2009ஆம் ஆண்டு மே மாதம் இறுதிக்கட்ட யுத்த காலப்பகுதியில், இலங்கை இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான தாக்குதல்களுக்கு மத்தியில், விடுவிக்கப்படாத பிரதேசங்களில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனர். அத்தோடு, முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு அருகில் காணப்பட்ட சிறியதோர் இடத்தில் மக்கள் பல நாட்களாக அடைபட்டிருந்தனர். அவர்களுக்கு அவசியமான உணவு, குடிநீர், மருந்துகள் போன்றவை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கிடைத்தன. ஆகையால், பாரிய வாழ்க்கைப் போராட்டத்திற்கு மத்தியில் அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை அவர்களுக்கு காணப்பட்டது.
இந்நிலையில், தமது உறவுகள் கொல்லப்பட்ட நாளாக, ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18ஆம் திகதியை தமிழ் மக்கள் நினைவுகூருகின்றனர். மே மாதம் 18ஆம் திகதி மற்றும் அதனை அண்மித்த நாட்களில் உயிர்நீத்த உறவினர்கள் மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து மக்களையும் நினைவுகூரும் வகையில் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை இந்த மக்கள் பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுக்கின்றனர். குறிப்பாக, இறந்த தமது உறவுகளுக்காக தீபம் ஏற்றுதல் மற்றும் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளல் போன்ற நிகழ்வுகள், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடம்பெறும்.
இந்த நினைவேந்தல் நிகழ்வுகளின் போது, தமிழ் மக்கள் தாம் தயார்செய்யும் முள்ளிவாய்க்கால் கஞ்சி என்ற விசேடமான கஞ்சியை பகிர்ந்தளிப்பதற்காக பல்வேறு இடங்களில் தானசாலைகளை அமைப்பார்கள். யுத்தத்தின் இறுதி நாட்களின் போது முள்ளிவாய்க்காலில் அவர்கள் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், நீர், அரிசி, சிறிதளவு உப்பு கலந்து தயாரிக்கப்பட்ட கஞ்சியே அவர்களுக்கு ஓரளவு பசியை போக்க உதவியது. அதனை பிரதிபலிக்கும் வகையிலேயே இது முள்ளிவாய்க்கால் கஞ்சி என அழைக்கப்படுகின்றது. அதற்கு சுவை மற்றும் பசியைத் தணிக்கும் ஆற்றல் இல்லாவிட்டாலும், உயிர்வாழும் வலிமையைக் கொடுத்தது.
தமிழ் மக்களை பொறுத்தவரை, முள்வாய்க்கால் கஞ்சி என்பது அவர்களுக்கு உணவு என்பதை விட ஒரு சின்னமாக உள்ளது. எகிப்தில் அடிமைகளாக இருந்த மக்கள் அதிலிருந்து விடுவிக்கப்பட்டு, தமது சொந்த நிலத்தைத் தேடிப் பயணம் செய்யும் போது, எகிப்தில் தாம் அனுபவித்த துன்பங்களை நினைவுகூரும் வகையில் நொதிக்காத ரொட்டிகளை உண்டனர். அந்தக் கட்டத்தை தாண்டிச் செல்வதை குறிக்கும் வகையிலேயே அவர்கள் இதனைச் செய்தனர். முள்ளிவாய்க்கால் கஞ்சியும் இன்று அவ்வாறான ஒரு அடையாளமாக காணப்படுகின்றது.
சில வருடங்களாக அம்மக்கள் கடைப்பிடித்து வந்த இந்த பாரம்பரியம், 2024ஆம் ஆண்டு தடை செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொண்டு, கிழக்கு மாகாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தானம் நடத்துவதை தடை செய்யும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டனர். கொல்லப்பட்ட தமது உறவினர்களை நினைவுகூரும் வருடாந்த ஒன்றுகூடல்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அச்சுறுத்தினர். இறுதியாக, மே 12ஆம் திகதி இரவு வீடொன்றை முற்றுகையிட்ட சம்பூர் பொலிஸார் மூன்று பெண்களை சித்திரவதை செய்துள்ளதோடு, அவர்களுடன் சேர்த்து மேலும் ஒருவரை கைதுசெய்தனர். கமலேஸ்வரன் தென்னிலா (22), கமலேஸ்வரன் விஜிதா (40), செல்வவினோத் சுஜானி (40) மற்றும் நவரத்னராசா ஹரிஹரகுமார் (43) ஆகியோரே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை நினைவுகூர்வதாக குற்றஞ்சாட்டியே, பொலிஸார் இந்த உத்தரவுகளை பெற்றுள்ளனர். எனினும், ஒவ்வொரு வருடமும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நவம்பர் மாதம் 26ஆம் திகதிக்கு இணையான நாளிலேயே, உயிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் நினைவுகூரப்படுகின்றனர் என, இவ்விடயத்தில் விழிப்புடன் இருக்கும் தமிழ் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மே மாதம் 18ஆம் திகதியன்று, அவர்களின் முழுக்கவனமும் கொல்லப்பட்ட பொதுமக்கள் குறித்தே காணப்படுகின்றது.
இந்நிலையில், இந்த தடை மற்றும் கைதுகளுக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள், சிவில் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இது தொடர்பாக, மனித உரிமைகள் சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அம்பிகா சத்குணநாதன் இவ்வாறு குறிப்பிட்டார். ‘யுத்தத்தில் உயிர்நீத்த அனைவரையும், குறிப்பாக இறுதிக் கட்டத்தில் இறந்த அனைவரையும் தமிழ் மக்கள் மே மாதத்தில் நினைவுகூர்கின்றனர். எனினும், விடுதலைப் புலிகளுக்கு நினைவேந்தல் நடத்தப் போவதாக கூறி, அரசாங்கங்கள் அதற்குத் தடையாக இருக்கின்றன. பயங்கரவாதத்திற்கு புத்துயிர் அளிக்கப் போவதாக கூறுகின்றனர். ஆயுதப் போராட்டத்தில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள், நவம்பர் மாதம் மாவீரர் தினத்தில் நினைவுகூரப்படுகின்றனர். யுத்தத்தில் உயிர்நீத்த அனைவரையும் மே மாதத்தில் நினைவு கூர்கிறோம். கஞ்சி தானத்தை தடைசெய்வதற்கு பொலிஸார் கூறும் காரணங்களில் சுகாதாரமும் ஒன்றாகும். மே தின பேரணிகள் இடம்பெற்றன. அவர்கள் உணவைப் பகிர்ந்துகொண்டனர். அங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். அடுத்த வாரம் வெசாக் பண்டிகை கொண்டாடப்படும். அதற்கும் தானசாலைகள் அமைக்கப்பட்டு தானம் வழங்கப்படும். அவற்றையும் தடைசெய்வதற்கு பொலிஸார் நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொள்வார்களா?’
‘நல்லிணக்கத்தின் மூலம் நீதி கிடைக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள உரிமை இல்லை. இதுபோன்ற நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தவும் உரிமை இல்லை. நடந்தேறிய சம்பவங்கள் அனைத்தையும் மறந்துவிடுவதே நல்லிணக்கம் என்றும், யுத்தம் மற்றும் அதன் பின்னரான விளைவுகள் பற்றிய அரசாங்கத்தின் கண்ணோட்டத்தை நாம் சவாலுக்குட்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் நினைக்கின்றனர். உயிர்நீத்தவர்களை நினைவுகூரவும், இழந்தவற்றிற்கு இழப்பீடுகளை பெற்றுக்கொள்ளவும் உரிமை இருக்க வேண்டும்.’
இவ்விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது. ‘நினைவேந்தல் உரிமையை’ நிலைநாட்டுமாறு 2016ஆம் ஆண்டு மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தும், நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றுக் கொண்டு இந்த நினைவேந்தல் நிகழ்வுகளை பொலிஸார் சீர்குலைத்து வருகின்றனர் என முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் (ICCPR) கீழ் குற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகக் கூறி அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் தமது முறைப்பாட்டில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டில் நீதி, நல்லிணக்கம், உண்மையைத் தேடுதல் அல்லது பாதிக்கப்பட்டவர்களின் சம உரிமைகளை மதிக்கவில்லை என்பதையே, பொலிஸாரின் இவ்வாறான அட்டூழியங்கள் வெளிப்படுத்துகின்றன என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டில் இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க….
https://www.bbc.com/sinhala/articles/crgyg1zzme0o
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் இறுதி நாட்கள் பற்றிய தகவல்கள்
2008:
- யுத்த நிறுத்தம் இரத்துச் செய்யப்பட்டது : இலங்கை அரசாங்கம் ஜனவரி மாத ஆரம்பத்தில் யுத்த நிறுத்தத்தை இரத்துச் செய்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பாரிய தாக்குதலை மேற்கொண்டது.
ஜனவரி 2, 2009:
- கிளிநொச்சி கைப்பற்றப்பட்டது : புலிகளின் உண்மையான தலைநகரான கிளிநொச்சியை இலங்கைப் படையினர் கைப்பற்றி, புலிகளுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தனர். (Wikipedia) (Al Jazeera).
ஏப்ரல் 17, 2009:
- யுத்த நிறுத்தத்திற்கான அழைப்பு : அரசாங்கத்தின் இரண்டு நாள் சண்டை இடைநிறுத்தம் காலாவதியான பின்னர், யுத்த நிறுத்தத்திற்கு புலிகள் அழைப்பு விடுத்தனர். இது ஒரு தந்திரம் என சந்தேகித்த அரசாங்கம், இந்த அழைப்பினை நிராகரித்தது.
ஏப்ரல் 20, 2009:
- சரணடைவதற்கான இறுதி அறிவிப்பு: யுத்த வலயத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேறும் போது, போராளிகள் சரணடைவதற்கு இலங்கை அரசாங்கம் 24 மணிநேர அவகாசத்தை வழங்கியது. ஒரு வாரத்திற்குள் 115,000இற்கும் அதிகமான பொதுமக்கள் வெளியேறினர். (Al Jazeera).
ஏப்ரல் 26, 2009:
- ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்தம் : விடுதலைப் புலிகளை நிபந்தனையின்றி சரணடையுமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்ட நிலையில், விடுதலைப் புலிகள் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை அறிவித்தனர். ஆனால் அரசாங்கம் இதனை நிராகரித்ததுடன் நிபந்தனைகள் இன்றி விடுதலைப் புலிகளை சரணடையுமாறு கோரியது. (Sri Lanka Campaign –).
மே 16, 2009:
- கடலோரக் கட்டுப்பாடு : யுத்தம் ஆரம்பித்த பின்னர் முதன்முறையாக முழு கடற்கரை பகுதியையும் இராணுவம் கைப்பற்றியது. கடுமையான சண்டை இடம்பெற்றுக்கொண்டிருந்த போதும், விடுதலைப் புலிகளை இராணுவம் தோற்கடித்துவிட்டது என, ஜோர்தானில் நடைபெற்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் சந்திப்பின் போது அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார். (Wikipedia).
மே 17, 2009:
- இறுதிக்கட்ட சண்டைகள் : பொதுமக்களைப் போல படகில் தப்பிச்செல்ல முயற்சித்த 70இற்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். மோதலை முடிவுக்கு கொண்டுவர இராணுவம் அழுத்தம் கொடுத்த போது, மேலும் பலர் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர். நான்கு நாட்களுக்குள் 72,000இற்கும் அதிகமான பொதுமக்கள் விடுவிக்கப்பட்டதாக இராணுவம் அறிவித்தது. (Wikipedia) (Wikipedia).
மே 18, 2009:
- மோதல் முடிவுற்றது : எஞ்சியிருந்த விடுதலைப் புலிகளின் எதிர்ப்பை முடியடித்து, முழு நாட்டையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துவிட்டதாக இராணுவம் அறிவித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நோயாளர் காவு வண்டியில் தப்பிச் செல்ல முற்பட்ட போது விசேட அதிரடிப்படையினரால் கொல்லப்பட்டார். (Wikipedia) (Al Jazeera).
பின்விளைவும் இடம்பெயர்வும்
- யுத்தத்திற்கு பின்னரான நிலை: யுத்தம் உத்தியோகபூர்வமாக நிறைவுக்கு வந்த நிலையில், இடம்பெயர்ந்த சுமார் 300,000 பொதுமக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அதிகரித்த சனக்கூட்டம், போதிய வசதியின்மை மற்றும் பொருட்கள் இல்லாத நிலை என இந்த முகாம்களின் நிலை மிகவும் கடுமையானதாக காணப்பட்டது. இது குறித்து ஆழ்ந்த கரிசனையை வெளியிட்ட சர்வதேச அமைப்புகள், உடனடி மனிதாபிமான உதவியை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தின. (Wikipedia) (Facts and Details).
நினைவுகூருவதற்கான உரிமை என்பது தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் கடந்த காலத்தை நினைவுகூரவும், கௌரவிக்கவும், குறிப்பாக ஆழ்ந்த அதிர்ச்சி, இழப்பு அல்லது அடக்குமுறையை அனுபவித்த சூழ்நிலைகளில் அவர்களின் உரிமைகளை அங்கீகரித்து பாதுகாப்பதை உள்ளடக்குகிறது. இந்தக் கருத்து மனித உரிமைகள், வரலாற்று நீதி மற்றும் சமூகங்களின் கூட்டு நினைவு ஆகியவற்றுடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளது.