“யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சியில் உள்ள எங்கள் கிராமம் தமிழ் பௌத்தர்களின் கிராமம்” என்கிறார் இலங்கையின் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் பௌத்தரான தர்மா (புனைப்பெயர்). அவரைப் பொறுத்தவரை இந்த கிராமம் பழங்காலத்திலிருந்தே தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்த கிராமம் அல்ல. ஆரம்பத்தில், இது சாதி அமைப்பால் ஒடுக்கப்பட்ட கள்ளு உற்பத்தியாளர்களின் கிராமமாக காணப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் சாதிவெறி அதிகமாக இருந்தது. ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு உணவு,  கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை உரிமைகள் கூட மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

சில கிராமத் தலைவர்கள் சாதி அமைப்பை எதிர்த்துப் பிற பகுதிகளைச் சேர்ந்த பௌத்த பிக்குகளின் உதவியுடன் புத்த மதத்தைத் தழுவினர். இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியதோடு 1960 களில் பௌத்தம் கிராமத்தில் ஆதிக்கம் செலுத்தியது. எனினும் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் ஆட்சிக் காலத்தில் பௌத்த மதத்துடனான அந்த கிராமத்தில் இருந்த தொடர்பு வலுவிழந்து இளைய தலைமுறையினருக்கு அதன் தொடர்பை இழந்தது. போருக்குப் பின்னர், இந்த உறவுகள் புத்துயிர் பெற்று, இளைஞர்கள் தமிழ் பௌத்தத்துடன் மீண்டும் இணையத் தொடங்கினர்.

தமிழ் பௌத்தர்கள் இலங்கையில் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளனர், ஆனால் அவை பெரும்பாலும் வரலாற்றுப் பதிவுகளிலிருந்து தவிர்க்கப்படுகின்றன. பேராசிரியர் ஜி.பி.வி. சோமரத்ன, ‘’ 13 மற்றும் 14 ஆம் நூற்றாண்டுகளில் இலங்கையின் சமூக மற்றும் அரசியல் சூழலின் மாற்றம் பௌத்தம் மற்றும் பிற சமய நம்பிக்கைகளை முக்கியத்துவத்தை பாதித்தது’’ பண்டைய நீர் நாகரிகத்தின் சரிவு மற்றும் தென்மேற்கில் ராஜ்யங்கள் மாறியது தமிழர் பகுதிகளில் பௌத்த இருப்பு வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

கடந்த காலங்களில், பௌத்தம் தமிழ்நாட்டில் குறிப்பாக வட பிராந்தியங்களில் வலுவான செல்வாக்கைக் கொண்டிருந்தது. எனினும் தமிழ் பௌத்தத்தின் செல்வாக்கு பல சிங்கள பிக்குகளால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் தமிழ் பௌத்தத்தின் பங்கு பற்றி அதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. அசோகப் பேரரசரின் தூதரான மஹிந்த தேரர் இலங்கைக்கு பௌத்தத்தைக் கொண்டு வருவதற்கு முன்னர் பௌத்தத்தை தமிழ்நாட்டில் பிரபலப்படுத்தினார் என்பது அறிஞர்களின் கருத்து. தற்போது, ​​இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் இடங்கள் அரசியல் செல்வாக்கின் கீழ் உள்ளன. சிங்கள மற்றும் தமிழ் அறிஞர்கள் தனித்தனியாக அவற்றை தங்கள் பாரம்பரியம் என்று கூறுகின்றனர். இதனால் இனக்கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த இடிபாடுகள் இன்றைய தமிழ் பகுதிகளில் கடந்தகால சிங்களவர்கள் இருந்ததற்கான சான்றுகள் என்று சிலர் நம்புகிறார்கள், அதே நேரத்தில் தமிழ் அறிஞர்கள் தமிழ் பௌத்த கடந்த காலத்தை பிரதிபலிக்கின்றன என்று வாதிடுகின்றனர். பல தமிழர்கள் இப்போது இந்து அல்லது கிறிஸ்தவர்களாக உள்ளனர். தொல்பொருள் கண்டுபிடிப்புகளை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துவது குறித்து அவர்களிடையே அமைதியின்மை காணப்பட்டது.  அதனால் அவர்கள் இந்த பௌத்த பாரம்பரியத்தை ஏற்கத் தயங்குகிறார்கள்.

இந்த சவால்களுக்கு மத்தியிலும் தமிழ் பௌத்தர்கள் சில பிரதேசங்களில் சமாதானமாக  வாழ்கின்றனர். உதாரணமாக கல்முனையில் உள்ள தமிழ் பௌத்தர்கள் ஏனைய மதத்தினருடன் இணக்கமாக வாழ்கின்றனர். ல்முனையைச் சேர்ந்த தமிழ் பௌத்தரான திரு.ரகு டி சில்வா, நல்லிணக்கம் மற்றும் மனித நேயத்தின் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கையில் “அவர்கள் எங்களைத் தங்களுடையவர்களாகப் பார்க்கிறார்கள்”  என்று தெரிவித்தார்.

இலங்கையின் தமிழ் பௌத்த சமூகமானது போர், அரசியல் அழுத்தங்கள் மற்றும் சமூக சவால்களை எதிர்கொண்டுள்ளது. ஆனால், அவர்கள் தங்கள் பாரம்பரியத்தை வருங்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளனர். அனைத்து மதங்களுக்கும் நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் மரியாதையுடன் அவர்களின் அடையாளத்தை முழுமையாக வெளிப்படுத்தக்கூடிய மற்றும் மதிக்கக்கூடிய எதிர்காலம் அவர்களின் நம்பிக்கையாகும்.

மேற்கோள்கள்:

De Votta, Neil. Sri Lanka’s Civil War and Peace Process. Palgrave Macmillan, 2007.

Perera, H.R. Buddhist Shrines of Tamil Nadu. The Buddhist Publication Society, 2007.

Somaratne, G.P.V. Tamil Buddhism in Sri Lanka. University of Colombo, 1966.