– விசேட உளநல மருத்துவர் பிரசாத் மொஹொட்டி
“உளக்காயம் என்பது நமக்கு நடப்பதல்ல, ஆனால் ஓர் பச்சாதாப்படக்கூடிய சாட்சி இல்லாத நிலையில் நாம் கொண்டிருப்பதாகும்.” இது டாக்டர் பெசல் வான் டெர் கோல்க் தொடர்பில் கூறப்படும் உளக்காயம் தொடர்பான அவரது பணியின் சாராம்சத்தை உள்ளடக்குகின்ற ஒரு அறிக்கையாகும்.
உளவியல் உளக்காயமானது உடனடி உடற் காயங்கள் அல்லது புலனாகும் வடுக்களைத் தாண்டி நீண்டுள்ளது. இது தனிநபர்கள் உள்ளத்தில் தாங்கும் உணர்ச்சி மற்றும் உளவியல் அளவினை உள்ளடக்கியதுடன், பெரும்பாலும் பச்சாதாப்படக்கூடிய சாட்சிகள் இல்லாததால் அதிகரிக்கிறது. உளக்காயம் என்பது ஆழ்ந்த தனிப்பட்ட அனுபவம் என்பதுடன், அதன் சிக்கலைப் புரிந்துகொள்வது வினைத்திறனான குணப்படுத்தலுக்கு முக்கியமானதாகும்.
துயரம் மற்றும் சிக்கலான துயரத்தின் தன்மை
துயரம் என்பது இழப்புக்கான இயற்கையான பதிலளிப்பு, ஆனால் எல்லா துயரங்களும் ஒரே மாதிரியானதாக இருக்காது. சாதாரண துயரம் என்பது தனிநபர்கள் தங்களது இழப்பை உணர்ந்து, இறுதியில் அதனை மீறி தொடர்ந்து வாழ்வதற்கான வழிவகையைக் கண்டறியும் ஓர் செயன்முறையை உள்ளடக்கியது. இருப்பினும், வன்முறை மரணங்கள், கடத்தல்கள் அல்லது காணாமல் போனவர்கள் போன்ற சிக்கலான துயரங்கள் பெரும்பாலும் முடிவு பெறுவதில்லை. இந்த வகையான துயரம் நீடித்த மற்றும் தீவிரமான உணர்வுபூர்வமான வலிக்கு வழிவகுத்து, மீட்பை சவாலானதாக ஆக்குகிறது. இது போன்ற சந்தர்ப்பங்களில், முடிவு இல்லாமை மறுப்பு மற்றும் PTSD உள்ளிட்ட பிற கடுமையான உளவியல் நிலைகளில் வெளிப்படும்.
உளக்காயத்திற்கு பின்னரான அழுத்தம் (PTSD)
PTSD என்பது உயிருக்கு அச்சுறுத்தலான நிகழ்வுகளால் தூண்டப்படுகின்ற ஓர் நாட்பட்ட நிலைமையாகும். கடுமையான கோபம், நினைவுகளின் மீட்டல் மற்றும் ஊடுருவி பாதிக்கும் எண்ணங்கள் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். PTSD உள்ள நபர்கள் பெரும்பாலும் உளக்காயத்திற்குரிய நிகழ்வை மீண்டும் மீண்டும் நடப்பது போல் அனுபவிப்பதுடன், இது அவர்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக சீர்குலைக்கின்றது. வினைத்திறனான சிகிச்சைக்கு இந்த அறிகுறிகளைப் பற்றிய விரிவான புரிதல் மற்றும் குணப்படுத்துவதை ஊக்குவிக்கும் ஓர் ஆதரவான சூழல் அவசியமாகின்றது.
இடப்பெயர்வு மற்றும் அடையாளம் தொடர்பான நெருக்கடி
நகரமயமாக்கல், மோதல்கள் அல்லது பிற காரணிகளால் ஏற்படும் இடப்பெயர்வு ஆழமான அடையாளம் தொடர்பான நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும். தனிநபர்கள் தங்களது வாழ்க்கைச் சூழலுடன் ஆழமான உளவியல் தொடர்பினை கொண்டுள்ளனர். ஒருவரின் வீட்டை இழப்பது அல்லது பழக்கமான சூழலில் இருந்து நகர்த்தப்படுவது குறிப்பிடத்தக்க மன உளைச்சல் மற்றும் இடப்பெயர்வு உணர்வை ஏற்படுத்தும். இது பெரும்பாலும் சமூக எழுச்சி மற்றும் இத்தகைய இடப்பெயர்வினைத் தொடர்ந்து வரும் அடையாளம் தொடர்பான போராட்டங்களால் அதிகரிக்கப்படுகிறது.
காலனித்துவத்திற்கு பின்னரான ஆய்வுகள் குறித்த தனது பணிக்காக அறியப்பட்ட இந்திய அரசியல் உளவியலாளரும், சமூகக் கோட்பாட்டாளருமான பேராசிரியர் ஆஷிஸ் நந்தி ஒருவரின் வாழ்க்கைச் சூழலுடனான தொடர்பை இழப்பது எவ்வாறு உளவியல் அழுத்தத்திற்கும் எழுச்சிக்கும் வழிவகுக்கும் என்பதை வலியுறுத்தி, நகரமயமாக்கல், இடப்பெயர்வு மற்றும் உள ஆரோக்கியத்தில் அடையாளம் தொடர்பான நெருக்கடிகளின் தாக்கம் போன்ற கருப்பொருள்களை ஆராய்ந்திருக்கின்றார்.
சமூக பதட்டம் மற்றும் கூட்டு உளக்காயம்
அனர்த்தத்திற்கு பின்னர் சமூகங்கள் அடிக்கடி கூட்டு உளக்காயத்தை அனுபவிப்பதுடன், அங்கு முழு சமூகங்களும் ஒரு உளக்காயத்தை ஏற்படுத்துகின்ற நிகழ்வின் விளைவுகளை அனுபவிக்கின்றன. இந்த கூட்டு உளக்காயமானது அதிகரித்த போதைப்பொருள் துஷ்பிரயோகம், குடும்ப வன்முறை மற்றும் சமூகம் முழுவதும் அவநம்பிக்கை போன்ற பல்வேறு வழிகளில் வெளிப்படும். சமூக ஒற்றுமை அடிக்கடி பலவீனமடைவதுடன், இது பாரம்பரிய குடும்ப கட்டமைப்புகள் மற்றும் சமூக பிணைப்புகளின் முறிவுக்கு வழிவகுக்கிறது.
உளக்காயம் தொடர்பான கட்டமைப்பு ரெனோஸ் பாபடோபௌலோஸ் என்பவரால் 2007 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் எண்ணக்கருவாகும். இந்தக் கட்டமைப்பானது தனிநபர், குடும்பம், சமூகம் மற்றும் சமூக-கலாச்சாரத்தின் பல்வேறு நிலைகளில் ஏற்படும் உளக்காயத்தின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கட்டமைப்பானது உளக்காயம் இந்த நிலைகளை எதிர்மறையாக அல்லது நேர்மறையாக அல்லது தனிநபர், குடும்பம், சமூகம் மற்றும் சமூக-கலாச்சார அடுக்குகளில் எவ்வாறு பாதிக்கிறது என்பதை மதிப்பீடு செய்வதற்காக கட்டமைக்கப்பட்டுள்ளது.
குடும்பக் கட்டமைப்புகளில் உள்நாட்டுச் சண்டையின் தாக்கம் ஆழமானது. மோதல்களின் போது, குழந்தைகள் மற்றும் வாழ்க்கைத் துணைவர்களின் இழப்பானது பொதுவாக துயரமானதுடன், குடும்பங்களை உணர்ச்சி ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் சீர்குலைக்கும். சமூக வகிபாகங்கள் குறிப்பாகப் போரின் சூழலில் மாறும்போது, பெண்கள் அதிகரித்த சுமைகளையும் பொறுப்புகளையும் எதிர்கொள்கின்றனர், இது பாரம்பரிய பால்நிலை வகிபாகங்களை மீள்வடிவமைக்கிறது. மேலும், சமூக மற்றும் குடும்பப் பாதுகாப்பு பலவீனமடைவதால் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பதுடன், இது இளைய உறுப்பினர்களின் பாதிப்புகளை அதிகரிக்கிறது. அற்கோல் துஷ்பிரயோகம் மிகவும் அதிகமாக நிலைபெறுவதுடன், குடும்பம் மற்றும் சமூகப் பிணைப்புகளை கணிசமாகக் குறைக்கிறது. இந்த மாற்றங்கள் அடிப்படை சமூக அலகில் மோதல் ஏற்படுத்தும் ஆழமான மற்றும் மாறுபட்ட தாக்கங்களை பிரதிபலிப்பதுடன், மோதலுக்கு பின்னர் இந்த அடித்தள கட்டமைப்புகளை மீட்டெடுக்க தேவையான விரிவான புனர்வாழ்வு முயற்சிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பரவலான உளவியல் மற்றும் சமூக இடையூறுகள் ஆழமான கூட்டு உளக்காயத்திற்கு இட்டுச் செல்வதுடன், சமுதாயத்திற்குள் அவநம்பிக்கை மற்றும் சந்தேகத்தின் சூழலை வளர்க்கின்றன. இந்த சூழ்நிலையானது உளநல ஆதரவிற்காக மற்றவர்களை சார்ந்து இருப்பதை உருவாக்குவதுடன், தனிப்பட்ட சுதந்திரத்தை சுருக்குவதுடன் குறைவான சமூக ஈடுபாட்டை விளைவாக்குகின்றது. இதன் விளைவாக, சமூகங்கள் செயலற்றதாவதுடன், தலைமைத்துவம் மற்றும் புதிய அரசியல் பிரமுகர்களின் பற்றாக்குறைக்குள்ளாகின்றது. பாரம்பரிய குடும்ப அமைப்புகளின் சிதைவு மற்றும் நிறுவப்பட்ட சமூக விழுமியங்கள் மற்றும் தார்மீக விழுமியங்களின் புறக்கணிப்பு ஆகியவை சமூகத்தின் சிதைவுக்கு மேலும் பங்களிக்கின்றன. கிரீஸ் புத்தம் (ஹரிஹரன், 2011) ஆவணப்படுத்தியபடி, வெகுஜன வெறி மற்றும் தெய்வச் சிலைகள் அழுவது அல்லது ஒளிரும் புத்தர் சிலைகள் நீறு வெளியிடும் மாய நிகழ்வுகள் போன்ற குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் சமூகத்தை பாதிக்கும் ஆழ்ந்த துயரத்தையும் திசைதிருப்பலையும் எடுத்துக்காட்டுகின்றன. இந்த பரவலான சீர்குலைவு சமூக மற்றும் குடும்ப அலகுகளின் அடித்தளத்தை பலவீனப்படுத்துவதுடன், கூட்டு பதட்டத்தின் சுழற்சியை தூண்டுவதுடன், முன்னெச்சரிக்கையாக செயற்படுவதைத் தடுத்து, இதன் மூலம் சமூகத்தின் மீண்டெழுதிறனை தடைசெய்வதுடன் மீட்பு செயன்முறையைத் தடுக்கிறது.
குணப்படுத்துவதற்கான படிகள்
அனர்த்தத்திற்கு பிறகு குணமடைவது என்பது தனிப்பட்ட மற்றும் கூட்டுத் தேவைகளை நிவர்த்தி செய்வதை தேவைப்படுத்துகின்ற ஒரு பன்முக செயன்முறையாகும். இதில் பின்வரும் முக்கிய படிகள் அடங்கும்:
- திறந்த தொடர்பாடலை ஊக்குவித்தல்: தப்பிப்பிழைத்தவர்கள் தங்களது அனுபவங்களைப் பற்றி பேச ஊக்குவிப்பது முக்கியமானதாகும். இது தனிநபர்கள் தங்களின் அதிர்ச்சியைச் செயற்படுத்த உதவுவது மட்டுமல்லாமல் ஆதரவான சமூக சூழலை வளர்க்கின்றது.
- அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்: தப்பிப் பிழைத்தவர்களின் அடிப்படை பௌதீக மற்றும் உளவியல் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வது மீட்புக்கான அடித்தளமாகும். இதில் பாதுகாப்பான தங்குமிடங்கள், மருத்துவ பராமரிப்பு மற்றும் உளவியல் ஆதரவு ஆகியவை உள்ளடங்கும்.
- சமூக தொடர்புகளை மீண்டும் கட்டியெழுப்புதல்: சமூக பிணைப்புகளை வலுப்படுத்துதலும் சமூக உணர்வை வளர்ப்பதும் அவசியமானதாகும். இதனை சமூக ஆதரவு வலையமைப்புகள் மற்றும் சமூகத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் மூலமாக அடைய முடியும்.
- கலாச்சார மற்றும் மத நடைமுறைகள்: கலாச்சார மற்றும் மத சடங்குகளில் ஈடுபடுவது இயல்பான உணர்வை அளிப்பதுடன் தனிநபர்கள் தங்களது உளக்காயத்தை சமாளிக்க உதவும். விளக்குகளை ஏற்றுவது, “பிரித்” ஓதுவது மற்றும் போதி பூஜைகளை நடாத்துவது போன்ற நடைமுறைகள் சமுதாயம் சார்ந்த ஆறுதலையும் தொடர்ச்சிதன்மைக்குரிய உணர்வையும் வழங்குகின்றன.
- உளக்காயத்தின் பின்னரான வளர்ச்சியை வசதிப்படுத்தல்: உளக்காயத்தைத் தொடர்ந்து நேர்மறையான மாற்றங்களை ஊக்குவித்தல் இன்றியமையாததாகும். இவற்றில் எழுத்து, கலை உருவாக்கம், ஆன்மீக வளர்ச்சி மற்றும் சமூக சேவை போன்ற செயற்பாடுகளை ஊக்குவிப்பது ஆகியன உள்ளடங்கும். இத்தகைய நடவடிக்கைகள் அதிர்ச்சிகரமான அனுபவங்களை தனிப்பட்ட மற்றும் சமுதாயம் சார்ந்த விருத்திக்கான வாய்ப்புகளாக உருமாறும்.
சமூகத்தின் வகிபங்கு
குணப்படுத்தும் செயல்பாட்டில் சமூகம் ஒரு குறிப்பிடத்தக்க பொறுப்பை வகிக்கிறது. உளக்காயத்தின் பின்னரான வளர்ச்சி பல்வேறு வழிகளில் ஊக்குவிக்கப்பட வேண்டும் மற்றும் எளிதாக்கப்பட வேண்டும்:
- கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள்: உளக்காயம் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பாதிக்கப்பட்ட நபர்களை சமூகங்கள் நன்கு புரிந்து கொள்ளவும் ஆதரவளிக்கவும் உதவும்.
- ஆதரவுக் கொள்கைகள்: உளநல ஆதரவு மற்றும் உளக்காயத்திலிருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்கு வளங்களை வழங்கும் கொள்கைகளை அமுலாக்குவது மிகவும் முக்கியமானதாகும். இது ஆலோசனை, ஆதரவு குழுக்கள் மற்றும் உளநல சேவைகளுக்கான அணுகல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
- சமூக முன்முயற்சிகள்: சமூக ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டான குணப்படுத்தும் செயன்முறையில் கவனம் செலுத்தும் சமுதாய நிலையங்கள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களை நிறுவுதல் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த முயற்சிகள் உள்வாங்குதலை ஊக்குவிக்க வேண்டியதுடன் தனிநபர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள பாதுகாப்பான இடங்களை வழங்க வேண்டும்.
இரக்கமுள்ள சாட்சிகளின் முக்கியத்துவம்
இறுதியாக, ஒரு அனர்த்தத்திற்கு பிறகு குணப்படுத்துவதற்கான பாதை சிக்கலானதுடன் அதற்கு இரக்கமுள்ள மற்றும் விரிவான அணுகுமுறை அவசியமாகின்றது. நாம் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் காயப்பட்டுள்ளோம், ஒருவருக்கொருவர் பச்சாதாபமுள்ள சாட்சிகளாக மாற முயற்சிக்க வேண்டும். புரிதலை வளர்ப்பதன் மூலமும், ஆதரவை வழங்குவதன் மூலமும், நேர்மறையான வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலமும், தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் தங்களது அதிர்ச்சிகரமான அனுபவங்களிலிருந்து மீண்டு வலுவாக வெளிப்படுவதற்கு உதவ முடியும்.
அதிர்ச்சி மற்றும் குணப்படுத்துதலின் இந்த பல்பரிமாண அம்சங்களைக் கையாள்வதன் மூலமாக, சமூகங்கள் மீண்டெழுதிறனை வளர்க்கலாம் என்பதுடன் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் சமூகங்களை மீட்டெடுக்க வசதிப்படுத்துவதுடன், அனர்த்தத்திற்கு பின்னரான வலுவான, மிகவும் ஒருங்கிணைந்த சமூகக் கட்டமைப்பை ஊக்குவிக்க முடியும்.
யூலை 18, 2024 அன்று மாத்தறையில், நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான மக்கள் ஒன்றுபடுதல் (PUJA) நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நடைபெற்ற விழிப்புணர்வு மாநாட்டின் போது வழங்கப்பட்ட விளக்கக்காட்சியின் அடிப்படையிலானது.