Rohan Samarajivaபேராசிரியர் ரொஹான் சமரஜீவ

காலஞ்சென்ற அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில் நான் 1994ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தேன். இலங்கையின் தொலைத்தொடர்பு கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இது அமைந்தது. அப்போது நான் பின்னிரவிலேயே எனது மனைவியின் வீட்டிற்குச் செல்வது வழமை. காரணம், நான் அப்போது தொலைத்தொடர்பு பணிப்பாளர் நாயகமாக இருந்ததால், தொலைபேசிகளை பெற்றுக்கொள்வதற்காக அயலவர்கள் கடிதங்கள் சகிதம் மனைவியின் வீட்டிற்கு வருவதை தவிர்ப்பதற்காகவே அவ்வாறு செய்தேன்.

இன்று, நாட்டின் தொலைத்தொடர்பு கட்டமைப்பு கணிசமான அளவு முன்னேறியுள்ளது. நாட்டின் சனத்தொகையை விட கையடக்க தொலைபேசிகள் அதிகரித்துவிட்டன. அமைச்சர் மங்களவினால் ஆரம்பிக்கப்பட்ட சுது நெலும் (வெண்தாமரை) இயக்கத்திற்கு நானும் பங்களித்ததோடு, புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் செயன்முறையில்  பங்கேற்றேன். எனினும், தலதா மாளிகை மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலாலும், புதிய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தாலும் அனைத்தும் சீர்குலைந்தது.

நாட்டின் பொருளாதார, அரசியல், சமூக, கலாச்சார நெருக்கடிகளுக்கு, நல்லிணக்கம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் மாத்திரமே தீர்வு காண முடியும். நல்லிணக்கத்தை பொருளாதாரக் கண்ணோட்டத்திலும் பார்க்க வேண்டும். அதேசமயம், உட்கட்டமைப்பு அபிவிருத்தியிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். உட்கட்டமைப்பை தனிநபர்கள் கட்டியெழுப்புவது கடினமானது மற்றும் செலவு கூடியது. ஆகவே இதனை செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும். மக்கள் குடிநீர் மற்றும் தொலைபேசி சேவைகளை தனித்தனியே அமைத்துக்கொள்ள முடியாது. நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் கிணறுகளைப் பயன்படுத்துவது சிரமமாகும். ஆகவே, சுத்தமான குடிநீர் கட்டமைப்பை ஏற்படுத்துவது இன்றியமையாத ஒன்றாகும்.

நல்லிணக்கமும் நீரும்

யாழ்ப்பாணத்தில் சுமார் 3 வீதமான மக்கள் மட்டுமே குழாய் நீரை பயன்படுத்துகின்றனர். பெரும்பாலானோர் நிலத்தடி நீரையே தமது பாவனைக்கு பயன்படுத்துகின்றனர். யாழ்ப்பாண மக்கள் ஆழ்துழை கிணறுகளில் இருந்து நீரைப் பெற்றுக்கொள்கின்றனர் என்று சிறுவயதில் இருந்து கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் யுத்தம் முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கு மின்சார இணைப்பு கிடைத்தது. ஆகவே, மோட்டார் இயந்திரத்தை பொருத்தி அவர்கள் நிலத்தடி நீரை பெற்றுக்கொள்ள ஆரம்பித்தனர். அதன் பின்னர் அவர்களுக்கு பாசனக் கிணறுகள் தேவைப்படவில்லை. அப்போதுதான் ஒரு பிரச்சினை எழுந்தது. இந்த நீர்க் குழாய்கள் யாழ்ப்பாணத்தின் மண் அடுக்கில் ஆழமான சுண்ணாம்பு அடுக்குக்கு செல்வதால், காலப்போக்கில் சுண்ணாம்பும் நீருடன் கலந்து மாசடைந்த நீர் வெளியேறியது. இது, யாழ்ப்பாணத்தில் பாரிய நீர் நெருக்கடி ஏற்படுவதற்கு வழிவகுத்தது.

இலங்கையில் தொலைத்தொடர்பு கட்டமைப்பை வெற்றிகரமான பாணியில் மாற்றியுள்ளோம். யாழ்ப்பாணம், கிளிநொச்சி உட்பட இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் எதிர்நோக்கும் நீர் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையின் நீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மைக்கு தீர்வை வழங்காமல் நீர் பிரச்சினை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.

யுத்த நிறுத்த காலத்தில் கிளிநொச்சிக்கு சென்ற பிரதிநிதிகள் குழுவொன்று வடக்கில் நிலவும் நீர் பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடி உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதை நோக்காகக் கொண்டிருந்தது. அவர்களை அரச அதிகாரிகள் மற்றும் விடுதலைப்  புலிகளின் பிரதிநிதிகள் குழு சந்தித்தது. இது ஆசிய அபிவிருத்தி வங்கியின் செயற்திட்டமாகும். ஆசிய அபிவிருத்தி வங்கியானது வட மாகாணத்தின் நீர் பிரச்சினையின் சிக்கலான தன்மையின் காரணமாக இதில் கவனம் செலுத்தியது. இரணைமடு நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவை அதிகரித்து, வடமாகாணத்திற்கு நீர் வழங்குவதே இதன் நோக்கமாகும். விடுதலைப் புலிகளும் இதற்கு உடன்பட்டதோடு, தமது இணக்கத்தினை எழுத்துப்பூர்வமாக அறிவித்தனர்.

ஏ9 வீதியில் வடக்கு நோக்கிப் பயணிக்கும்போது வீதியோரத்தில் பிரம்மாண்டமான கோபுரங்களும், பெரிய குழாய்களும் காணப்படுகின்றன. ஆனால் அதன் வழியாக நீர் செல்வதில்லை. இரணைமடு நீர்த்தேக்கத்தின் நீர் திட்டத்திற்காக விடுதலைப் புலிகள் வழங்கிய அனுமதியை, யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஜனநாயக அரசியல் கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.  இந்த நிராகரிப்புக்கு பல காரணங்கள் இருந்தன. அதற்கு முக்கிய காரணம் அரசியலமைப்பின் பிரகாரம் அனைத்து நீர்ப்பாசன முறைமைகளும் அனைத்து நீர்த்தேக்கங்களும் மாகாண சபைக்கு சொந்தமானவை. ஆனால் அதற்கு ஒரு விதிவிலக்கு உண்டு. அதாவது, மாகாண எல்லைகளைத் தாண்டி நீர் பாய்ந்தால், அது மத்திய அரசின் பொறுப்பாகும். சப்ரகமுவவிலிருந்து மேற்கு நோக்கி நீரைக் கொண்டு வரும் குக்குளே கங்கை இதற்குச் சிறந்த உதாரணமாகும். இந்த நீர்த் திட்டமானது மத்திய அரசுக்கு சொந்தமானதாகும்.

இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி வெளியிட்டிருந்தார். வேறு மாகாணத்தில் இருந்து நீர் பெறப்பட்டால் இரணைமடு நீர்த்தேக்கம் மத்திய அரசுக்கு சொந்தமாகி விடும். வடக்கு மாகாணத்தின் 17 ஆறுகள் கடலில் கலக்கின்றன. அந்த ஆறுகள் வடக்கு மாகாண சபையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இரணைமடு நீர்த்தேக்கம் மத்திய அரசுக்கு சொந்தமாகிவிட்டது என்ற விமர்சனக் கருத்துக்களை வெளியிடுவது கிளிநொச்சி மக்கள் அல்லர், தொழில் வல்லுநர்களும் பொறியியலாளர்களுமே இக்கருத்தை முன்வைத்தனர். இந்தப் பிரச்சினைகளைப் பாதிக்கும் வேறு அரசியல் நெருக்கடிகளும் உள்ளன. இரணைமடு நீர்த்தேக்கம் மத்திய அரசுக்குச் சொந்தமானால், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சிங்கள மக்களைக் குடியமர்த்தி சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி விடுமோ என்ற அச்சமும் சந்தேகமும் அவர்கள் மத்தியில் நிலவுகின்றது. கல் ஓயா திட்டத்தின் கீழ் சிங்களக் குடியேற்றங்களை நிறுவிய அனுபவத்தைப் பற்றி அவர்கள் சிந்தித்திருக்கலாம். நம் நாட்டு மக்கள் காலங்காலமாக என்ன நிலைப்பாட்டினை கொண்டுள்ளனர் என்பதை விளக்க இந்த சம்பவம் ஒன்றே போதுமானது. அரசியல் நல்லிணக்கத்திற்கும் சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் இடையில் தொடர்புண்டு.

நல்லிணக்கத்திற்கு காணப்படும் சவால்கள் யாவை?

நல்லிணக்கம் தொடர்பாக பல்வேறு அரசாங்கங்கள் பல ஆணைக்குழுக்களை நிறுவின. குறித்த நோக்கத்திற்கான நிர்வாகம், செலவுகள் மற்றும் வளங்களை கருத்திற்கொள்ளும்போது, குறிப்பிடத்தக்களவு பணம் செலவிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களை ஸ்தாபிப்பதற்கு அவசியமான நிதி எவ்வாறு பெற்றுக்கொள்ளப்படுகின்றது?

கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுக்கு பணப்பிரச்சினை காணப்படவில்லை. கடந்த 75 வருடங்களில், வருமானத்தை விட செலவு அதிகரித்துள்ளது. இலங்கையில் அபிவிருத்தி செயற்திட்டங்கள் பெரும்பாலும் கடன் மூலமாகவே நிதியளிக்கப்பட்டுள்ளன. 1965ஆம் ஆண்டு முதல் 1970ஆம் ஆண்டு வரை யூ.பி.வன்னிநாயக்க நிதியமைச்சராக இருந்த சந்தர்ப்பத்தில்,  அரசாங்கத்தின் வருமானத்தில் இருந்தே செலவுகள் ஈடுசெய்யப்பட்டுள்ளன.  மங்கள சமரவீர நிதியமைச்சராக இருந்த 2018-2019 காலப்பகுதியில் செலவினத்தை விட வருமானம் சற்று அதிகரித்து காணப்பட்டது. ஏனைய எல்லா வருடங்களிலும், முதன்மை இருப்பு பற்றாக்குறையாகவே காணப்பட்டது.

அரசின் வருவாயை விட செலவு அதிகரிக்கும்போது கடன்  பெறப்படுகின்றது. ஒரு அரசாங்கத்திற்கு எம்மை விட கடன் வாங்கும் திறன் அதிகம். அரசாங்கம் கடன்  பெறுவதற்கான பல வழிகள் உள்ளன. அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கு வெளிநாட்டுக் கடன் பெறப்பட்டுள்ளது. நாட்டில் குடிநீர் திட்டங்கள் போன்ற செயற்திட்டங்களுக்கு உள்ளூர் வங்கிகளிடம் இருந்து கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கடன்கள் அனைத்தும் வரவு செலவுத் திட்டத்திற்கு அப்பாற்பட்டவை. அரசு பத்திரங்களை அடமானமாகப் பயன்படுத்தி அரசு வங்கிகளில் இருந்தும் பெரும் தொகையை கடனாகப் பெற்றுள்ளது. இத்தகைய கடன்களை வழங்கும்போது, வங்கி கட்டமைப்பு வீழ்ச்சியடையலாம். மேலும், ஒரு அரசாங்கம் மத்திய வங்கியில் இருந்து நிதிக் கடன்களை பெறும் திறனைக் கொண்டுள்ளதால், கடன்களை வழங்குவதற்கு பணத்தை அச்சிடும் நிலை ஏற்படுகின்றது.  இதன் காரணமாக, கடந்த காலத்தில் 70 வீதமான பணவீக்கம் ஏற்பட்டது. பணவீக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பினை மக்கள் இன்னும் எதிர்கொண்டு வருகின்றனர். அண்மையில், புதிய மத்திய வங்கி சட்டம் நிறைவேற்றப்பட்டது. குறித்த சட்டத்தின்படி பணத்தை அச்சிட முடியாது. இதுபோன்ற விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் இல்லாமல் நிதிக் கட்டுப்பாட்டிற்குச் சென்றால், கடந்த காலத்தைப் போல உணவு, எரிவாயு மற்றும் எரிபொருள் இல்லாமல் மக்கள் மீண்டும் வரிசையில் நிற்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

கடன் மற்றும் வட்டி செலுத்துவதற்காக மாத்திரம் கடந்த 2023ஆம் ஆண்டு  நாட்டின் மொத்த வருமானத்தில் 89 வீதம் செலவிடப்பட்டது. அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 30 வீதமானவை, வருமான வரி, வருவாய்க்கு செலுத்தப்படும் வரி, வணிக நிறுவனங்கள் செலுத்தும் வரி, பெறுமதி சேர்க்கப்பட்ட வரி போன்ற வரிகளின் மூலம் கிடைக்கின்றன. மாதாந்தம் ஒரு இலட்சத்திற்கு மேல் வருமானம் பெறுவோர், வருமான வரியை செலுத்த வேண்டியிருந்தது. எஞ்சியுள்ள வரி வருமானம், இறக்குமதி மீதான வரிகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது. 2022ஆம் ஆண்டு அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்காக மாத்திரம் சுமார் 86 வீதம் செலவாகியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள பல்வேறு நிபந்தனைகளுக்கு அரசாங்கம் கட்டுப்பட்டதாக ஒரு பொதுவான கட்டுக்கதை உள்ளது. அது பொய்யாகும். அரசாங்கமே சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்மொழிவுகளை சமர்ப்பிக்கின்றது. அரசாங்கம் முன்வைத்த முன்மொழிவுகளை நிறைவேற்ற முடியுமா என்பது குறித்து சர்வதேச நாணய நிதியம் பின்னர் மதிப்பிடுகின்றது. அந்த முன்மொழிவுகளை நிறைவேற்றுவதை அரசு உறுதி செய்யும். 8 வீதமாக உள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் வரி விகிதத்தை 2026இற்குள் 14 வீதமாக உயர்த்த வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ளது. அனைத்து விதமான வரி உயர்வுகள் இருந்தாலும், இதுவரை கிடைத்துள்ள வரி வருவாயின் சதவீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 வீதமாகும். வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோரும், இந்த வரி 14 சதவீதத்தை எட்டும்போது என்ன நடவடிக்கை எடுப்பார்கள்? இதுதான் இப்போது நாம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியாகும்.

பொருளாதார நெருக்கடியின் போது வரியை அதிகரிப்பதானது, மரத்தில் இருந்து விழுந்த மனிதனை மாடேறி மிதிப்பது போலாகும். மக்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் வரிகளை அதிகரிப்பதை நானும் எதிர்த்தேன். மறைமுக வரிகளை இந்தளவு அதிகரிப்பதில் எமக்கு ஆட்சேபனை உள்ளது. செலவுகளை குறைப்பதற்கு அரசு விரும்பவில்லை. பிரிட்டன் மிகவும் ஆக்கிரமிப்பு கொண்ட நாடாக உள்ளபோதும், இலங்கையை விட குறைவான அளவிலேயே அந்நாட்டில் இராணுவம் உள்ளது. இலங்கை இராணுவத்தை குறைக்க முடியும் என்பதை முன்னாள் இராணுவ அதிகாரியும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரியவும் ஏற்றுக்கொள்கின்றார். இலங்கையில் மேஜர் ஜெனரல்களின் எண்ணிக்கையை குறைத்தால், நிறைய செலவுகளை குறைக்க முடியும் என்பது அவரது கருத்தாகும். காரணம், மேஜர் ஜெனரலுக்கு அரசாங்கம் செய்யும் செலவு அதிகமாகும். ஆனால், இதனை விரைவாக செய்யும்போது பொதுமக்களிடமிருந்து சிக்கலான எதிர்வினைகளை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, அரசாங்கம் இதனை படிப்படியாக குறைத்து வருகின்றது.

அரசாங்கத்தின் மற்றொரு பிரச்சினை நிலையான செலவுகளாகும். நிலையான செலவுகளிலிருந்து சம்பளச் செலவுகளைக் கழிப்பது இலகுவானதல்ல. மக்களை வேலையில் இருந்து நிறுத்துவதற்கு அரசாங்கம் விரும்பவில்லை. ஆகவே, செலவினங்களைக் குறைப்பதில் இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு பெரிய மற்றும் சிக்கலான பிரச்சினை உள்ளது. இதனால், திறனற்ற அரச சேவையுடன் தொடரவேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.

எதிர்காலத்தில் ​​அரசாங்கம் அவ்வளவு இலகுவாகச் செலவுகளைச் செய்ய முடியாது. இலங்கையின் மிகவும் நம்பிக்கைக்குரிய வங்கியான தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு அரசாங்கத்தின் உத்தரவாதத்தின் கீழ் 35 பில்லியன் ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான வட்டியை அரசாங்கமே செலுத்தி வருகின்றது. இந்த பரிவர்த்தனை வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை மற்றும் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவில்லை. மாதாந்தம் 369 மில்லியன் ரூபாவை கொத்தலாவல பல்கலைக்கழகம் செலுத்த வேண்டும். ஆனால் தற்போது மாதாந்தம் 50 மில்லியன் மட்டுமே தேசிய சேமிப்பு வங்கிக்கு செலுத்த முடிகின்றது. 300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை பற்றாக்குறையாக உள்ளது. இந்த பற்றாக்குறையை மக்களே செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதைச் செலுத்த முடியாமலும், கடன் கிடைக்காமலும் இருந்தால் என்ன செய்ய முடியும்? வரியை அதிகரிப்பது மட்டுமே ஒரே வழியாக உள்ளது.

நாடு பாரிய நெருக்கடியில் உள்ளது. இதேவேளை, காணாமற்போனோருக்கான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்குவதற்கும், நிலைமாறுகால நீதியின் கீழ் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் நாம் மன்னிப்புக் கோர வேண்டும். இழப்பீடு ஒரு உளவியல் அம்சத்தைக் கொண்டுள்ளது. ஏற்பட்ட சேதங்களுக்கு நிதி இழப்பீட்டையும் வழங்க வேண்டும். இதற்கு நிதியளிப்பதற்கான வளங்கள் அரசாங்கத்திடம் உள்ளதா? எமது நாட்டிற்குத் தேவையான நல்ல விடயங்களைச் செய்வதற்கு எம்மிடம் போதுமான நிதி இல்லை.

குடும்ப உறுப்பினர் ஒருவர் காணாமல் போனாலோ அல்லது கொலைசெய்யப்பட்டாலோ, அதனால் குடும்பத்திற்கு ஏற்படும் அழுத்தம் மிகவும் தீவிரமானது. வடக்கு தெற்கு என்ற வித்தியாசம் இன்றி இரண்டு பிராந்தியங்களிலும் இந்நிலை காணப்படுகின்றது. பொருளாதார பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால், இழப்பீடு வழங்குதல் போன்ற நல்ல விடயங்களைச் செய்வதற்கான நிதியை பெற்றுக்கொள்ள முடியாது.