கறுப்பு யூலை என்ற சொற்றொடர் இலங்கையின் வரலாற்றில் ஒரு கொடூரமான நிகழ்வின் நினைவுகளை எழுப்புகிறது, ஆனால் புதிய தலைமுறையில் பலருக்கு இந்த சோகத்திற்கு வழிவகுத்த ஆழமான காரணங்கள் மற்றும் உந்துதல்கள் பற்றி தெரியாமலிருக்கின்றது. போர் நன்கு அறியப்பட்டதாக இருந்தாலும், அதனைத் தூண்டிய அடிப்படைக் குறைபாடுகள் தொடர்பில் குறைவாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. இந்த நிகழ்வுகளுக்கு பல வரலாற்று காரணிகள் பங்களிப்பு செய்திருந்தாலும், இந்த ஆக்கமானது யூலை கலவரங்களுக்குப் பின்னால் உள்ள மிக உடனடியான காரணங்களைப் பற்றிய உட்பார்வைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

1982 ஆம் ஆண்டு அபிவிருத்திச் சபைத் தேர்தல் இடம்பெற்றது. இச்சூழலில் வடக்கில் இத்தேர்தலின் போது வாக்குப்பெட்டிகள் காணாமல் போனமை யாழ்ப்பாணத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவமானது வடக்கில் ஜனநாயகத் தேர்தல் குறித்த ஏமாற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியதுடன் தமிழ் செயற்பாட்டாளர்களை மேலும் வன்முறை நடவடிக்கைகளை நோக்கி தள்ளியது. மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் வன்முறையை அடக்குவதற்காக திறமையான இராணுவ அதிகாரிகள் வடக்கிற்கு அனுப்பப்பட்டனர், ஆனால் அவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்ததுடன், அபிவிருத்தி சபை தேர்தல் காலத்தில் வடக்கு மக்களை அச்சுறுத்தும் முயற்சிகளும் தோல்வியடைந்தன.

யாழ்ப்பாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நூலகம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டபோது நிலைமை மேலும் தீவிரமடைந்தது. இந்தச் செயலை ஐக்கிய தேசியக் கட்சியின் வன்முறையாளர்கள் மேற்கொண்டுள்ளனர் என்பது வெளிப்படையானதாகும். யாழ் நூலகத்தில் ஈடு செய்ய முடியாத அரிய நூல்களின் தொகுப்பு காணப்பட்டது. இராணுவ பலத்தின் ஊடாக வடக்கு மக்களை இந்த ஒடுக்கும் செயற்பாட்டிற்கு மத்தியில் ஜே.ஆர். ஜெயவர்த்தன 1982 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, தேர்தல் செயன்முறையை இடைநிறுத்தி, வாக்கெடுப்பு மூலமாக பாராளுமன்ற காலத்தை நீட்டிக்குமாறு பரிந்துரைத்தார். ஜெயவர்த்தனவின் இந்த நடவடிக்கைகள் வடக்கிலும் தெற்கிலும் அதிகரித்தளவிலான கோபத்தை ஏற்படுத்தியது.

வடக்கிலும் தெற்கிலும் அதிகரித்து வரும் அதிருப்தியைத் தீர்க்கும் முயற்சியில், 1983 யூலை 20ஆம் திகதி அனைத்துக் கட்சி மாநாட்டைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி ஜயவர்தன முடிவு செய்தார். இந்த சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கைத் தொழிலாளர் சங்கத்தின் அரசியல் பிரிவும் மட்டுமே பங்கேற்றன.”

தேசியப் பிரச்சினை: இனப்பிரச்சினையிலிருந்து உலக நாடு வரை என்பதிலிருந்து, பக்கங்கள் 291-292, எழுதியவர் – ஜனதாச பீரிஸ்

“இத்தகைய பதற்றத்தின் பின்னணியில் இலங்கை வரலாற்றின் போக்கை மாற்றிய மிகப்பெரிய சோகம் ஒன்று நடைபெற்றது. இது யூலை 23, 1983 அன்று இரவு யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டபோது நிகழ்ந்தது. இந்தச் சம்பவம் சிங்கள தேசியவாதிகள் மத்தியில் விரைவாக பரவியது. கொழும்பில், மற்றும் ஜெயவர்த்தன அரசாங்கத்திற்குள் இருந்த கடும்போக்கு சக்திகள் நிலைமையைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தனர். அதே சமயம், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரிடையே ஒரு கலகச் சூழல் உருவாகியிருந்தது. தமிழ் மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து, அவர்களின் சொத்துக்களைச் சூறையாடி அழித்தொழிக்கத் தயாரானார்கள். அந்த நேரத்தில், இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் திஸ்ஸ வீரதுங்க, கொழும்பில் இருந்து குருநகர் இராணுவ முகாமுக்கு யூலை 24 ஆம் திகதி ஏற்கனவே வந்திருந்தார்.

“இதற்கிடையில், கொழும்பில் உள்ள பொரளை மயானத்தில் உயிரிழந்த 13 இராணுவத்தினரின் இறுதிக் கிரியைகள் பொது மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த பொது இறுதி ஊர்வலம் நமது நாட்டின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பேரழிவிற்கு அடித்தளமிட்டது. தலைவர்கள் இந்த பொதுக் காட்சி தூண்டக்கூடிய கடுமையான அமைதியின்மையை அடையாளம் காணத் தவறிவிட்டனர். உடல்கள் நேரடியாக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால், அமைதியின்மைக்கான அபாயத்தைக் குறைத்திருக்கலாம். இருப்பினும், அதற்கு பதிலாக சட்டம் மற்றும் ஒழுங்கானது வன்முறைக் கும்பல் மற்றும் வன்முறையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஜனதாச பீரிஸ் எழுதிய தேசியப் பிரச்சினை: இனப்பிரச்சினையிலிருந்து உலக நாடு வரை என்பதிலிருந்து, பக்கங்கள் 293-294

களனியில் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டவர்கள், அப்போதைய கைத்தொழில் அமைச்சர் சிரில் மெத்யூவின் தலைமையிலான குழுவினராக அடையாளம் காணப்பட்டனர். கொழும்பில், குறிப்பாக வெள்ளவத்தையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்ட பரவலான அழிவுக்குக் காரணமான குழுவானது ஆளும் கட்சியுடன் இணைந்த தேசிய தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரால் தலைமை தாங்கி வழிநடாத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. தெஹிவளை மற்றும் கல்கிசையில் ஐ.தே.க மாநகர சபை உறுப்பினர் ஒருவரால் ஒருங்கிணைக்கப்பட்ட கும்பலானது, பெட்டாவில் 442 கடைகளை அழித்ததுடன் ஏனைய கொலைகள் பிரதமருக்கு நெருங்கிய சகாவான அலோசியஸ் முதலாளியின் மகனால் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள், அரசாங்க அமைச்சர்கள் மற்றும் கட்சித் தலைமையகங்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றிய பிரதம மந்திரியின் நெருங்கிய கூட்டாளியாக அறியப்பட்ட வன்முறையாளர்கள் ஆகியோர் ஈடுபட்டதுடன், சில உறுப்பினர்கள் இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் உத்தியோகபூர்வ சீருடைகளை அணிந்திருந்தனர். இந்த தாக்குதல்களுக்கு மற்றைய சான்றுகளுடன் அரசு மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன. அரசாங்கத்தின் வெளிப்படையான ஆதரவின் காரணமாக, போராட்டங்களுக்கு சாட்சியமளிப்பது அல்லது இந்தக் கொலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது சவாலானதாக இருந்தது. எவ்வாறாயினும், ஆரம்ப அதிர்ச்சி நீங்கிய பின்னர், சிங்கள மற்றும் பறங்கிய குடியிருப்பாளர்கள் தங்களது சுற்றுப்புறங்களில் தீ வைத்து கொலை செய்ய முயற்சிக்கும் கும்பலை எதிர்க்க ஏற்பாடு செய்ய ஆரம்பித்தனர்.

“இந்த கொலைகளை, தமிழ் மக்கள் அடித்துக் கொல்லப்பட்டோ, உயிருடன் எரிக்கப்பட்டோ, அல்லது தெருக்களில் அல்லது வாகனங்களில் வன்முறையாகக் கொல்லப்பட்ட சம்பவங்களை நேரில் பார்த்த நபர்களிடம் பேசினோம். பொலிசார் தலையிடுவதற்கு எதுவித முயற்சியும் எடுக்கவில்லை. சம்பவங்களில் ஒன்று, நோர்வேயில் இருந்து வந்த ஒரு சுற்றுலாப் பயணியால் விவரிக்கப்பட்ட ஓர் குழுவானது ஒரு சிறிய பேருந்தில் இருந்த 20 பயணிகளை உயிருடன் எரித்தமையாகும். மற்றொரு மோசமான செயல், வெலிக்கடை சிறையில் வழக்கு விசாரணைக்காக எதிர்பார்த்துள்ள அல்லது இராணுவத்தால் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்ட 35 கைதிகளை கொன்றமையாகும். அனைவரும் இலங்கை தமிழர்களாவர். அரசாங்கத்திற்கு தெரியாமல் மற்றும் தேசிய பாதுகாப்பு பேரவையின் உயர்மட்டத்தில் இருந்து உறுதியளிக்கப்பட்டாலன்றி, இத்தகைய ஒழுங்கமைக்கப்பட்ட படுகொலைகள் சாத்தியமில்லை என்று நாங்கள் நம்புகின்றோம்.

“இந்த படுகொலை, அதே அளவில் இல்லாவிட்டாலும், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட போதிலும், கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் இன்னமும் மூன்று நாட்களுக்கு தடையின்றி தொடர்ந்தது. யூலை 26, செவ்வாய்கிழமை, சில குழுக்கள் கண்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், அங்கும் இதேபோன்ற அழிவுச் செயல்கள் நடைபெற்றன. வன்முறையானது பின்னர் மாத்தளை, நாவலப்பிட்டி, பதுளை, நுவரெலியா போன்ற ஏனைய பிரதேசங்களுக்கும் பரவி, இந்து ஆலயங்களும் அழிக்கப்பட்டன. 27ஆம் திகதி, தமிழ் அரசியல் கைதிகளின் மற்றொரு படுகொலை நிகழ்வு மேலும் 18 பேரின் உயிரை பறித்தது. வியாழன் மாலை பகிரங்க வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜே.ஆர்.ஜெயவர்தன தமிழர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை இரக்கத்தின் ஒரு வார்த்தை கூட இல்லாமல் நியாயமானது என பாதுகாத்ததார். மற்ற நடவடிக்கைகளுடன் இணைந்து இந்த ஆத்திரமூட்டும் அறிக்கை வெள்ளியன்று மேலும் தீ வைப்பு மற்றும் கொலைச் சம்பவங்களை தூண்டியது.”

உடைந்த பனைமரத்திலிருந்து, எழுதியவர் – ராஜன் ஹூல், தயாபால திரணகம, K. ஸ்ரீதரன், ரஜினி திரணகம (மூலப்பிரதி Sri Lanka: The Holocaust and After இலிருந்து எடுக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டது), L. பியதாச)