1. சுருக்கம்

மே 2009 இல், இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வந்த உள்நாட்டுப் போர், இலங்கை அரச படைகளால் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் உச்சக்கட்டத்தை எட்டியது. 26 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த மோதல், முதன்மையாக பெரும்பான்மை சிங்கள அரசாங்கத்திற்கும் தமிழ் சிறுபான்மையினருக்கும் இடையிலான சிக்கலான இனப் பதட்டங்களால் குறிக்கப்பட்டது. போரின் இறுதிக் கட்டம் குறிப்பாக தீவிரமானதுடன் நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் நிறைவுக்கு வந்தது.

மோதலின் இறுதி நாட்களில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு ஆயிரக்கணக்கான போராளிகள் மற்றும் பொதுமக்கள் சரணடைந்தமையாகும். விடுதலைப் புலிகளின் இறுதிக் காவலரண்களைச் சுற்றி இலங்கை இராணுவம் தனது பிடியை இறுக்கிய நிலையில், பொதுமக்களுடன் பெருமளவிலான தமிழ் போராளிகள் மோதலின் ஒரு பகுதியினராகவோ அல்லது துப்பாக்கிச் சூட்டில் சிக்கியவர்களாகவோ அரசாங்கப் படைகளிடம் சரணடைந்தனர். இந்த சரணடைதல்கள் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்திற்கான ஓர் செயன்முறையின் ஆரம்பத்தைக் குறிக்கும் என்று கருதப்பட்டாலும், அவை சர்ச்சை மற்றும் கரிசனத்திற்குரிய ஒரு விடயமாகவே இருந்து வருகின்றது. சரணடைந்த பலரின் தலைவிதி குழப்பமான மற்றும் வன்முறையான நிலைமைகளுக்கு மத்தியில் பலவந்தமான காணாமல் போதல்கள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் பற்றிய பல அறிக்கைகளுடன் நிச்சயமற்ற நிலையில் மறைக்கப்பட்டுள்ளது. போருக்குப் பிந்தைய இலங்கையில் சமாதானம், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றில் மோதலின் முடிவின் இந்த அம்சம் நீடித்த தாக்கங்களைக் கொண்டுள்ளதுடன், இது பலரின் வாழ்க்கையையும் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மையையும் தொடர்ந்து பாதிக்கின்றது.

 

  1. வரலாற்று சூழல்

மோதலின் பின்னணி:

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முதன்மையாக நடைபெற்ற இலங்கை உள்நாட்டுப் போர், 1983 முதல் 2009 வரை நீடித்த ஒரு நீண்ட மோதலாகும். இந்த யுத்தம் முதன்மையாக சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்த இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழீழம் என்ற ஒரு சுதந்திர தமிழ் அரசை உருவாக்க முயன்ற ஒரு போராளி அமைப்பாகும்.

மோதலின் ஆரம்ப தோற்றத்தினை ஆழமான இன பதட்டங்கள் மற்றும் தமிழ் சிறுபான்மையினரிடையே அரச ஆதரவுடன் நடாத்தப்பட்ட பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான மனக்குறைகள் ஆகியவற்றிலிருந்து பின்தொடரலாம். சிங்கள மொழிக்கு சாதகமாக மொழித் தரப்படுத்தல் சட்டங்கள் மற்றும் தமிழ் மாணவர்களுக்கு பாதகமான பல்கலைக்கழக அனுமதி முரண்பாடுகள் உட்பட தமிழ் சமூகத்தை ஓரங்கட்டுகின்ற கொள்கைகளினால் இந்த குறைகள் அதிகரித்தன.

வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், படுகொலைகள் மற்றும் மரபு ரீதியான போர்த் தந்திரோபாயங்களைக் கையாண்டு, வலிமையான கொரில்லாப் படையாக உருவெடுத்தனர். பல ஆண்டுகளாக, மோதலானது பல தோல்வியுற்ற சமாதான முயற்சிகளையும் வன்முறையின் தொடர்ச்சியான சுழற்சிகளையும் கண்டதுடன், பரவலான இடப்பெயர்வு மற்றும் உயிர் இழப்புகளுடன் குடிமக்களை ஆழமாக பாதித்தது.

சரணடைய வழிவகுக்கும் நிகழ்வுகள்:

2009 இன் முற்பகுதியில் மோதலின் இறுதி நாட்கள் இலங்கை இராணுவத்தின் தீவிரமான மற்றும் தீர்க்கமான இராணுவ நடவடிக்கைகளால் குறிக்கப்பட்டன. புலிகளை முற்றாக ஒழிக்கும் நோக்குடன் அரசாங்கம் பாரிய தாக்குதலை முன்னெடுத்தது. இந்த தாக்குதல் புலிகளை நாட்டின் வடகிழக்கில் மோதலுக்கிடையில் சிக்குண்ட அல்லது புலிகளால் மனித கேடயமாக பயன்படுத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுடன் ஒரு சிறிய பகுதிக்குள் தள்ளியது.

இராணுவம் நெருங்கி வருகையில், மோதல் வலயத்தில் சிக்கியவர்களின் நிலைமை தொடர்ச்சியான குண்டுவீச்சுகளுடன் உணவு, மருந்து மற்றும் சுத்தமான தண்ணீரின் கடுமையான பற்றாக்குறையுடன் அதிகளவில் மோசமடைந்தது. பெருமளவிலான பொதுமக்களின் உயிரிழப்புகள் பற்றிய அறிக்கைகள் வெளிவர ஆரம்பித்ததுடன், இது சர்வதேச கரிசனத்தையும் போர்நிறுத்தத்திற்கான அழைப்புகளையும் ஈர்த்தது, ஆனால் அவை இரு தரப்பாலும் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டன.

தொடர்ச்சியான இராணுவத் தாக்குதலின் கீழ் புலிகளின் தலைமை வீழ்ச்சியடைய ஆரம்பித்ததுடன், பல போராளிகள் சரணடைய வழிவகுத்தது. மே 2009 இல், பிரபாகரன் உட்பட பல முக்கிய விடுதலைப் புலிகளின் தலைவர்களின் மரணத்திற்குப் பிறகு அரசாங்கம் வெற்றியை பிரகடனப்படுத்தியது. பொதுமன்னிப்பு மற்றும் புனர்வாழ்வு வாக்குறுதியின் கீழ் சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகளும் பொதுமக்களும் பாதுகாப்பு நோக்கு மற்றும் சண்டை முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையில் சரணடைந்தனர். எவ்வாறாயினும், இந்த சரணடைதல்களின் பின்விளைவுகள் சர்ச்சைகளிலும் மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளிலும் சிக்கி, ஒரு சிக்கலான மற்றும் சவாலான போருக்குப் பிந்தைய நல்லிணக்க செயன்முறைக்கு களம் அமைத்துக் கொடுத்தன.

மே 2009 இல், இராணுவப் பேச்சாளர் ஒருவர் முன்னாள் விடுதலைப் புலி போராளிகளில் பெரும்பாலானோர் புனர்வாழ்வளிக்கப்படுவார்கள் என்றும் ஆனால் அதற்குப் பதிலாக எஞ்சிய “சுயமாக வாக்கு மூலம்” அளித்த போராளிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் கூறினார் (ராய்ட்டர்ஸ் 26 மே 2009).

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமான மேஜர் ஜெனரல் ஜகத் விஜேதிலக 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து 12,000 முன்னாள் விடுதலைப் புலிகள் சரணடைந்தனர் அல்லது கைது செய்யப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.

  1. தனிநபர்களின் கதைகள்

தப்பிப் பிழைத்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் விபரிப்புகள்:

  1. இலங்கையின் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட தப்பிப்பிழைத்தவர்கள், பிபிசி, 11 அக்டோபர் 2012>>
  2. விடுதலைப் புலிகளின் முன்னாள் மூத்த உறுப்பினர் ரமேஷ் கைது செய்யப்பட்ட பின்னரும் காணாமல் போவதற்கு முன்பும் விசாரிக்கப்படுகிறார்
  3. அனந்தி சசிதரனின் கதை

அனந்தி சசிதரன் இலங்கையைச் சேர்ந்த ஒரு முக்கிய தமிழ் அரசியல்வாதியும் மனித உரிமை ஆர்வலருமாவார். அவர் மே 2009 இல் உள்நாட்டுப் போரின் இறுதியில் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் காணாமல் போன தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த அரசியல் தலைவரான “எழிலன்” என்று அழைக்கப்படும் தனது கணவரான வேலாயுதம் சசிதரனின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கு நீதி தேடும் தனது முயற்சிகளுக்காக நன்கு அறியப்பட்டவராவார்.

அனந்தி சசிதரன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் உரிமைகளுக்காக வெளிப்படையாக குரல் கொடுப்பவர் என்பதுடன், இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கான சர்வதேச கவனத்தை ஈர்ப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளார். அவர் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதுடன் இலங்கையில் வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். போருக்குப் பிந்தைய இலங்கையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான தற்போதைய போராட்டத்தில் அவரது பணி அவரை ஒரு முக்கிய நபராக மாற்றியுள்ளது.

  1. புலனாய்வு கண்டறிதல்கள்

2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் போர் முடிவடைந்த பின்னர், இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த கணிசமான எண்ணிக்கையிலான நபர்கள் பின்னர் காணாமல் போயினர். பல்வேறு அறிக்கைகள் மற்றும் மதிப்பீடுகள் வெவ்வேறு புள்ளிவிவரங்களை வழங்குகின்றன:

  • ITJP (சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம்) இனுடைய 18 மே 2009 சரணடைந்தவர்கள் தொடர்பான எண்ணிக்கைகளின் காலவரிசை
  • 2011: மனித உரிமைகள் கண்காணிப்பகம் 20 வழக்குகள் குறித்து அறிக்கையிட்டது.
  • 2011: போரின் இறுதி நாட்களில் சரணடைந்த மற்றும் காணாமல் போனதாகக் கூறப்படும் 53 புலி உறுப்பினர்களை LLRC பதிவு செய்தது.
  • 2014: ITJP மே 18 அல்லது அதை அண்மித்த தினத்தில் இலங்கை இராணுவத்திடம் “சரணடைந்த” நேரில் கண்ட சாட்சிகளால் காணப்பட்ட 110 நபர்களின் பெயர்களின் பட்டியலை வெளியிட்டது.
  • இது பின்னர் 143 பெயர்களாக அதிகரிக்கப்பட்டது.
  • 2018: ITJP 280 பெயர்களுடன் இணையதளத்தை வெளியிடுகிறது.

இலங்கையில் காணாமற்போன/காணாமல் ஆக்கப்பட்ட குறிப்பிடப்பட்ட பல்வேறு எண்ணிக்கைகள்:

  • 1994: இலங்கையில் மூன்று ஆணைக்குழுக்கள் 16,800 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் வழக்குகளை நிறுவின.
  • 2015: 5,750 நிலுவையில் உள்ள வழக்குகள் (முன்பு 12,341) உள்ளதாக, வலிந்து அல்லது தன்னிச்சையாக காணாமல் போனோர் மீதான பணிக்குழு (WGEID) கூறியது.
  • 2017: போர் முடிவடைந்த பின்னர் 20,000 நபர்களை காணவில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது என்று அரசாங்க மதிப்பீடுகள் கூறுகின்றன.
  • 2018: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) 2009 இல் உள்நாட்டுப் போரின் முடிவில் இருந்து 16,000 க்கும் மேற்பட்ட நபர்கள் காணாமல் போனதாக ஆவணப்படுத்தியுள்ளது. இவர்களில் சுமார் 5,100 பேர் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்களாவர். இந்த புள்ளிவிவரங்களில் கைது செய்யப்பட்டதன் விளைவாக காணாமல் போனவர்கள், குண்டுவெடிப்புகளில் இறந்தவர்கள் அல்லது நாட்டை விட்டு வெளியேறியவர்கள் உள்ளடங்குவர் (The News International)​​ (Groundviews)​.
  • 2016: பரணகம ஆணைக்குழுவிற்கு 24,000க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
  • 2016: தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் (ONUR) தலைவர் 1994 முதல் 65,000 பேர் காணாமல் போயுள்ளதாக கூறினார்.
  • 2018: காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 100,000 என்று சர்வதேச மன்னிப்புச் சபை கூறுகிறது.

சர்வதேச அறிக்கைகள்:

மே 2024 இல் வெளியிடப்பட்ட ஐ.நா மனித உரிமைகள் அலுவலக அறிக்கை, அரச பாதுகாப்புப் படைகள் மற்றும் துணை ராணுவக் குழுக்களின் ஈடுபாட்டை ஏற்றுக்கொள்ளவும், பகிரங்க மன்னிப்பு கேட்கவும் கோருகின்றது. பல தசாப்தங்களாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் தலைவிதி மற்றும் அவர்களின் நிலை தொடர்பில் தீர்மானிப்பதற்கும் வெளிப்படுத்துவதற்கும் அவர்கள் தொடர்பில் பொறுப்புகூறுவதற்கும் இலங்கை அரசாங்கம் அர்த்தமுள்ள நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களையும் ஒருபோதும் மறக்க முடியாது என்பதை இந்த அறிக்கை நினைவூட்டுவதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரான வோல்கர் டர்க் தெரிவித்தார். “அவர்களுடைய குடும்பங்களும் அவர்களைப் பற்றி அக்கறை கொண்டவர்களும் இவ்வளவு காலமாக காத்திருக்கிறார்கள். உண்மையை அறிய அவர்களுக்கு உரிமை உண்டு” என்றார்.

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அனைவருக்கும் அரசாங்கம் கடன்பட்டுள்ளது. இந்தக் குற்றங்கள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது. இத்தகைய குற்றங்கள் அவர்களது அன்புக்குரியவர்களை மட்டுமல்லாது, முழுச் சமூகங்களையும் மற்றும் ஒட்டுமொத்த இலங்கை சமூகத்தையும் வேட்டையாடுகின்றன.

வலிந்து காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தல், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றை நிறுவுதல் போன்ற அடுத்தடுத்த அரசாங்கங்களின் சில சாதகமான முறையான நடவடிக்கைகள் இருந்தபோதிலும் தனிநபர்களின் சம்பவங்களை விரிவாகத் தீர்ப்பதில் களமட்டத்தில் உறுதியான முன்னேற்றம் குறைவாகவே உள்ளது என்று அறிக்கை கண்டறிந்துள்ளது.

பின்வரும் இணைப்புகளிலிருந்து அறிக்கையை பெறலாம்:

முழு அறிக்கை ஆங்கிலம்: PDF, சுருக்கம் ஆங்கிலம்: PDF, சிங்களம்: PDF, தமிழ்: PDF

அரசாங்க அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள்: ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் அறிக்கையை வழமை போன்று இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்தது.

இதேவேளை, தாய்நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த போர்வீரர்களை கௌரவிக்கும் முகமாக 15வது ‘தேசிய போர்வீரர் தினம்’ தேசிய ரீதியில் 2024 மே 19 ஆம் திகதி பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் ஸ்ரீ ஜயவர்தனபுர பாராளுமன்ற மைதானத்தில் போர் நினைவுச்சின்னம் முன்பாக இடம்பெற்றது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது, வலிந்து காணாமல் போவதிலிருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தல், காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தை நிறுவுதல் போன்ற அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களின் முறையான நடவடிக்கைகளை உறுதி செய்துள்ளது. எவ்வாறாயினும், தனிநபர் தொடர்பான சம்பவங்களை விரிவாகத் தீர்ப்பதில் களமட்டத்தில் உறுதியான முன்னேற்றம் குறைவாகவே உள்ளது என்று ஐ.நா அறிக்கை குறிப்பிடுகிறது.

  1. தற்போதைய நிலை

மே 18, 2024 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்ட தேசிய சமாதானப் பேரவை, “நினைவேந்தல் பிரச்சினையின் தொடர்ச்சியான முரண்பாடானது மே 18 நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் துக்க நாளாக அனுஷ்டிக்கப்படுகின்ற அதே வேளையில் மே 19 ஆம் திகதி அரசாங்கத்தினால் வெற்றி தினமாக அனுஷ்டிக்கப்பட்டு பாதுகாப்பு படை உறுப்பினர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்படுகின்ற வகையில் பார்க்கப்பட  வேண்டும். யுத்தம் முடிவடைந்த பின்னர் இதுவரை இல்லாதவாறு வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு முன்னதாகவே பாதுகாப்புப் படையினரின் பிரசன்னம் பலப்படுத்தப்பட்டுள்ளது” என குறிப்பிட்டது.

மே 18 அல்லது அந்த வாரத்தை போரின் இறுதி யுத்தங்களில் யாராக இருந்தாலும் இலங்கையின் உயிர்களான குடிமக்களின் இழப்புக்களால் துயரத்தின் காலமாகக் குறிப்பிட விரும்புவோர் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதை தேசிய சமாதானப் பேரவை கண்டிக்கிறது. “தேசிய நல்லிணக்கத்திற்கான பாதை பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூர முயன்றதற்காக கிழக்கில் கடந்த வாரம் நடந்தது போல் ஆண்களையும் பெண்களையும் இரவில் இழுத்துச் சென்று கைது செய்வது அல்ல” என்று தேசிய சமாதானப் பேரவையின் அறிக்கை கூறுகிறது.

  1. முடிவுரை

நீதி மற்றும் நல்லிணக்கம் பற்றிய பிரதிபலிப்புகள்: (வீடியோ உள்ளடக்கப்பட வேண்டும்)

இழப்பீடு சட்டமூலத்தின் பிரிவு 27 கூறுகையில், “கூட்டு இழப்பீடு என்பது, ஓர் வினைத்திறனான தீர்வுக்கான உரிமை மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களின் சமூகங்கள் அல்லது குழுக்களுக்கு நன்மைகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் மற்றும் (அ) நினைவுச் சின்னங்கள் உள்ளடங்கலாக இறந்த நபர்களை நினைவுகூருவதற்கான வழிமுறைகளை உள்ளடக்குகின்றது. …”

இந்த முயற்சிகளை தேசிய அளவில் விரிவுபடுத்தி, உயிரிழந்த அனைவரையும் நினைவு கூர்வதில் சிவில் சமூக அமைப்புகளின் முன்மாதிரியைப் பின்பற்றவும், சட்டத்தை நிலைநாட்டவும் அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம்.