சீதுவ ரத்தொலுகம சந்தியில் காணாமற்போனோருக்கான நினைவுச் சின்னம் இலங்கையின் நிலைமாறுகால நீதி வரலாற்றில் ஒரு முக்கிய அடையாளமாகும். இது 34 ஆண்டுகளுக்கு முன்பு 1990 இல் உருவாக்கப்பட்டது. 1991 ஆம் ஆண்டு அக்டோபர் 27 முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும், 1989 ஆம் ஆண்டு பயங்கரவாத காலத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மட்டுமல்லாது, 30 வருட யுத்தத்தின் போது காணாமல் போனவர்களின் உறவினர்களும் இங்கு வந்து, இந்த நினைவுச் சின்னத்தின் அருகில் நினைவு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.

1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழிலாளியான எச். எம். ரஞ்சித் போலீசாரால் கடத்தப்பட்டு சீதுவ போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மறுநாள் ரந்தொழுகம சந்தியில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருந்தார். பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட ரஞ்சித், ஒழுக்காற்று விசாரணைக்காக லயனல் என்ற தொழிலாளர் சட்ட ஆலோசகருடன் பணிபுரிந்த நிறுவனத்திற்குச் சென்று, மாலை 5 மணியளவில் தங்குமிடத்திற்குத் திரும்பும் போது கட்டுநாயக்கா 18ம் கட்டை பகுதியில் வைத்து கடத்தப்பட்டார். சுதந்திர வர்த்தக வலயத்தில் 11 தொழிலாளர்கள் இவ்வாறு கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர்.

ரஞ்சித்தின் காதலி ஜெயந்தி தங்தேனி. இவர் நடத்திய ரஞ்சித்தை தேடும் போராட்டத்தில் சமூக ஆர்வலர் பிரிட்டோ பெர்னாண்டோ, சகோதரர்  சரத் இத்தமல்கொட, சகோதரி கிறிஸ்டின், பிலிப் திஸாநாயக்க உள்ளிட்ட பலர் ஈடுபட்டனர். அதேநேரம் கொலைகள், காணாமல் போன சம்பவங்களில் பல அமைப்புகள் தலையிட்டன. பின்னர், ஜெயந்தி தங்தேனியா உள்ளிட்டவர்கள் சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர் சங்கத்தை நிறுவினர். நிவேகா என்ற நாளிதழையும் வெளியிடத் தொடங்கினார்கள். அவர்களின் கோரிக்கைகளில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களுக்கு நீதி வேண்டும் என்பதும் காணப்பட்டது. அதற்காக அந்த மக்களின் குடும்பத்தினர் ஒன்றிணைந்து போராட்டங்கள், நினைவேந்தல் போன்றவற்றை ஏற்பாடு செய்து செயற்பட்டனர். காணாமல் போனவர்களின் குடும்பம் என்ற அமைப்பு அவ்வாறுதான் தொடங்கியது. ரஞ்சித் மற்றும் லயனல் கொல்லப்பட்ட இடத்தில் ஒக்டோபர் 27 ஆம் திகதி வருடாந்த நினைவேந்தல் அவ்வாறே ஆரம்பமானது. பின்னர், ஆசிய மனித உரிமைகள் மையம் மற்றும் பிற அமைப்புகளின் ஒத்துழைப்புடன் அந்த இடத்தில் நினைவுப் பலகை எழுப்பப்பட்டது. இந்தப்பலகை டிசம்பர் மதம் 10 , 1999 ல் உருவாக்கப்பட்டு பெப்ரவரி மாதம் 04,2000 ம் ஆண்டு அன்று திறந்து வைக்கப்பட்டது.

“இலங்கையில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் படுகொலைகளை நினைவுகூரும் வகையில் கட்டப்பட்ட முதல் நினைவுச்சின்னம் இதுவாகும். இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்திலும், காணாமல் போன தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களை நினைவுகூரவும், அவர்களுக்காக மலரஞ்சலி செலுத்தவும் மக்கள் இந்த இடத்திற்கு வருகிறார்கள்,” என்கிறார் ஜெயந்தி தங்தேனியா.

இந்த தகடு, தற்போது அழகியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் பிரபல ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞரான சந்திரகுப்த தேனுவரவால் தானாக முன்வந்து உருவாக்கப்பட்டது. இதற்கு வித்யாபி அகாடமியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தாராளமாக பங்களித்தனர். அவர் 2024 இல் காணாமல் போனவர்களின் 34 ஆவது வருடாந்த நினைவேந்தலில் இவ்வாறு கூறினார்.

‘’ “இந்த நினைவுச்சின்னம் காணாமல் போன மனிதனால் விட்டுச் செல்லப்பட்ட வெற்றிடத்தை   சித்தரிக்கிறது. பின்னால் கண்ணீரின் சுவர் காணப்படுகிறது. எங்களால் கண்டுபிடிக்க முடிந்த காணாமல் போனவர்களின் படங்கள் அங்கு சேகரிக்கப்பட்டுள்ளன. அது முழுமையடையவில்லை. சிலருடைய படங்களை கூட கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் முழுமையடையாமல் உள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்தக் காலப்பகுதியில் காணாமல் போயுள்ளனர். இந்த நினைவுச் சின்னத்துக்கு அரசு சம்பந்தம் இல்லை. இது மக்களால் பாதுகாக்கப்படுகிறது. நாடு முழுவதிலும் இருந்து காணாமல் போனவர்கள் அனைவரும் இங்கு கூடுகிறார்கள். இது காணாமல் போனவர்களுக்கான பொது நினைவிடமாகும். மக்கள் காணாமல் போவது தடுக்கப்பட வேண்டும் என்பதே இந்த நினைவுச்சின்னம் தரும் செய்தியாகும். அத்துடன், காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிவர வேண்டும். அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். காணாமல் போன மனிதர்கள் தங்களுக்குச் சமாதானம் காணும் இடமொன்றைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு அதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காக சில முயற்சிகள் உள்ளன. ஆனால் அந்த முயற்சிகள் தொடர வேண்டும்.”

“நினைவுகூறல் என்பது மனித வாழ்க்கையின் அவசியமான கூறு என்று மனித உரிமை செயற்பாட்டாளர் சுனந்தா தேசப்பிரிய கருத்து தெரிவிக்கிறார். “காணாமல் போனவர்களின் கதி என்னவென்பதை அறியாமல், அவர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்யும் வாய்ப்பை இழந்த எத்தனையோ தலைமுறையினர் நம் சமூகத்தில் வாழ்கின்றனர். இந்த மக்களில் போராளிகள் போன்று  அரசாங்கப் படைகள் மற்றும் காவல்துறை உறுப்பினர்களும் உள்ளனர். அவர்களுடன் தொடர்புடைய உண்மையை வெளிப்படுத்துவதும் அவர்களுக்கான நீதியை நிலைநிறுத்துவதும் அரசின் பொறுப்பாகும். அதேபோல காணாமல் ஆக்கப்படும் செயல்களை முடிவுக்குக் கொண்டு வரவும் வேண்டும்.இந்த நினைவுச்சின்னமும் அதனைச் சுற்றி நடைபெறும் நினைவுகூரலும், அதன் பின்னணியில் நாட்டுக்கும் உலகுக்கும் ஒரு செய்தியை வழங்கும் இடமாக இருக்கின்றன.’’

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள திரு.அனுரகுமார திஸாநாயக்கவும் தனது பால்ய கால உற்ற தோழன் காணாமல் போனமையால் துயரை சுமந்துகொண்டிருக்கும் ஓர்  நபராவார். எனவே, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை முடிவுக்கு கொண்டு வரவும் தேவையான நடவடிக்கைகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் என்ற புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது.

“காணாமல் ஆக்குதல் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு குற்றமாகும். இது மீண்டும் நிகழ விடமாட்டோம்.” என்று சீதுவ ரந்தொழுகம சந்தியில் காணாமல் போனவர்களின் நினைவுச் சின்னத்தில் செதுக்கிய எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது.