பதினாறு வருடங்களுக்கு முன்னர் வேலைக்குச் சென்ற தன்னுடைய பிள்ளைக்கு என்ன நடந்தது என்ற கேள்விக்கு  விடை தெரியாமால் இன்றும் வீதியில் நிற்கின்றார் தேவி. தன்னுடைய பிள்ளை திரும்பி வருவான் என்ற ஒரு நம்பிக்கையை மாத்திரம் கைவிடாது இன்றும் போராடிக் கொண்டிருக்கின்றார்,  காணாமல் ஆக்கப்பட்ட செபஸ்டியன் ரேகனின் தாயும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் திருகோணமலை மாவட்டத் தலைவியுமான செபஸ்டியன் தேவி.

இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினரால் பல்வேறு காலகட்டங்களில் பல நூறு தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அது மாத்திரமன்றி யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் ஆயிரக்கணக்கானவர்கள் பல்வேறு வகையிலும் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளனர்.   அவர்களைத் தேடும் அன்புக்குரியவர்களின் பயணம் இன்றும் தொடர்கிறது. அவ்வாறு திருகோணமலையில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட தனது தனது மகனை தேடி வருகின்றார் திருகோணமலை, பாளையூற்றைச் சேர்ந்த தேவி.

ஓசில் என்ற இடத்திற்கு வேலைக்குச் சென்ற தனது பிள்ளை இதுவரை வீடு திரும்பவில்லை என்கிறார் தேவி.

“2008 மார்ச் 19ஆம் திகதி திருகோணமலை, ஓசில் என்ற இடத்திற்கு வேலைக்கு சென்றபோது, கோணேசப்புரம் என்ற இடத்தில் வைத்து இலங்கை இராணுவம் என் மகனை கடத்திக் கொண்டு போனார்கள். அதன் பின்னர் எந்தவொரு தகவலும் இல்லை.”

தன்னுடைய பிள்ளையை எப்படியாவது கண்டுபிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு இடங்களில் முறைப்பாடு செய்துள்ள செபஸ்டியன் தேவிக்கு எந்தவொரு தரப்பும் இதுவரை ஒரு பதிலை வழங்கவில்லை. “நான் மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ், ஜோசப் முகாம். பூசா முகாம் என பல முகாம்களில் போய் தேடினேன் மகனை கண்டுபிடிக்க முடியவில்லை.”

கடந்த 16 வருடங்களில் இலங்கையில் அமைந்துள்ள இராணுவ மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் 39 முகாம்களுக்குச் சென்று தன்னுடைய பிள்ளையை தேடியுள்ளதாக தெரிவிக்கும் தேவி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் சென்று தன்னுடைய கதையை சொல்லியிருப்பதாக தெரிவிக்கின்றார். இலங்கையில் தம்முடைய கோரிக்கைக்கு எவ்வித நியாயமும் கிடைக்காது என வலுவாக நம்பும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச நீதியை கோரி நிற்கின்றனர். இந்த வகையில் திருகோணமலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சுமார் 2,162 பேருடைய உறவினர்கள் அல்லது குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் செபஸ்டியன் மேரிக்கு இதுவரை சர்வதேசமும் எவ்வித நியாயத்தையும் வழங்கவில்லை என்றாலும் அவரது போராட்டம் தொடர்கிறது.

2008 மார்ச் 19ஆம் திகதி தன்னுடைய பிள்ளை கடத்தப்பட்டுள்ளதாக அறிந்த ரேகனின் தந்தையும், தேவியின் கணவருமான செபஸ்டியன் அன்றைய தினமே அதிர்ச்சிக்குள்ளானதில் நோய்வாய்ப்பட்டுள்ளார். அன்று முதல் சுமார் ஒரு வருடம் படுக்கையில் சிகிச்சைப்பெற்று வந்த அவர் கடந்த 2009ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

எங்களுடைய மகன் காணாமல்போன அன்றைய தினமே என்னுடைய கணவருக்கு ஒரு சொக் (அதிர்ச்சி) இழுத்திட்டுது. அத்தோடு அவர் படுத்த படுக்கையாக இருந்து 2009இல் இறந்துவிட்டார். எனக்கு ஐந்து பிள்ளைகள். அவர்களில் இவர் (ரேகன்) இரண்டாவது மகன். மூத்தவர் இருக்கின்றார் ஏனைய மூவரும் பெண் பிள்ளைகள்.”

புதல்வனுக்கு என்னவானது என்ற கேள்விக்கு விடைத் தேடிக் கொண்டிருக்கும் தாய் தேவிக்கு, கணவனின் இழப்பு மிகப்பெரிய பாதிப்பை மனதளவில் ஏற்படுத்தியுள்ளது. எனினும் மனம் தளராத அவர், தன்னுடைய குடும்பத்தின் பொருளாதாரச் சுமையை குறைக்கும் வகையில் ஹோட்டல் ஒன்றில் வேலைக்குச் சென்றதோடு புதல்வனைத் தேடும் பணியையும் கைவிடவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டோர் கவன ஈர்ப்பு போராட்டம்.
காணாமல் ஆக்கப்பட்டோர் கவன ஈர்ப்பு போராட்டம்.

இவ்வாறான நிலையில் 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் தன்னை தொடர்புகொண்ட நபர் ஒருவர் தன்னுடைய பிள்ளையின் குரலை தொலைபேசியில் ஒலிக்கச் செய்து அவரை மீட்டுத்தருவதாகக் கூறி இலட்சக்கணக்கில் பணத்தைப் பெற்று தனது குடும்பத்தை ஏமாற்றியதாக கவலை வெளியிடும் தேவி, அதற்கான தன்னுடைய பரம்பரை சொத்தான ஒரு காணியை விற்பனை செய்த விடயத்தையும் பதிவு செய்தார்.

“நாங்கள் யுத்தத்தில் பொருள் இழப்புகளை சந்தித்தவர்கள். உயிர் இழப்புகளை சந்தித்தவர்கள். என் பிள்ளையை கதைக்கவிட்டு காசு வாங்கினார்கள். காணியை விற்பனை செய்து 10 இலட்சம் கொடுத்திருக்கின்றேன். பிள்ளை வருமென்ற நம்பிக்கையில், இந்த மாவட்டத்தில் பலர் இவ்வாறு பலரிடம் காசு கொடுத்து ஏமாந்து இருக்கிறார்கள்.

தன்னுடைய பிள்ளைக்கு என்ன நடந்தது என தனக்குத் தெரியாவிட்டாலும் அவர் தன்னை வந்துச் சேர்வார் என செபஸ்டியன் தேவி நம்பிக்கை வெளியிடுகின்றார். “எங்களுக்கு என் பிள்ளை வருவானா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. இதுவொரு நம்பிக்கைதானே? இல்லையென சொல்லி விட்டுவிட்டு இருக்கவும் முடியாது.” என்கிறார் தேவி.

வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது எனக் கேட்டு 2,500 நாட்களைக் கடந்து போராடி வரும் தமிழ் தாய்மாரைப்போல் தேவியும் போராடி வருகின்றார். “என்ன நடந்தது என எங்களுக்குத் தெரிய வேண்டும். உண்மையை அறிந்துகொள்ள வேண்டும்.” என்கிறார்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் திருகோணமலை மாவட்டத் தலைவி செபஸ்டியன் தேவி.

காணாமல் ஆக்கப்பட்டோர் கவன ஈர்ப்பு போராட்டம்.
காணாமல் ஆக்கப்பட்டோர் கவன ஈர்ப்பு போராட்டம்.