் அந்த ஏழைத் தாய்.
“அவர் 24 வயதில் காணாமல் போனவர். அவர்தான் மூத்த ஆண் பிள்ளை. இருந்திருந்தால் என்னை பார்த்திருப்பார். அவர் இருந்திருந்தால் இன்று 40 வயது. தனக்கென ஒரு வாழ்க்கையை தேடியிருப்பார். அவரது காதல் பள்ளிக்கூட காதல். இன்று திருமணம் முடித்திருப்பார்.”
கடந்த 16 வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய மகனை விசாரணைக்கு என அழைத்துச் சென்றவர்கள் அவரை கொலை செய்திருந்தால்கூட இன்று மனம் சற்று அமைதி அடைந்திருக்கும் என, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார் உதயச்சந்திரா. இன்று அவருக்கு என்ன நடந்தது எனத் தெரியாமல் தாம் படும் துயரத்தை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது என்கிறார் அவர்.
“நாங்கள் வசதி படைத்தவர்கள் அல்ல. இவர்களை (பிள்ளைகளை) நம்பிதான் நாங்கள் இருந்தோம். ஒரு கனவு மாதிரி நடந்து முடிந்தது. சுட்டுப்போட்டுவிட்டு சென்றிருந்தால்கூட என்னமோ நடந்துவிட்டது. அவன் செத்திட்டான். அவருக்கு செய்ய வேண்டியதெல்லாத்தையும் செய்துவிட்டு போயிருப்போம். மன உளைச்சல் ஏதும் இருந்திருக்காது.”
உதயச்சந்திரா போன்று வடக்கு, கிழக்கில் ஆயிரக்கணக்கான தாய்மார் தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு விடை தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளபோதிலும் அதற்கான பதிலை உரியவர்கள் வழங்குவதாக இல்லை. எதிர்காலத்திலும் கிடைக்குமா எனத் தெரியவில்லை. எனினும் இந்த தாய்மாரின் போராட்டம் தொடரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.