“நான் பொட்டு வைப்பேன். தாலி போடுவேன். காரணம் என் கணவருக்கு என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. அவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கைதான் என்னை இன்று வரை போராடச் செய்வதற்கான உந்து சக்தி. பொட்டு, தாலி எனக்கு பாதுகாப்பு. அவர் என்னுடன் இருக்கின்றார் என நான் நம்புகின்றேன்,” என நம்பிக்கைமிகு வார்த்தைகளை வெளிப்படுத்துகின்றார் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அமல்ராஜ் அமலநாயகி.
2009ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தன்னுடைய கணவர் (அமல்ராஜ்) கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட நிலையில், அன்று முதல் அவருக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு விடைதேடி அலையும் தாய் அமலநாயகி தன்னுடைய கணவர் கிடைக்கும்வரை இந்த போராட்டம் தொடரும் என்கிறார். அவர் கிடைப்பார் எனவும் நம்புகின்றார்.
2008 இறுதி
2007ஆம் ஆண்டு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்த மட்டக்களப்பு, படுவான்கரை பிரதேத்தில் இருந்து வெளியேறிய அமலநாயகியின் குடும்பம் 2008ஆம் ஆண்டு இராணுவத்தால் மீள் குடியேற்றப்பட்டது. 2009ஆம் ஆண்டு ஆரம்பத்தில் வடக்கில் மிகக் கொடிய யுத்தம் உயிர்களை பலியெடுத்துக்கொண்டிருந்த நிலையில், இவர்கள் மெது மெதுவாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
“2007ஆம் ஆண்டு படுவான்கரை, ஆயித்தியமலையில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தோம். 2007இல் எங்களை வெளியேறச் சென்னார்கள். அதன் பின்னர் 2008 இறுதிப் பகுதியில் எங்களை இராணுவம் மீள் குடியேற்றம் செய்தது. அதுவரை நாங்கள் மட்டக்களப்பு டவுனில் (நகர்) முகாமில் இருந்தோம். வந்து பார்த்தபோது எல்லாம் அழிந்து போயிருந்தது. மீள் குடியேறிய நாங்கள் வயல் செய்தோம். என்னுடைய கணவர் கால்நடைகளை பேசி விற்பனை செய்யும் தொழிலையும் செய்தார்”.
வயலுக்கு சென்ற கணவர் வீடு திரும்பவில்லை
தான் விதைத்த நெல் வளர்ந்து கதிர் விட்டிருந்த நிலையில், அது அறுவடைக்குத் தயாரா என பார்க்கச் சென்ற அமலநாயகியின் கணவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
“பொலிஸ் ஸ்டேசனுக்கு பின்னுக்கு உள்ள வயலை வெட்ட முடியுமா என்பதை பார்க்கச் சென்றிருந்தார் என் கணவர். பின்னேரம் ஒரு 4 மணியிருக்கும் வயலுக்கு சென்றார். இரண்டு எஸ்டிஎப், தந்தன, தென்னகோன் எனச் சொல்லி, மரப்பாலம் முகாமில் இருந்த விசேட அதிரடிப்படையை சேர்ந்தவர்கள் இவரை சந்தித்துள்ளனர். சின்னபுள்ளுமலையில் உள்ள ஒரு கடையில் இவருடன் கதைத்து டீயெல்லாம் வாங்கித்தரச் சொல்ல, இவரும் வாங்கிக்கொடுத்துள்ளார். அதன் பின்னர் இவரை முன்னால் விட்டுட்டு பின் தொடர்ந்துள்ளனர். அவங்கள் இருந்த முகாமுக்கு முன்னால்தான் எங்கள் வயல் இருந்தது. அவர்கள் இவரை பிடிக்க வேண்டுடுமென்ற எண்ணத்தில் இருந்துள்ளார்கள். ஏனென்றால் இவரை தேடி வாரது, அச்சுறுத்தல் மாதிரி செயற்படுவது, நீ இயக்கத்திற்கு (தமிழீழ விடுதலைப் புலிகள்) சாமான் வாங்கிக்கொடுக்கின்றாய், நீ ஆயுதம் வைத்திருக்கின்றாய் என தொடர்ச்சியாக இவரை அச்சுறுத்தி வந்தனர். ஒரு முறை இவரை ஓட்டோவில் ஏற்றினார்கள். நாங்கள் விடயத்தை அறிந்து மறித்து, கொண்டுப்போகவிடமாட்டோம் எனக்கூறியதால் இறக்கிவிட்டு சென்றார்கள். இரண்டு, மூன்று முறை இவ்வாறு நடந்தது. கொழும்பில் இருந்து தேடி வந்ததால் எனக்கு பயம் வந்துவிட்டது. நானும் அச்சத்தில் அவரை வெளிநாடு செல்லுமாறு கோரினேன். எனக்கு மூன்று பிள்ளைகள். நாங்கள் கொஞ்சம் வசதிதான். டெக்டர் (Tractor) இருந்தது. வயல் இருந்தது. அவரை முதலாளி என்றுதான் சொல்வார்கள்.
பெப்ரவரி 19, 2009
அமலநாயகியின் கணவர், மனைவியின் சொல்லுக்கு செவி சாய்த்து வெளிநாடு செல்ல தீர்மானிக்கின்றார்.
“அவருடைய பாதுகாப்பிற்காக அவரை வெளிநாடு செல்லுமாறு கேட்டுக்கொன்டேன். என்னுடைய கட்டாயத்தில் கடவுச் சீட்டை புதுப்பிக்க கொடுத்தார். இந்த விடயத்தை யாரோ அறிந்துகொண்டார்கள் அல்லது இவர்தான் நண்பர்களிடம் சொல்லியிருக்க வேண்டும். அந்த தகவலை அறிந்தவர்கள் (விசேட அதிரடிப்படையினர்) அவரை தேடி எங்கள் வந்தனர். வயலுக்குள் போனவரை ஒரு அக்காவிடம் ரஞ்சித் எங்கே என கேட்டுள்ளார்கள்? (இவரை ரஞ்சித் என்றுதான் அழைப்பார்கள்) அந்த அக்கா எதற்கு என கேட்க, அவர் தொப்பியை விட்டுவிட்டு சென்றுவிட்டார் அதனைத் திருப்பி தர வேண்டும் எனக் கூறியிருக்கின்றார்கள். அந்த அக்கா அதனை நம்பி வயலுக்குள்தான் அவர் செல்கிறார் என சொல்லியிருக்கின்றார். வயலுக்குள் சென்று அவரை கூட்டிச் சென்றுள்ளனர். அவரது மோட்டார் சைக்கிளை வேறு ஒருவர் எடுத்துக்கொண்டு இவரை அவர்கள் வந்த பைக்கில் ஏற்றிச் சென்றுள்ளனர். இதனை ஒரு பொடியன் கண்டுள்ளான். அவர் நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை என்பதால் தேட ஆரம்பித்தோம். அன்று இருட்டியதால், மறுநாள் காலையில் நான் தேடியபோது அந்த பொடியன் அவரை இருவர் கூட்டிச் சென்ற விடயத்தை எனக்குச் சொன்னான்.”
மரப்பாலம் முகாம்
மரப்பாலம் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் தனது கணவரை தேடிச் சென்ற அமலநாயகியை தரக்குறைவாக நடத்தியதோடு அவரை தாம் அழைத்துவரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
“மரப்பாலம் முகாமில் சென்று நான் கேட்டேன். அவர்கள் நாங்கள் கொண்டுவரவில்லை எனக் குறிப்பிட்டார்கள். எஸ்டிஎப் அதிகாரியிடம், என் கணவரை பிடித்து வைத்திருந்தால் தாருங்கள். அப்படி தவறிழைத்திருந்தால் அவரை சட்டத்திற்கு முன் நிறுத்துங்கள் எனக் கூறினேன். நான் காலில் விழ, என்னை தள்ளி விழுத்தி சப்பாத்துக்காலுடன் உதைத்தார்கள். மனித உரிகைள், ஐசிஆர்சி என பல இடங்களில் முறைப்பாடு செய்தேன். அதன் பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழு, மஹஓயாவிக்கு விசாரணைக்கு வரச் சொன்னார்கள் அங்கும் முறைப்பாடு கொடுத்தேன். வெலிக்கந்தைக்கு வரச்சொன்னார்கள். 2ஆம் மாடி என நான் செல்லாத இடங்களே இல்லை.”
கணவரை தேடும் இந்த தொடர் பயணத்தில் தான் மனதளவில் பெரும் பாதிப்புக்களை சந்தித்ததோடு அதற்காக சிகிச்சைப் பெற்றதாகவும் குறிப்பிடுகின்றார் அமலநாயகி.
“இப்படி இருக்கையில் சாப்பாடு இல்லாம, யோசித்துக்கொண்டே இருப்பதால் எனக்கு மனநோய் மாதிரி வந்துவிட்டது. அப்படி இருந்து. மூத்த பிள்ளை உயர்தரம் படிக்க வேண்டிய நிலைமையில் அவள்தான் என்னை கவனித்துக்கொள்ள வேண்டிய நிலைமை. மற்றவர்கள் சின்ன பிள்ளைகள்தானே, அதன் பின்னர் வைத்தியசாலையில் வைத்திருந்து, மனவள ஆலோசனை எல்லாம் வழங்கிதான் மீண்டு வந்தேன்.”
19 இலட்சத்தை கொடுத்து ஏமாந்த கதை
தம்மை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் என அடையாளப்படுத்திக்கொண்ட இருவர், அமல்ராஜை கண்டுபிடித்து தருவதாகக் கூறி 19 இலட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு தன்னை ஏமாற்றியதாக அமலநாயகி கவலை வெளியிடுகின்றார்.
கொண்டைவெட்டுவான் முகாமில் என் கணவரை வைத்திருப்பதாக சொல்லி காசு தந்தால் விடுவோம் என ரமேஸ் மற்றும் சுரேஸ் என இருவர் என்னிடம் 19 இலட்சம் காசு பெற்றார்கள். அவர்கள் தமிழர்கள்தான். சிஐடிஐ சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்டார்கள், என்னிடம் 19 இலட்சம் பணத்தை ஏமாற்றினார்கள்.
கஷ்டங்கள், ஏமாற்றங்கள், இழப்புகள், உடல் சோர்வு என எவ்வித தடைகள் வந்தாலும் தனது கணவரை தேடும் இந்த கடுமையான பயணத்தை நிறுத்தாத அமலநாயகி, 2012ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதியிலிருந்து அவரைப்போல் உறவுகளைத் தொலைத்த 27 பேருடன் இணைந்து ஒரு குழுவாக, காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடும் பணியை தொடர்கின்றார். அதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப் பிரதேசங்களில் இருந்தும் இவர்களுடன் பல நூறு பேர் வந்து இணைந்துகொள்கின்றனர். அந்த போராட்டம் இன்றும் தொடர்கிறது.
சொத்துக்களை எல்லாம் இழந்த அமலநாயகிக்கு இன்று வாழ்வாதாரமாக திகழ்வது, அவர்கள் வசதியாக வாழ்ந்த காலத்தில் பொழுது போக்காக பயின்ற தையல் கலைதான்.
இலங்கை அரசாங்கம் என்றாவது ஒருநாள் தன்னுடைய கணவரை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் அல்லது அவருக்கு என் நடந்தது என்ற விடயத்தை சொல்லியே ஆகவேண்டும் எனக் கூறும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அமல்ராஜ் அமலநாயகி, இனிமேல் இந்த நிலைமை எவருக்கும் வரக்கூடாது என பிரார்த்திப்பதாக குறிப்பிடுகின்றார்.