1981ஆம் ஆண்டு மே மாத இறுதியில், யாழ்ப்பாண அபிவிருத்திச் சபைத் தேர்தல் தினத்தன்று, யாழ்ப்பாண நகரம் அரசாங்கப் பாதுகாப்புப் படைகளாலும், தொடர்புடைய அரசியல்வாதிகளாலும், அவர்கள் ஏவிய குண்டர்களாலும் நிரம்பியது. சாதாரண சூழ்நிலையில் தேர்தலை இனி தொடர முடியாது என்பது அப்போது தெளிவாகியது. மே 31ஆம் திகதி இரவு, யாழ்ப்பாணத்தின் மத்திய பகுதியில் ஒரு பெரிய தீப்பரவல் வெகு தொலைவில் காணப்பட்டது, இது குடியிருப்பாளர்களின் கவனத்தை ஈர்த்தது. எனினும், பாதுகாப்பு படையினர் தடுப்புகளை அமைத்திருந்ததால், பலரால் அந்த இடத்திற்குச் செல்ல முடியவில்லை. “யாழ்ப்பாண நூலகம் எரிகிறது”  என்ற செய்தி விரைவாகப் பரவி இன்றும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது.

20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் செயலாளராகப் பணியாற்றிய கே.எம்.செல்லப்பாவின் அனுசரணையின் கீழ் யாழ் நூலகம் நிறுவப்பட்டது. அவர் பல ஆண்டுகளாக சேகரித்த  புத்தகங்களின் தனிப்பட்ட தொகுப்பை 1933ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கள் பார்வைக்கு கையளித்தார். இது ஒரு முக்கிய பொது நூலகமாக மாறுவதற்கான ஆரம்பத்தை சுட்டி நிற்கின்றது. வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் நூலகங்கள் கட்டுவதற்கு அரசாங்க அனுமதியைப் பெற்ற பின்னர், செல்லப்பா 1934இல் யாழ்ப்பாண வைத்தியசாலை வீதியில் ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து நூலகத்தை முறையாக நிறுவினார். இட நெருக்கடி காரணமாக 1936ஆம் ஆண்டு காலப்பகுதியில் நூலகம் அபுபக்கர் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இது பின்னர் 1935இல் மாநகர மாவட்டச் சபைக்கு மாற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் “மாநகரசபை” அந்தஸ்துக்கு தரமுயர்த்தப்பட்டபோது, ​​அதன் முதலாவது நகரபிதாவான சாம் ஏ.சபாபதி, யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகிலுள்ள காணியில் புதிய நூலகக் கட்டிடத்தை கட்டுவதற்கான முன்மொழிவை முன்வைத்தார். கட்டிட வடிவமைப்பானது, திராவிட கட்டிடக்கலை கூறுகளை உள்ளடக்கிய மதுரையைச் சேர்ந்த புகழ்பெற்ற கட்டிடக் கலைஞரான வி.எம்.நரசிங்கம் என்பவருக்கு வழங்கப்பட்டது. 1954 மார்ச் 29இல் கட்டுமானம் ஆரம்பிக்கப்பட்டு, 1959  அக்டோபர் 11இல் நிறைவடைந்தது. சுமார் 15 வருடங்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட அப்போதைய நகரபிதா அல்பிரட் துரையப்பா இதனை பொதுமக்களுக்காக திறந்து வைத்தார். 1980களில், நூலகத்தில் தமிழ், ஆங்கிலம், சிங்களம் மற்றும் ஏனைய மொழிகளில் 97,000க்கும் மேற்பட்ட நூற்தொகுதிகள் காணப்பட்டன.

வடக்கில் சுயாட்சியை ஏற்படுத்துவதில் உறுதியாக இருந்த யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் சமூகம், மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல்களில் மிகுந்த ஆர்வம் காட்டினர். 1981 மே 31ஆம் திகதி, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற பேரணியின் பின்னர், சார்ஜன்ட் புஞ்சி பண்டா மற்றும் கான்ஸ்டபிள் கனகசுந்தரம் ஆகியோர் கொல்லப்பட்டனர். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்தான் (புளொட்) இந்தக் கொலைக்கு காரணம் என்று பின்னர் கூறப்பட்டது

அன்றிரவே யாழ்ப்பாணத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அலுவலகம் உட்பட பல கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தின் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் வீ.யோகேஸ்வரனின் இல்லமும் தீக்கிரையாக்கப்பட்டதுடன், அவரும் அவரது மனைவியும் சுவர் ஏறி தப்பிச் செல்லும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அரச பயங்கரவாதம்

சிறிது நேரத்திற்குப் பின்னர், ஆயுதமேந்திய பொலிஸ் படை வந்து தெருக்களில் எதிர்ப்பட்டவர்கள் எல்லோரையும் கொடூரமாக தாக்கியது. அவர்கள் ஆவேசத்துடன் தாக்கியதால் தெருக்கள் காலியாக காணப்பட்டன, அவர்கள் செல்லும் வழியெங்கும் காணப்பட்ட சொத்துக்களை அழித்தனர். அருகில் உள்ள கோயிலுடன் சேர்த்து 150க்கும் மேற்பட்ட கடைகள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தனர், “ஈழநாடு” நாளிதழ் அலுவலகமும் அழிக்கப்பட்டது. அதன் பிரதம ஆசிரியர் எஸ்.எம்.கோபாலரத்தினம் கடுமையாக தாக்கப்பட்டதோடு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அலுவலகமும் சாம்பலாக்கப்பட்டது. நான்கு தமிழ் பொதுமக்கள் வீதிகளில் இழுத்துச் செல்லப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணம் பெரியகடை அருகே காணப்பட்ட திருவள்ளுவர், ஔவையார், பண்டிதர் சோமசுந்தரம் போன்ற முக்கிய பிரமுகர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டன.

இந்த செயல்கள் இரண்டு தெற்கு அரசியல்வாதிகளின் வழிகாட்டுதலின் கீழ் குழுக்களை அமைத்து திட்டமிடப்பட்டதோடு, அவர்கள் குறித்த குழுக்களுக்கு கொள்ளையடிக்கவும் எரிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர். அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த செயல்கள் யாவும் நடந்தேறின. சம்பவங்கள் யாவும் தணிந்த பின்னர், ஜூன் 2ஆம் திகதி, அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இது குற்றவாளிகள் இலகுவாக தப்பிச்செல்வதற்கு வழிவகுத்தது.

இந்த அழிவு இரவு முழுவதும் தொடர்ந்ததோடு,, மறுநாளும் தீ வைப்பு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடந்தேறின. ஜூன் 1ஆம் திகதி, யாழ்ப்பாண நூலகத்திற்குள் நுழைந்த தாக்குதல்காரர்கள், அங்கிருந்த நூற்தொகுதிகளுக்கு தீ வைத்தனர். பல நூற்றாண்டுகள் பழைமையான கையெழுத்துப் பிரதிகள், பனை ஓலைச் சுவடிகள், அரிய நூல்களின் முதல் பதிப்புகள் உட்பட 97,000இற்கும் மேற்பட்ட புத்தகங்கள் தீயில் கருகின. அழிக்கப்பட்ட நுல்களில் முக்கியமான உரையான யாழ்ப்பாண வைபவ மாலையின் அசல் பிரதி மட்டுமே எஞ்சியிருந்தது.

நூலகம் எரிந்ததால், அது பிரதிநிதித்துவப்படுத்தும் அறிவுசார் பொக்கிஷம் இழக்கப்பட்டது, இது பகிரப்பட்ட துக்க உணர்விற்கு வழிவகுத்தது. புனித பத்திரிசியார் கல்லூரியைச் சேர்ந்த 74 வயது பாதிரியார் டேவிட், மேல் தளத்தில் இருந்து நூலகம் எரிவதைக் கண்டு மாரடைப்பு ஏற்பட்டு பின்னர் மரணமடைந்தார்.

“தமிழ் மக்கள் தமது அறிவுசார் பாரம்பரியம் அழிக்கப்பட்டதாகவே இந்தச் சம்பவத்தை நோக்கினர். இந்த அரச ஆதரவு அடக்குமுறையை தமிழ் சமூகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகவே அவர்கள் கருதினர்” என பிரபல அரசியல் ஆய்வாளரும் புத்திஜீவியுமான பேராசிரியர் கே.சிவத்தம்பி தெரிவித்துள்ளார். மேலும், இதனை “தமிழ் சமூகத்தின் கலாச்சார இனப்படுகொலை” என்று எம்.கே. ஈழவேந்திரன் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய பிரபல சிங்கள அறிஞரும் தமிழ் மொழி, கலை, கலாசாரத்துக்காக செயற்படுபவருமான பேராசிரியர் சுனில் ஆரியரத்ன தனது வேதனையை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக வளமான மற்றும் தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டுள்ளனர். அவர்களிடம் கணிசமான இலக்கியங்கள் மற்றும் அரிய, விலைமதிப்பற்ற புத்தகங்கள் காணப்பட்டன. நாம் முதன்மையாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தைப் பயன்படுத்தினோம், ஆனால் மேலதிக ஆய்வுகளுக்கு, மத்திய யாழ்ப்பாண நூலகத்தையே சார்ந்திருந்தோம். எங்குமே கிடைக்காத புத்தகங்கள் அங்கிருந்தன. இந்தியாவில் கூட அவை கிடையாது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்தப் புத்தகங்களுக்கு மாற்றீடு கிடையாது. பழங்கால நினைவுச் சின்னங்களை தீ வைத்து கொளுத்துவது போன்ற செயல் இதுவாகும்”.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிங்களப் பிரிவின் விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் இவ்வாறு கூறியுள்ளார் –

யாழ்ப்பாணத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட சேகரிப்புகள் உட்பட காலனித்துவ காலத்தின் புத்தகங்களும் யாழ்ப்பாண நூலகத்தில் இருந்தன. அதன் விரிவான படைப்புகள், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் காலனித்துவ கல்வி மறுமலர்ச்சியில் இருந்து வந்தவை, மற்றும் குறிப்பிடத்தக்க வரலாற்று பெறுமதியைக் கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்தின் தனித்துவமான கலாச்சார மற்றும் வரலாற்று பதிவுகளை ஆவணப்படுத்துவதற்கு இது ஒரு முக்கிய மையமாகக் காணப்பட்டது.

அழிக்கப்பட்ட நூல்களில் பல விலைமதிப்பற்ற படைப்புகள் அடங்கும்:

  1. ஆனந்த குமாரசுவாமியின் கையெழுத்துப் பிரதிகள்
  2. சி.வனசிங்கத்தின் தொகுப்புகள் (சுமார் 100 புத்தகங்கள்)
  3. ஐசக் தம்பையாவின் தொகுப்புகள் (சுமார் 850 மத மற்றும் ஆலோசனை புத்தகங்கள்)
  4. கதிரவேல் பிள்ளையின் தொகுப்புகள் (சுமார் 600 புத்தகங்கள்)
  5. பனை ஓலை கையெழுத்துப் பிரதிகளின் விரிவான தொகுப்பு
  6. அமெரிக்க நூலகத்திலிருந்து வழங்கப்பட்ட குறிப்புப் புத்தகங்களின் தொகுப்பு

1939, 1956, 1958, 1977 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மூலம் அரச பயங்கரவாதம் வரலாற்று ரீதியாக தமிழ் சமூகத்தை இலக்கு வைத்துள்ளது. எனினும் 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாண நூலகம் அழிக்கப்பட்டமை மறக்க முடியாத மற்றும் மன்னிக்க முடியாத செயலாக அடிக்கடி நினைவுகூரப்படுகிறது. அரச பாதுகாப்புப் படையினரும், ஆளும் கட்சி அரசியல்வாதிகளும் தமது  பகுதிகளில் இருந்து வாடகைக்குக் குண்டர்களை திரட்டி நூலகத்தை அழிக்கத் திட்டமிட்டமை, அடுத்தடுத்த விசாரணைகளில் வெளிவந்தது.

தமிழ் சமூகம் மற்றும் சர்வதேச சமூகம் ஆகிய இரண்டிற்கும் நம்பிக்கையை மீட்டெடுக்கும் நோக்கில், 1998ஆம் ஆண்டில் நூலகத்தை புனரமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அமைச்சர்கள் மங்கள சமரவீர மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் தலைமையில் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில், கட்டிடத்தை மீட்டெடுக்கவும் அங்கிருந்த புத்தக தொகுப்புகளை மீண்டும் கட்டியெழுப்பவும், இறுதியில் 25,000 புதிய புத்தகங்களை சேகரிக்கவும் 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நூலகத்தை அதன் அசல் இடத்தில் மீண்டும் திறப்பதற்கு விடுதலைப் புலிகளின் எதிர்ப்பு காணப்பட்ட போதிலும், நூலகம் 2003ஆம் ஆண்டு  சம்பிரதாயபூர்வமாக பொதுமக்களுக்காக திறந்துவைக்கப்பட்டது. எனினும், சிலர் இந்த நடவடிக்கைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் வெள்ளைச் சுவர் கட்டிடங்களுடன், நூலகம் இன்று பெருமையுடன் நிற்கின்றது, அதன் சோகமான வரலாற்றின் பாரத்தை இன்னும் தாங்கும் போது நெகிழ்ச்சியின் அடையாளமாக உள்ளது.

முடிவு

யாழ்ப்பாண நூலகம் யாழ்ப்பாணத்திற்கு பெருமை சேர்க்கும் ஒரு ஆதாரமாக உள்ளது. எனினும், அதன் துயரமான கடந்த காலத்தை மறக்க முடியாது. கடந்த காலத்தின் அரசியல் தலைவர்கள் மற்றும் ஆயுதப் படைகளால் ஏற்பட்ட வலி மற்றும் இழப்பின் எதிரொலிகளை இந்தக் கட்டிடமும் அதன் புத்தகங்களும் இன்னும் சுமந்து நிற்கின்றன. 1981 தீ விபத்து அளவிட முடியாத இழப்பைக் குறித்து நிற்பதோடு, இது யாழ்ப்பாண நூலகத்தின் பாரம்பரியத்தில் ஒரு நீடித்த அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது.