Nimalka Fernandoகலாநிதி நிமல்கா பெர்னாண்டோ

பின்னணி

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சினால் 2019 இல் மகளிர், சமாதானம்  மற்றும் பாதுகாப்புக்கான தேசிய செயல் திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டது. பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான உடன்படிக்கையில் (CEDAW) கையொப்பமிட்ட இலங்கை அரசாங்கம், தனியார் மற்றும் பொது வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து தரப்பு பெண்களையும் வலுவூட்டுவதற்கு உறுதிபூண்டுள்ளது.

அதன்படி, இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை 2023 பெப்ரவரி 27 ஆம் திகதி  அன்று மகளிர், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அதன் முதலாவது தேசிய செயற்திட்டத்தை (WPS) கைச்சாத்திட்டது. இது 2023 – 2027 வரை செல்லுபடியாகும். மாகாண மற்றும் மாவட்ட மட்டங்களில் உள்ள பொதுத்துறை அதிகாரிகள், சிவில் சமூகம், சமூகம் சார்ந்த அமைப்புகள், பெண்கள் தலைவர்கள் மற்றும் பலதரப்பட்ட மோதல்கள் மற்றும் நெருக்கடிகளின் நேரடி அனுபவமுள்ளவர்களுடன் கலந்தாலோசித்து தேசிய செயல்திட்டம் உருவாக்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்தது.

இலங்கை பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயற்திட்டம் ஐ.நா பாதுகாப்பு பேரவையின் தீர்மானம் 1325 (2000) இல் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதேச அர்ப்பணிப்புகளுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தத் தேசிய செயல் திட்டம் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு  அதிகாரமளிப்பதற்கான நாட்டின் சட்ட மற்றும் கொள்கை கட்டமைப்பிற்கு பங்களிக்கிறது. இது சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பையும் பலப்படுத்துகிறது.

இலங்கையில் நிலையான சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கு மகளிர், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நிகழ்ச்சி நிரல் மிகவும் முக்கியமானதாகும். இந்தச் செயல்திட்டத்தைக் கைச்சாத்திட்டதன் மூலம், மகளிர், சமாதானம் மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கான கொள்கை கட்டமைப்பை இலங்கை முதன்முறையாகக் தன்வசம் கொண்டுள்ளது. இதனடிப்படையில் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் செயல்முறைகள் மற்றும் அரச நிர்வாகத்தில் பெண்களின் அதிகப் பங்கேற்பையும் பிரதிநிதித்துவத்தையும் வேண்டிநிற்கின்றது.

மோதல், வன்முறை மற்றும் காலநிலை பாதுகாப்பின்மை ஆகியவற்றால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மற்றும் தொடர்ந்து பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவை வழங்குவது தேசிய செயல் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

மேலும், ஒதுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் சம வாய்ப்புகள் மற்றும் வளங்களை அணுகுவதன் மூலம் பெண்களைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதும் இதன் இன்னொரு நோக்கமாகும். அங்குப் பெண்களின் தொழில்முனைவு மற்றும் வேலைவாய்ப்புக்கான அணுகல் மிகவும் முக்கியமானது.

சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் மோதல்களைத் தடுப்பது தொடர்பான தலைமைப் பொறுப்பில் பெண்களின் பங்கையும் இந்தச் செயல் திட்டம் வலுப்படுத்துகிறது.

ஒரு வருடத்திற்கு பிறகு

மார்ச் 8, 2023 அன்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தேசிய செயல் திட்டம் சம்பிரதாயபூர்வமாகத் ஆரம்பித்துவைக்கப்பட்டது. பெண்களின் உரிமைகளை மேலும் விரிவுபடுத்தும் இலக்கை அடைவதற்கு ‘பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான தேசிய கொள்கை’ மற்றும் ‘பெண்கள், சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய செயற்திட்டம்’ உதவும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். ஆசிய பிராந்தியத்தில் பெண்களின் உரிமைகளுக்காக இலங்கை முன்னணி வகிக்கும் என்றும் அவர் மேலும் தனது உரையில் கூறினார்.

இந்தத் திட்டத்தை அர்த்தமுள்ள வகையில் செயல்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை.  இந்தக் குறிப்பை எழுதும்போது, ​​பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான மசோதாவை அரசு வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது. அதன் நோக்கமாக  ‘பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதை நோக்கமாகவும்; பெண்களின் முன்னேற்றம் மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பான தேசியக் கொள்கையை உருவாக்கிச் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்; தேசிய பெண்கள் ஆணையத்தை நிறுவுதல்; பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை நிறுவுதல் மற்றும் அத்தகைய உரிமை மீறல்களுக்கு எதிராக வழக்குத் தொடருதல்; போன்ற விடயங்களை உள்ளடக்கியுள்ளது’.

இந்த வரைவுச் சட்டம் மற்றும் இதர வரைவுச் சட்டங்கள் மற்றும் பாலின அடிப்படையிலான வரவு செலவுத் திட்டம் தொடர்பாக ஜனாதிபதி முன்வைத்த கருத்துக்கள் பற்றிய கருத்தாடலை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமானது.

பெண்கள் எதிர்கொள்ளும் நிலை

ஐம்பத்திரண்டு சதவீத பெண்கள் எதிர்கொள்ளும் சமூக-அரசியல், கலாச்சார மற்றும் பொருளாதார சவால்கள் தனிப்பட்ட அனுபவங்களில் மட்டுமல்ல, அவர்கள் சார்ந்திருக்கும் சமூகம், சாதி, மதம் மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன என்பது இப்போது உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டில் மாத்திரம் சோசலிசத்தை உருவாக்க முடியாது என்பது போல, பெண்களின் சமத்துவத்தை அரசாங்கத்தால் மட்டும் மாற்ற முடியாது என்பது இலங்கைப் பெண்களுக்கு நன்றாகத் தெரியும். திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா மற்றும் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் உலக வரலாற்றில் சாதனைகளைப் படைத்து அரசியலில் முன்னோக்கி வந்தபோதிலும் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் வளர்ச்சியோ சமத்துவத்தை நிலைநாட்டத் தேவையான சட்ட திருத்தங்களோ இலங்கையில் ஏற்படவில்லை என்றே கூற வேண்டும்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் மூலம் 2000 ஒக்டோபர் 31 ஆம் திகதி இல 1325 தீர்மானம் கைச்சாதிடப்பட்டது. மகளிர், சமாதானம் மற்றும் பாதுகாப்பு (Women, Peace and Security) என்ற இந்தத் தீர்மானம் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை குறிக்கிறது. இத்தீர்மானம் மோதல் சூழல்களிலும் மோதலுக்குப் பின்னர்  பெண்களின் தேவைகளை அங்கீகரிப்பதில் உலகின் கவனத்தை செலுத்தியுள்ளது. அதேபோல் சமாதானம் மற்றும் பாதுகாப்பில் பெண்களின் பங்கின் முக்கியத்துவத்தையும் இது அங்கீகரித்துள்ளது. இந்தத் தீர்மானம் ஊடாகப் பெண்கள் தீர்மானம் எடுப்பதில் அவர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு மற்றும் மோதலைத் தீர்க்கும் பொறிமுறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் காரணத்திற்காகத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசை ஊக்குவித்துள்ளது.

 மகளிர், சமாதானம் மற்றும் பாதுகாப்பு குறித்த உலகளாவிய நிகழ்ச்சி நிரல் நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டது. அந்த நான்கு தூண்கள் பின்வருமாறு:

  • பங்கேற்பு
  • பாதுகாப்பு
  • தடுத்தல்
  • நிவாரணம் மற்றும் இழப்பை ஈடுசெய்தல்

 ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1325க்கு மேலதிகமாக, மகளிர், சமாதானம் மற்றும் பாதுகாப்பு குறித்த நிகழ்ச்சி நிரலின் முன்னேற்றத்தை ஆதரிக்கும் மேலும் ஒன்பது தீர்மானங்கள் காணப்படுகின்றன. அவைகள் பின்வருமாறு,

1 – ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை தீர்மானம் 1820

2 – ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை தீர்மானம் 1888

3 – ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை தீர்மானம் 1889

4 – ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை தீர்மானம் 1960

5- ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை தீர்மானம் 2106

6- ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை தீர்மானம் 2122

7 – ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை தீர்மானம் 2242

8- ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை தீர்மானம் 2467

9 – ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை தீர்மானம் 2493

பெண்களின் உரிமைகளுக்கான சட்டக் கட்டமைப்பு

பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான உடன்படிக்கை Convention on the Elimination of All Forms of Discrimination Against Women – CEDAW)

பொருத்தமான தலையீடு

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் மற்றும் சட்டங்கள்குறித்து, இந்தக் கொள்கைகளின் அடிப்படையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக அர்த்தமுள்ள தலையீட்டை மேற்கொள்வது உறுப்பு நாடுகளின் பொறுப்பு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எந்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்டாலும், ஐம்பத்திரண்டு சதவீத பெண் மக்களின் எதிர்காலம்குறித்த உடன்படிக்கையை  அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதை இந்த எழுத்துக்கள்மூலம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதுவரை முன்மொழிவுகள் மற்றும் அறிக்கைகள்  வடிவில் மாத்திரம்  இருந்த இந்த விடயம் தொடர்பில் தேசிய  நடைமுறை திட்டம்  முன்வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்கள்  எதிர்கொள்ளும் அநீதிகளுக்கு எதிராகச் செயற்படவும் ஒரு வலுவான கருத்தியல் அடித்தளம் உருவாகியுள்ளது.

பெரும்பாலும் நாம் பெண்கள் தொடர்பான கருத்தாடலை  தொடங்குவது அவர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் என்ற அடிப்படையிலே இருந்தாகும். ஏனென்றால் பெண்களின்  வாழ்க்கையின் யதார்த்தம் அப்படித்தான் என்பதனால் ஆகும். இயற்கை அல்லது ஆணால் ஏற்படும் மோதல்கள் அல்லது காலநிலை மாற்றங்களில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். 2004 சுனாமி, முப்பதாண்டு கால யுத்த மோதல்கள், இதுவரை தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடி போன்றவற்றின்போது இந்த அனுபவம் இலங்கைக்கும் பொதுவானது. ஆனால், பேரழிவு அனுபவங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசமானது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மையாகும்.

பொதுவான தீர்வு ஏற்புடையதா?

ஒரு பெண்ணின் இந்த அழுத்தத்தின் அனுபவம் அவளது இனம், வர்க்கம், சாதி மற்றும் மதத்தைப் பொறுத்து மாறுபடும். எனவே, ஒரு பொதுவான தீர்வு பெண்களின் உரிமைகள் அல்லது பாதுகாப்பு கோட்பாட்டிற்கு பொருந்தாது. லெனின் கூட, ‘வாருங்கள் போராடுவோம் – நாங்கள் இதனை மாற்றுவோம்’ போன்ற முழக்கங்கள் பெண்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்காது என்று கூறியுள்ளார். பொருளாதார முறை மாற்றமடைவதால் அல்லது ஊழல் நிறுத்தப்படுவதால் பெண்களுக்கு அழகான உலகம் பிறக்காது என்று ரஷ்யப் புரட்சி வரலாற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அரசியலமைப்பில் சமத்துவம் குறிப்பிடப்பட்டதாலோ அல்லது சட்டம் திருத்தப்பட்டதாலோ பெண்களது  வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை என்பதற்கு இலங்கையிலிருந்து உதாரணங்களைக் குறிப்பிடலாம்.

அவசர நிலை, மனிதாபிமான நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் இயற்கை அழிவுகள் மற்றும் மோதல் மற்றும் பால்நிலை பாகுபாட்டுடன் நேரடி தொடர்ப்பை கொண்டுள்ளது. தகவல் மற்றும் ஆதாரங்களுக்கான அணுகல் இல்லாமை, வேரூன்றிய பாலின நிலைப்பாடுகள், ஏற்றத்தாழ்வுகள் மற்றும் கலாச்சார தடைகள் காரணமாகப் பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகள் இயற்கை பேரழிவின்போது மற்றும் மோதல்களின்போது மிகவும் தாக்கத்திற்கு உற்படுகின்றனர். எடுத்துக்காட்டாக, 2004 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமிக்குப் பின்னர் இடம்பெயர்ந்த பெண்கள் ஐந்தில் ஒருவர் இறந்ததுடன் அது இடம்பெயர்ந்த ஆண்களின் இறப்பு விகிதத்தில் இருமடங்கு அதிகமாகும் (UN Women Unit, ‘Conflict Prevention, Transforming Justice, Peace Securing:  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 1325’ நடைமுறைப்படுத்தல் தொடர்பான உலகளாவிய ஆய்வு(2015) பக் 86).

குடும்ப வன்முறையை எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும், கையில் பணம் இருந்தால் மட்டும் சமத்துவத்திற்கு உத்தரவாதம் இல்லை என்று சொல்வார்கள். பெண்கள் பணம் மூலம் செழிப்படைவதன் மூலம்  பெண்கள் ஏதேனும் சுதந்திரம் பெற்றுக்கொண்டால், அது ஆணின் கவலையை மேலும் தூண்டக்கூடும். சமத்துவம் என்பது வேலையைப் பெறுவது அல்லது பொருளாதார ரீதியாகச் செழிப்படைவது மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் கல்வித்தரம் ரீதியாக உயர்ந்த நிலையை அடைந்தபோதிலும் உயர் பதவிகளைப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை பெண்கள் தாய் நிலையை அடைந்ததன் காரணமாக என்பதனை உங்களுக்கு எத்தனை பேர் கூறியுள்ளனர்?

உண்மையைப் பேசுவோம்

ஆகவே உண்மையைப் பேசுவோம். பெண்களின் உரிமைகள் ஒரு நாட்டின் அரசியல் பார்வையுடன் பிணைக்கப்பட்டுள்ளன. அதற்கேற்ப நிர்வாகத்தை வழிநடத்தும் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். பொருளாதாரம் அதில் பிரதிபலிக்க வேண்டும்.

பெண்களின் அரசியல் பாத்திரத்தைப் பாருங்கள். அவள் இந்த ஆணாதிக்க கட்டமைப்பின் ஒரு பங்காளியாக ஆனாளே தவிர அவளுடைய விடுதலைக்காகவோ உரிமைகளுக்காகவோ போராடுகிறவளாய் மாறியதாக இல்லை. பெண்களின் உரிமைக்காகப் போராடுவதை தடுப்பதே முழு அரசியல் தத்துவத்தின் நோக்கமாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்ள நாம் தயங்குகிறோம். எப்பொழுதும் யாரிடமாவது யாருக்காவது வீட்டிலோ, தேர்தலிலோ சண்டை போடுவதை தவிர அவள் பெற்ற உரிமை மற்றும் வெற்றி என்ன?

தேர்தல் அறிவிப்புகளைப் படித்தாலே இது புரியும். தற்போது பெண்கள்  மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால், தேர்தல் வாக்குறுதிகள்மூலம் அவரது மதிப்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் அறிக்கைகள் வெறும் கொள்கை கட்டமைப்புகள் மாத்திரங்கள் ஆகும். வெற்றி பெற்ற பிறகு தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதியளிக்கப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்த முடியாத வெறும் அறிக்கைகள் மாத்திரம் தான் அவர்கள் கூறியிருக்கிறார்கள் என்பதை பலரும் அறிவர்.

ஆனால் நாம் எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கவேண்டியது மகளிர் உரிமை மற்றும் சமத்துவம் தொடர்பான அரச நிர்வாக நோக்கின் புரட்சிகர மாற்றத்தின் ஊடாகவே ஆகும். இது ஒரு நிர்வாகத்தின் பார்வையை பெண்ணியமாக்குவதன் மூலமோ அல்லது பாலின பகுப்பாய்வைப் பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பின் ஒரு அங்கமாக மாற்றுவதன் மூலம் மட்டுமே இதனை மேற்கொள்ள முடியும்.

இப்படி மாற்றத்தை ஏற்படுத்துவோமா?

நாட்டின் சட்ட கட்டமைப்பைச் சர்வதேச சட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதன் மூலம் காலாவதியான சட்ட நடைமுறைகள் மற்றும் கட்டளை சட்டங்களைத் திருத்துதல்.

அமைதி மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் பெண்களின் முழுப் பாதுகாப்பையும் முழுப் பங்கேற்பையும் உறுதி செய்தல்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான சமத்துவக் கொள்கையை நாம் எப்போதும் கடைப்பிடிப்போம்.

சட்ட மற்றும் பிற தொடர்புடைய நடவடிக்கைகள் மூலம் நடைமுறையில் சமத்துவம் அடையப்படுவதை உறுதி செய்வோம்.

பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் தடைசெய்யும் தகுந்த சட்ட மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம்.