சி.தொடாவத்த
பத்திரிகையாளர்களின் பணிசார் வளர்ச்சி
பொதுவாகச் சமூகத்திற்கும் மதத்திற்கும் இடையே ஒரு இயற்கையான உறவு காணப்படுகின்றது. அந்த அடிப்படையில்தான் வெகுசன ஊடகங்கள்மூலம் பெறும் தகவலைக் கொண்டு பொது மக்கள் தமது அறிவை புதுப்பித்துக்கொள்கின்றனர். காலப்போக்கில், நிலப்பிரபுத்துவ ஆட்சி மாறி, அரசு சீர்திருத்தத்திற்கு உட்பட்டது. புதிய சமூகம், புதிய சமூக கட்டமைப்பு உருவாகி புதிய மனிதர்கள் உருவாகியபோதிலும் புதிய மனிதர்களுக்குப் பொருத்தமான அரசு உருவாகவில்லை. புதிய சமுதாயத்தில், திறந்த சந்தைகள் முறைகள் வளர்ச்சிக்கண்டன, புதிய சாலை அமைப்புகள் உருவாக்கப்பட்டன, மக்கள் ஒன்றிணைந்தனர். நிலப்பிரபுத்துவ சமூகத்தின் தனிமைப்படுத்தப்பட்ட, சிதறடிக்கப்பட்ட சமூகம் ஆனது ஒன்றுபடுதல் அல்லது ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதை நோக்கி நகரத் தொடங்கியது. இதன் விளைவாக, பல்வேறு இனங்கள் மற்றும் பல்வேறு மதக் குழுக்கள் ஒன்றிணைந்து ஒரு பன்மைத்துவ சமூகத்தை உருவாக்குகின்றன. முந்தைய சமூக அமைப்புகளில் இது போன்ற தொடர்ப்புகள் காணப்படவில்லை. தற்போது புதிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால் புதிய மனிதன் தனது சொந்த வரையறுக்கப்பட்ட மதம் அல்லது இனத்தின் அடிப்படையிலேயே தான் மேம்படுகின்றான். சமூகம் வளர்ச்சி அடைவது மிகவும் பரந்த அடிப்படையிலேயே ஆகும். ஆனால், குடிமக்களுக்கு மேம்படுவதற்கு அல்லது வளர்ச்சி அடைவதற்கு உதவும் ஒரு பொதுவான மதம் மற்றும் பொதுவான கலாச்சாரம் என்பது ஒருபோதும் நிறைவேறாத கனவே ஆகும்.
இந்த வரலாற்றுச் சூழலில்தான் நாம் “சமாதானம் அல்லது நல்லிணக்கம்” என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு மக்களுக்கு ஒரு வழி கற்பிக்கப்படுவதுடன், சமூகம் மற்றொரு வழியில் வடிவமைக்கப்படுகின்றது. இதன் காரணமாக, இந்த இரண்டுக்கும் இடையிலான முரண்பாட்டின் காரணமாகச் சமூகம் இன்னும் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. இதன் விளைவாக, தற்போதைய வெகுசன ஊடகங்கள் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் சவால்களை எதிர்கொள்கின்றன. வெகுசன ஊடகம் ஆரம்பம் தொட்டே ஒரு பன்மைத்துவ சமுதாயத்திற்காக வடிவமைக்கப்படவில்லை, மாறாக அவர்களின் சொந்த மத மற்றும் கலாச்சார சூழல்களில் தனிநபர்களை மையமாகக் கொண்டமைந்துள்ளது. குடிமக்கள் தங்கள் மதங்களுக்கு மரியாதை செலுத்துவதுடன் அவர்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்றச் சுதந்திரம் காணப்படுதல் வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில், நாம் பல்வேறு மத மற்றும் கலாச்சார குழுக்களை மதிக்க வேண்டும். ஊடகங்கள் இந்த ஊடாடலை ஆதரிக்க ஊடக விழுமியம், நெறிமுறை மற்றும் அணுகுமுறையை மேம்படுத்த முன்வர வேண்டும்.
“சமூக நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல்” என்ற கருப்பொருளைப் பற்றி விவாதிக்கும்போது இந்தச் சூழலைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இந்தப் பிரச்சனை ஒரு தனி நபர் அல்லது குழுவால் உருவாக்கப்பட்ட பிரச்சனை அல்ல. அப்படிப்பட்ட ஒருவரின் அல்லது குழுவின் பிரச்சனை என்ற கருத்து காணப்படுவதும் இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ளத் தடையாக இருக்கிறது. ஒரு விரிவான புரிதல் இந்தச் சிக்கலைத் தீர்க்கத் தேவையான நிலைமைகளை உருவாக்குகிறது. ஆனாலும் புரிதல் மாத்திரம் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது. இந்தப் புரிதலைத் தீர்வுகளாகச் செயற்படுத்தும்போதே சமூக நல்லிணக்கத்தை எட்ட முடியும்.
நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் ஊடகவியலாளர்களின் தற்போதைய வகிபாகம்.
இலங்கையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் இன்மைக்கு ஊடகங்களும் ஓரளவிற்குக் காரணம். எனவே தற்போது உள்ள நிலையை மாற்றி இன நல்லிணக்கத்தை நிலைநாட்டும் சமூகத்தைக் கட்டியெழுப்ப தலையீடு செய்வது குறித்து ஊடகவியலாளர்களாகிய நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். நாம் முன்பு கண்டறிந்த பிரச்சனையிலேயே அதற்கான பதில் காணப்படுகின்றது. ஒரு பன்மைத்துவ சமூகத்தில் வாழும் குடிமக்களுக்கு நல்லிணக்கம் தொடர்பாகக் அறிவூட்டாமையானது பிரச்சனை என்றால், பத்திரிகையாளர்களின் பொறுப்புக் குடிமக்களை ஒழுங்கமைத்து அவர்களுக்கு நல்லிணக்கம் தொடர்பாக அறிவூட்டுவதாகும். அதன் மூலம் பிற கலாசாரங்களை சகித்துக்கொள்ளும், அவற்றைக் கையாளும், உரையாடலில் ஈடுபடும் குடிமக்கள் உருவாக வேண்டும். ஊடகவியலாளர்கள் என்ற வகையில், நல்லிணக்கம் மற்றும் சமாதானத்திற்காகச் செல்வாக்கு செலுத்தும் காரணங்களில் தமது பங்கை அறிந்துகொள்வது இன்றியமையாததாகும்.
அத்துடன் இனப்பிரச்சினை நீண்டகாலமாகத் தொடர்வதற்கான காரணங்களையும் ஆராய வேண்டியுள்ளது. இந்த நிலை இன்று நேற்று ஏற்பட்டதல்ல. குடிமக்களையும் அரசையும் எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் ஒழுங்கமைக்க முடியாத நெருக்கடி காலனித்துவ காலத்திலிருந்தே காணப்படுகின்றது. வெகுசன ஊடகங்கள் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பங்களிக்கும் ஒரு கருவியாகவும் அதே வெகுசன ஊடகம் இந்த நெருக்கடியை ஏற்படுத்தும் ஒரு காரணமாகவும் கருதலாம்.
பத்திரிக்கையாளரின் வகிபாகம் மாறி வருகிறது.
வரலாற்றைப் பார்ப்போமேயானால் இன ரீதியான பிரச்சினை 80 களில் மிகவும் தீவிர நிலையில் காணப்பட்டது. 80 களில், 30 மற்றும் 40 களில் இருந்த நெருக்கடியைவிட வேறுபட்ட நெருக்கடி காணப்பட்டது. 50 மற்றும் 60 களில், நெருக்கடி இன்னும் வேறுபட்டது. 80களில் உக்கிரமடைந்த இந்த நெருக்கடியின் தன்மைகுறித்து, பிரபல சமூகவியலாளர் நியூட்டன் குணசிங்க “இனரீதியான பிரச்சனை பிரதான சிக்கலாக மாறியுள்ளது” என்றார். அதிலிருந்து, இனப்பிரச்சினையானது நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் விஞ்சி, சமூகப் பிரச்சினைகளுக்கு மத்தியில் அது உச்சத்துக்குச் சென்றுள்ளது என்று நியூட்டன் குணசிங்க விளக்க முற்பட்டார். நாட்டின் மற்றும் கட்சிகளின் தலைவர்கள் யார் என்பதை இனப்பிரச்சினையே தீர்மானித்துள்ளது என்றார். தலைவர்கள் கொல்லப்பட்ட பிறகு, எஞ்சியிருப்பவரே தலைவர் ஆவர். தேர்தலை நடத்தலாமா வேண்டாமா என்பது கூட அதைச் சுற்றியே தீர்மானிக்கப்படுகிறது என்று அவர் விளக்கினார். நாட்டின் ஒட்டுமொத்த நிலைமையும் இனப்பிரச்சினையால் கட்டுப்படுத்தப்பட்டது. 60 மற்றும் 70 களில், வறுமை, ஏனைய பிரச்சனைகள் ஆகியவை அரசியல் கருப்பொருளாகக் காணப்பட்டதுடன் பின்னர் நிலைமை மாறியது. அரசியல் பிரச்சார மேடைகளிலும் அரசியல்வாதிகளின் கதைகளும் மாற்றம் பெற்றன. இன நெருக்கடி இலங்கையில் நிலையை முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தியது.
நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு எதிரான சவால்கள்.
இனப்பிரச்சினைக்கு இராணுவத் தீர்வொன்றைப் பெற்றுத் கொடுத்ததாகப் பெருமையடித்துக் கொண்டாலும், நாட்டில் நல்லிணக்கப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை என்பது நிகழ்ந்தேறும் சம்பவங்களிலிருந்து வெளிப்படுகின்றது. இந்தச் சூழலை ஊடகவியலாளர்கள் புரிந்துகொள்வது அவசியம்.
யுத்த காலத்தில் ஊடகவியலாளர்கள் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காக மேற்கொண்ட முயற்சிகளும் ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளினால் சிதைக்கப்பட்டன. இப்போதும் கூட இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லையென வடக்கு, கிழக்கு அரசியல் தலைவர்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர். தென்னிலங்கைத் தலைவர்கள் பிரேரணைகளை முன்வைத்துக் கலந்துரையாடுவதுடன் மாத்திரம் வட, கிழக்கு அரசியல் தலைவர்கள்நின்றுவிடுகின்றனர் என அவர்கள் கருதுகின்றனர்.
நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதில் ஊடகவியலாளர்கள் எவ்வாறு தலையிட முடியும் ஊடகவியலாளர்களாகிய எமக்கு அண்மைக்காலமாக நல்லிணக்கம் தொடர்பில் நிறைய அனுபவங்கள் கிடைத்துள்ளன. பத்திரிகையாளர்களுக்குப் பல கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி நிகழ்ச்சிகள் இது தொடர்பாக நடத்தப்பட்டன. ஆனால் நல்லிணக்கம் தொடர்பான செயல்பாட்டில் ஊடகங்களின் ஈடுபாடு இன்னும் போதுமானதாக இல்லை. அந்த முயற்சிகள் வெற்றி பெற்றதா அல்லது தோல்வியில் முடிந்ததா, அதற்கான காரணங்களை நாம் சிந்திக்க வேண்டும்.
ஊடகவியலாளர்கள் என்ற வகையில் இந்நிலையை மாற்றியமைக்கக்கூடிய ஒரு பின்னணி உருவாகியுள்ளமை தெளிவாகிறது. 80 மற்றும் 90 களில் பணியாற்றிய ஊடகவியலாளர்களைவிட தற்போது ஊடகவியலாளர்கள் ஒப்பீட்டளவில் அதிக விழிப்புணர்வுடன் பணியாற்றுவதைக் காணமுடிகிறது. பன்முகத்தன்மையின் அனுபவங்கள் மற்றும் வெவ்வேறு கலாச்சாரங்களில் மீது கவனம் செலுத்துதல் ஆகியவை பத்திரிகையாளர்களின் பணியில் காணக்கூடியதாக உள்ளது.
எவ்வாறாயினும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது ஊடகவியலாளர்களால் மட்டும் செயற்படுத்தகூடிய செயல்முறை அல்ல. வடக்கு, கிழக்கைச் சேர்ந்த ஊடகவியலாளர்களைச் சந்தித்த வடக்கு அரசியல் தலைவர்கள் நிலைமாறு நீதி தொடர்பான பிரச்சினையை எழுப்பினர். இன பிரச்சினைக்கு வெற்றிகரமான நீண்ட கால அரசியல் தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் இனப்பிரச்சினை நிலை ஏற்படும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
90 களுக்குப் பிறகு பத்திரிகையாளர்களின் திறன் மேம்பாடு
தற்போது ஊடகவியலாளர்களின் பங்கு வளர்ச்சி மற்றும் ஆக்கபூர்வமான அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. கடந்த காலங்களில், ஊடக குழுக்களிடையே நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் கலந்துரையாடல் கூடக் காணப்படவில்லை. இது போன்ற சமயங்களில், ஊடகவியலாளர்கள் தங்கள் சுய விழிப்புணர்வுடன் நல்லிணக்கத்தில் பணியாற்றினார்கள். அதற்கு முன்னர் இருந்த ஊடக மரபுகளில் இருந்துதான் ஊடகவியலாளர்கள் அந்தக் அறிவைப் பெற்றுகொண்டனர். அவர்களில், பல ஊடகவியலாளர்கள் மத மற்றும் இனவாத சித்தாந்தங்களை ஊக்குவிக்கும் வகையில் பணியாற்றினர். அவர்கள் உருவாக்கப்பட்ட மத, இனக் கண்ணோட்டங்களின்படி அது சரியாக இருக்கலாம். ஆனால் அது நாட்டுக்குத் தேவையான குடிமகனை உருவாக்கவில்லை. 80 மற்றும் 90 களில், பத்திரிகையாளர்களின் பங்குபற்றிப் பல விவாதங்கள், திட்டங்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் வடிவமைக்கப்பட்டன. வெகுசன ஊடகச் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுகளை நடத்தி புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அதற்கேற்ப, கற்ற அறிந்த பத்திரிக்கையாளர்களின் தலைமுறை உருவாகத் தொடங்கியது. 1990களில், இன நெருக்கடி தீவிரமடைந்ததால் இந்தப் போக்கு மேலும் வளர்ந்தது. அதன் மூலம் புதிய ஊடக கலாச்சாரம் உருவாகியது.
தற்போது, நாட்டின் நிலைமை முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இராணுவ நிகழ்வுகள் ஒரு திருப்புமுனையாகத் தோன்றினாலும், அது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வாக அமைவதில்லை. இந்தச் சூழலை ஒரு சமூகம் எவ்வளவு காலம் ஒரு நெருக்கடியாகத் தாங்கும் என்பது ஒரு நாடாக நாம் எதிர்கொள்ளும் பிரதான கேள்வி ஆகும். தற்போது நமது சமூகம் அமைதியான கடலைப் போன்று காணப்படுகின்றது. புயல் எப்போது வீசும் என்று தெரியாது. ஊடகவியலாளர்கள் என்ற வகையில், புரிந்துணர்விலும் விழிப்புணர்விலும் இருந்து சமூகத்தை ஒரு சிறந்த இடத்திற்கு நகர்த்துவதற்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வது அவசியம்.
அதற்காக ஊடகவியலாளர்களாகிய எம்மில் இதுவரை என்னென்ன அபிவிருத்திகள் ஏற்பட்டுள்ளன, பயனுள்ள சமூகத்தை உருவாக்க ஊடகவியலாளர்களின் பணியை எவ்வாறு மேம்படுத்துவது என்பதை சிந்திக்க வேண்டிய தருணம் வந்துள்ளது.
தனிப்பட்ட வளர்ச்சி
“மாற்றம் தன்னிலிருந்து தொடங்க வேண்டும்” என்ற கூற்றுக்குக் கவனம் செலுத்த வேண்டும். பத்திரிகையாளர்கள் தனி மனிதராக மாற வேண்டும். இதுவரை நாம் செய்த அறிக்கையிடலின் தரம்குறித்து சுயவிமர்சனம் செய்ய வேண்டும். இலங்கை சமூகத்தில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தக்கூடியவர்களாக நாம் செயற்பட்டிருக்கிறோமா? பத்திரிகையாளர்களாகிய நாம் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய முதல் கேள்வி இதுதான். மேலும், நாம் கேட்க வேண்டிய இரண்டாவது கேள்வி, எங்கள் அறிக்கையிடலை நாங்கள் எவ்வளவு சிறப்பாகச் செய்துள்ளோம் என்பதுதான். இல்லையென்றால், அதை எவ்வளவு திறம்பட செய்துள்ளோம்? திறம்பட அறிக்கையிடல் என்றால் என்ன என்பதுதான் நாம் கேட்க வேண்டிய மூன்றாவது கேள்வி. அதை எப்படி செய்வது? ஊடகவியலாளர்களாகிய நாம் இந்தக் கருப்பொருளில் எமது திறனை வளர்த்துக்கொள்வதுடன், அறிக்கையிடல் தரத்தை உயர்த்துவதன் மூலம் ஊடகவியலாளர்களாக மேம்பட வேண்டும்.
நிலைமாறுகால நீதி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்பன இலங்கையின் எதிர்கால தலைவிதியை தீர்மானிக்கும் கருப்பொருள்களாகும். அவற்றை எதிர்கொள்ளாமல் நம் சமூகம் முன்னேற வழி இல்லை. ஊடகவியலாளர்களாகிய நாம் அந்தச் சவாலை எதிர்கொள்ள எவ்வளவு தயாராக இருக்கிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதை நடைமுறையில் எப்படி மேற்கொள்வது? நல்லிணக்கத்தைப் பற்றி எழுதுவதற்குப் பதிலாக, மற்ற விடயங்கள் தொடர்பில் நாம் எழுதிக்கொண்டு இருக்கலாம். பத்திரிகையாளர்களாக இது ஒரு தொழில்முறை நடைமுறையாக இருக்கலாம். ஆனால், இந்த விடயத்தில் கவனத்தை ஈர்க்கும் விருப்பம் இருந்தால், அவற்றைச் சமூக ஊடகங்களில் வெளியிடலாம். உங்கள் கட்டுரைகளின் தரம் மிகவும் முக்கியமானது. அவர்கள் மேலும் தெரிந்து கொள்ள விரும்பும் விடயங்கள் காணப்பட்டால், குழுவாக வேலை செய்ய உங்கள் முன் பல வசதிகள் காணப்படுகின்றன. அதற்குக் குழுப்பணியும் அவசியமாகும். நல்லிணக்கத்திற்கு எதிராக ஒன்றுகூடி இருந்த ஊடகவியலாளர்களின் குழுக்களில் காணப்பட்ட ஒத்துழைப்பு நல்லிணக்கத்திற்காகச் செயற்படும் ஊடகவியலாளர்கள் மத்தியில் இதற்கு முன்னர் காணப்படவில்லை. ஏனைய மதங்களையும் இனங்களையும் விடத் தமது மதமும், தமது இனமும் மேலானது என நினைக்கும் பேரினவாத ஊடகக் குழுக்கள் சிறப்பாக ஒத்துழைப்புடன் செயற்பட்டனர்.
பத்திரிக்கையாளர்களிடையே நடக்கும் கலந்துரையாடல்களில் பயிற்சி தேவைப்படும் பகுதிகள்குறித்து விவாதித்து திட்டங்களை வகுக்கலாம். அறிவூட்டும் பணிகளை ஒழுங்கமைப்பதன் மூலம் பத்திரிகையாளர்களாக நமது தரத்தை மேம்படுத்த முடியும். இன நெருக்கடிக்கான தீர்வுகள், நிலைமாறுகால நீதி, சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றிற்காகச் செயற்படும் கட்டமைப்பை நாம் கொண்டிருக்க வேண்டும். விளம்பர தன்மையுடன் கூடிய அறிக்கையிடலை தவிர்க்க வேண்டும்.
இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது போல் கட்டுரைகளைத் விளம்பரப்படுத்தல் தன்மையுடன் தயாரிப்பதில் எந்தப் பயனும் இல்லை. ஊடகவியலாளர்களாகிய நாம் மக்களின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகளில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு தரமான கட்டுரை மற்றும் வடிவமைப்பு அதிலிருந்து பிறக்கிறது. மக்கள் உண்மைக் கதைகளைப் படிக்க விரும்புகிறார்கள். நல்லிணக்கத்திற்காக, தற்போதுள்ள கட்டமைப்பிற்கு அப்பால் ஊடகவியலாளர்கள் சிந்திக்க வேண்டும். நல்லிணக்கம் பற்றிய கேள்விகள் இப்போது வெகுதொலைவில் உள்ளன. நாம் இங்கு முயற்சிப்பது நல்லிணக்கம் எனப்படும் மதிப்புகளின் (Values) கட்டமைப்பாகும். சமாதானம், நல்லிணக்கம் என்ற வார்த்தை கூட எங்களுக்கு முக்கியமில்லை. தமிழ் சமூகத்தில் ஒரு விவசாயி எதிர்கொள்ளும் பிரச்சனையை ஒரு தமிழ் விவசாயி எதிர்கொள்ளும் பிரச்சனையாகப் பார்க்காமல் ஒரு விவசாயி சந்திக்கும் பிரச்சனையாகப் பார்க்க வேண்டும். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைச் சமூகத்திற்கு முன்வைக்க முடிந்தால், அதன் மூலம் சமூகத்தின் உணர்திறனை உருவாக்க முடியும். சமூகத்தின் மீது ஏற்படுத்தக்கூடிய சாத்தியமான தாக்கத்தை அதிகரிக்க முடியும். ஊடகவியலாளர்கள் எனப்படுபவர்கள் தனி மனித கெளரவம், சமத்துவம், வயதெல்லை, விசேட திறமை உடையவர்கள், பாலினம் போன்றவற்றில் உணர்திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
உரிமைகளுக்கான ஊடகவியலாளர்கள் சார்பில் ரயிட் டு லயிப் மனித உரிமை மையம் (PUJA) செயற்றிட்டத்தினால் 2024 ஏப்ரல் 08 ஆம் திகதி கொழும்பு ஜானகி ஹோட்டலில் நடைபெற்ற பயிற்சி நிகழ்வில் நிலைமாறுகால நீதி, சமாதானத்தை கட்டியெழுப்ப, நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்களின் பங்கு என்ற தலைப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சீ.தொடாவத்த ஆற்றிய உரையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.
(ஒரு விளக்கப்படக்காட்சியை அடிப்படையாகக் கொண்டது)