ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 57வது அமர்வின் போது, ​​ இலங்கை அரசாங்கமானது இலங்கையின் மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான தீர்மானங்களுக்கு முன்னராக (குறிப்பாக 51/1) நிறுவப்பட்ட ஆணைகளை நீட்டிக்கும் 57/1 தீர்மானத்தை முறையாக நிராகரித்தது. ஒக்டோபர் 9, 2024 அன்று வாக்கெடுப்பின்றி ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானமான 57/1 ஆனது மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயர் அலுவலகம் (OHCHR) இலங்கையில் மனித உரிமைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்பதுடன், அடுத்த பேரவை அமர்வில் வாய்மூலமான புதுப்பிப்பையும் 2025 இல் விரிவான முன்னேற்ற அறிக்கையை வழங்க வேண்டும் என்று தேவைப்படுத்துகின்றது.

ஒக்டோபர் 2022 இல் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானமான 51/1, 19 கூறுகளை உள்ளடக்கியதாகும். எட்டாவது ஏற்பாட்டின் கீழ், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் தொடர்புடைய குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரித்தல், பாதுகாத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் ஆகியவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது. இது கடுமையான மனித உரிமை மீறல்கள் அல்லது சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப் பிழைத்தவர்களுக்கான நீதி செயன்முறைகளை ஆதரிக்குமாறு உறுப்பு நாடுகளை வலியுறுத்தும் அதே வேளையில், சாட்சியங்களைச் சேகரிக்க, சரிபார்க்க மற்றும் பகுப்பாய்வு செய்வதற்கான அதிகாரத்தை விரிவுபடுத்துவதுடன் வலுப்படுத்துகிறது (தீர்மானம் 51/1 இனை இங்கே அணுக முடியும்).

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 57வது அமர்வில், ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியான ஹிமாலி அருணதிலகவின் அறிக்கையானது, 51/1 மற்றும் முன்னய 46/1 ஆகிய இரண்டு தீர்மானங்களுக்குமான இலங்கையின் உறுதியான எதிர்ப்பை தெளிவுபடுத்துகிறது. இந்தத் தீர்மானங்கள் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் (OHCHR) அலுவலகத்திற்குள் வெளியக ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை நிறுவியுள்ளதுடன், இது இலங்கையின் இறையாண்மை மற்றும் உள்ளக நீதித்துறை செயன்முறைகளை மீறுவதாக வாதிடுகின்றது. A/HRC/57/G/1 ஆவணத்தில், உயர் ஸ்தானிகரின் அறிக்கையிலிருந்து இலங்கை முரண்படுவதனை சுட்டிக் காட்டுவதுடன், 51/1 தீர்மானம் இலங்கையின் அனுமதியின்றி அத்துடன் பிரிக்கப்பட்ட வாக்கெடுப்பின் மூலமாக நிறைவேற்றப்பட்டதுடன், இது ஒருமித்த தன்மையின் பற்றாக்குறையை குறிக்கிறது.

இலங்கையின் பதிலளிப்பானது, பொறிமுறை UNHRC இன் பாரபட்சமற்ற தன்மை, புறவயமான நிலை மற்றும் தெரிவு செய்யப்படாமை ஆகிய கொள்கைகளுக்கு முரணானது என்பதை வலியுறுத்துகிறது. எப்போதும் விரிவடைந்து வரும் ஆணையின் இறையாண்மை மற்றும் வரவு-செலவுத் திட்ட தாக்கங்கள் பற்றிய கரிசனங்களை மேற்கோள் காட்டி, எந்தவொரு இறையாண்மையுடைய அரசும் அதன் அரசியலமைப்பு செயன்முறைகளைத் தடுக்கும் வெளிப்புற அமைப்புக்கு உட்பட்டதாக இருக்கக்கூடாது என்று இலங்கை வெளிப்படுத்தியது. இலங்கை நீடிப்பினை நிராகரித்த போதிலும், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் அதன் உள்நாட்டு முன்னேற்றம் குறித்து பேரவைக்கு தொடர்ந்து தகவலளிப்பதாக கூறி, UNHRC மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுடனான அர்த்தமுள்ள ஈடுபாட்டிற்கான தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியது.

தீர்மானத்தை நிராகரித்த போதிலும், இலங்கையின் அரசாங்கம் UNHRC மற்றும் ஏனைய சர்வதேச மனித உரிமை அமைப்புகளுடன் கூட்டுறவான மற்றும் ஆக்கபூர்வமான உறவைப் பேணுவதாக உறுதியளித்துள்ளது. உள்நாட்டு மட்டத்தில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளில் முன்னேற்றம் குறித்து பேரவைக்கு தெரிவிக்கப்படுவதை உறுதிசெய்து, பிரதான மனித உரிமை பொருத்தணைகள் மற்றும் உலகளாவிய காலத்திற்கு கால மீளாய்வு (UPR) செயன்முறைக்கான உறுதிப்பாட்டை நிலைநிறுத்துவதற்கான அதனது திட்டங்களையும் அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியது. இந்த நிலைப்பாடானது வெளிப்படைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி மற்றும் உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை வலியுறுத்தும் அரசியல் கலாசாரத்தை வளர்ப்பதற்கான ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய நிர்வாகத்தின் நோக்குடன் இணைந்துள்ளது.

இந்த நிலைப்பாடு உள்நாட்டில் கலவையான பிரதிபலிப்புகளை ஈர்த்துள்ளது. சில சிவில் சமுதாயத் தலைவர்கள் தேசியவாதப் பிரிவினரை சமாதானப்படுத்தும் முயற்சியாகக் கருதுகின்ற அதே நேரத்தில் மற்றவர்கள் சர்வதேச மேற்பார்வையின்றி பொறுப்புக்கூறல் பிரச்சினைகளை வினைத்திறனாக கையாள்வதில் உள்ள அரசாங்கத்தின் இயலளவு தொடர்பில் கவலை தெரிவிக்கின்றனர். இலங்கையின் மோதலுக்குப் பிந்தைய நீதியைக் கையாளுவதற்கு உள்நாட்டு பொறிமுறைகளா அல்லது சர்வதேச பொறிமுறைகளா மிகவும் பொருத்தமானவை என்பது பற்றிய விவாதம், அரசாங்கம் UNHRC உடனான தனது ஈடுபாட்டில் இந்த புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கும் போது ஓர் முக்கியமான விடயமாக உள்ளது.

ஒக்டோபர் 8ஆம் திகதி, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அமைச்சரவை, 57/1 தீர்மானத்தை நிராகரித்ததுடன், மனித உரிமைகள் பிரச்சினைகளையும் நல்லிணக்கத்தையும் வெளியக தலையீடுகளுக்குப் பதிலாக உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலமாக தீர்த்து வைப்பதைத் தேர்ந்தெடுத்தது. இந்த நிலைப்பாட்டை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் உறுதிப்படுத்துகையில்;

“முக்கியமான மனித உரிமைகள் கரிசனங்கள் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான உள்நாட்டு செயன்முறைகளுக்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. ஆக்கபூர்வமான உரையாடலில் UNHRC மற்றும் அதன் மனித உரிமைகள் பொறிமுறைகளுடன் எங்களது ஒத்துழைப்பை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.” என்றார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57வது அமர்வு

– 2024‑09‑09 ஆம் திகதி தொடக்கம் 2024‑10‑11 ஆம் திகதி வரை ஜெனிவா நகரத்தில் நடாத்தப்படுகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது அமர்விற்குரியதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், இலங்கை அரசாங்கத்தின் நிலைபாட்டை பின்வருமாறு முன்வைப்பதற்கு அமைச்சரவையின் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.

* ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில் பிரேரிக்கப்பட்டுள்ள வரைவினை இலங்கை கடுமையாக நிராகரிப்பதாகவும், மனித உரிமைகள் பேரவையின் 51/1 ஆம் பிரேரிப்புக்கு இலங்கை தொடர்ந்தும் எதிர்ப்பதாகவும் வெளிவாரியான சாட்சிகளை சேகரிக்கும் பொறிமுறையொன்றின் அதிகாரங்களை நீடிக்கும் எந்தவொரு பிரேரிப்புக்கும் உடன்படாது.
* இந்தப் பிரேரிப்பை நிராகரித்தாலும், உள்நாட்டு செயற்பாடுகளின் மூலம் நல்லிணக்கம் உள்ளிட்ட முக்கிய மனித உரிமை பிரச்சனைகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை உறுதியாக உள்ளது.
* இலங்கை மனித உரிமைகள் பேரவை மற்றும் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறை என்பவற்றுடன் ஒத்துழைப்புடன்கூடிய அர்த்தமுள்ள கலந்துரையாடல்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

(பாராளுமன்ற இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது)

கொழும்பு பல்கலைக்கழக வரலாற்றாசிரியரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ளார். அரசாங்கம் தீர்மானத்தை அங்கீகரித்திருந்தால், அரசாங்கத்தின் சீர்திருத்தங்களை எதிர்க்கும் சிங்கள தேசியவாதப் பிரிவினரின் எதிர்ப்பினை அது எதிர்நோக்கியிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

தேசியவாத உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில், தமிழ்க் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு (UPFA) அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட 1995 “தீர்வுப்பொதியை” எதிர்த்ததன் பின்னர் சிங்கள தேசியவாதக் குழுக்கள் வரவேற்பை பெற்றுள்ளதாக பேராசிரியர் தேவசிறி குறிப்பிட்டார். இவ்வாறான நடவடிக்கைகள் அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட சிக்கலான நிலைமைக்கு வழிவகுக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.

தேவசிறி தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு புதிய அணுகுமுறைக்காக பரப்புரையாற்றுவதுடன், மனித உரிமைக் கரிசனங்களைத் தீர்ப்பதற்கான உள்நாட்டு அணுகுமுறையை ஆதரிக்கிறார். எவ்வாறாயினும், அவர் இது தொடர்பாக அரசாங்கத்தின் நோக்கங்கள் எவ்வளவு உண்மையானவை என்று வினா எழுப்புவதுடன், ஓர் எரிச்சலூட்டும் சூழ்நிலையைத் தவிர்ப்பதற்காக உடனடியான, நடைமுறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் கொள்கைகளை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் பின்பற்றுவதாக மனித உரிமை செயற்பாட்டாளரான சுனந்த தேசப்பிரிய சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான அம்பிகா சற்குணநாதன், தீர்மானத்தை இலங்கை நிராகரித்தமையானது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்காமல் உத்தியோகபூர்வ நிராகரிப்பாக செல்லுபடியாகாது என்று குறிப்பிட்டார்.

“இலங்கையின் புதிய அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை முன்னைய அரசாங்கம் நிராகரித்தது போலவே நிராகரித்தது. ஆனால் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் வாக்கெடுப்பினை கோரவில்லை. அவர்கள் வாக்களிக்கக் கோரியிருந்தாலும், தீர்மானத்தை நீட்டிப்பதற்கு போதுமான வாக்குகள் இருந்ததாகத் தெரிகிறது. முகத்தோற்றமளவில், ​​ அரசாங்கத்தின் நிராகரிப்பானது பொதுத் தேர்தலுக்குப் பிறகு NPP பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தால், ஆயுதப் போரின் போது நடந்த மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்ற நம்பிக்கையை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தவில்லை. அதனுடன் இணைந்ததாக இனப்பிரச்சினைக்கான தீர்வான குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வான மாகாண சபைகளை விஜித ஹேரத் நிராகரித்ததுடன், NPP இராணுவத்தை நேசிப்பதுடன், NPP யின் பிரச்சாரமும் நடவடிக்கையும் இன முரண்பாடு தொடர்பான முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமா என்ற கவலையை ஏற்படுத்துகிறது. பொதுத் தேர்தலுக்கு முன்னர் சிங்கள பௌத்த தேசியவாத வாக்காளர்களை கோபப்படுத்தி இழக்க விரும்பாத காரணத்தினால் அவர்கள் தீர்மானத்தை நிராகரித்திருக்கலாம். அதனால்தான் அவர்கள் வாக்களிப்பிற்கு கோரவில்லை. காரணம் எதுவாக இருந்தாலும், புதிய அரசாங்கம் அமைந்த பின்னரே, அந்தத் தீர்மானத்தை அது எவ்வாறு கையாள்கிறது என்பதை நாம் பார்க்க முடியும்” என்று சற்குணநாதன் குறிப்பிட்டார்.