மூன்று தசாப்தகாலமாக நீடித்த பயங்கரமான யுத்தம், 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இராணுவ நடவடிக்கையுடன் முடிவுக்கு வந்தது. குறைந்தபட்சம் 100,000 உயிர்களை காவுகொண்ட யுத்தத்தில், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். அவ்வாறு காணாமல் போனவர்களில், தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தமிழ் பேசும் கத்தோலிக்க அருட்தந்தையான ஜி.ஏ.ஜோசப் ஃபிரான்சிஸ் அவர்களும் ஒருவராவார்.
அருட்தந்தை ஃபிரான்சிஸ் அஹிம்சையின் மீதான தனது அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்கு பெயர் பெற்றவர். தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் இளம் பிள்ளைகள் உட்பட குறைந்தது 360 பேரை இலங்கை இராணுவத்திடம் சரணடைவதற்கு அவர் தலைமை தாங்கி பேச்சுவார்த்தை நடத்தினார்.
மதகுரு என்ற அவரது அந்தஸ்தானது, பாதுகாப்பை உறுதி செய்யும் என்று நம்பியபோதும், அவருடன் இராணுவப் பேருந்துகளில் ஏற்றிச்செல்லப்பட்ட அனைவரையும் அதன் பின்னர் எங்குமே பார்க்க முடியவில்லை. யுத்தம் முடிவடைவதற்கு எட்டு நாட்களுக்கு முன்னர், யுத்தத்தின் கொடூரத்தையும் இனப்படுகொலையையும் எடுத்துக்காட்டி, வேதனையை வெளிப்படுத்தி அவர் வத்திக்கானுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார்.
காணாமல் ஆக்கப்பட்டமையானது, இலங்கையில் உண்மைக்காகவும் நீதிக்காகவும் போராடிவரும் சமூகங்கள் மத்தியில் இன்றும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
அவர் 2009 மே மாதம் 10ஆம் திகதி வத்திக்கானுக்கு எழுதிய கடிதம் வருமாறு :
10 மே 2009
புனித திருத்தந்தை பதினாறாவது பெனடிக்ட் அவர்களுக்கு,
இலங்கை அரசு தமிழினத்தை அழிக்கும் யுத்தத்தை நடத்துகின்றது. இது ஒரு இன அழிப்பு யுத்தம்.
குழந்தைகள் மற்றும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களின் அவலநிலை மற்றும் வேதனைக்கு மத்தியில், நச்சு மற்றும் ஆரோக்கியமற்ற வாயுக்களால் காற்று மாசுபடுகிறது.
தற்போது இடம்பெற்றுவரும் யுத்தம் பற்றிய தமது கருத்துக்களை வலுக்கட்டாயமாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தும் மதிநுட்பமும் தைரியமும் இலங்கையில் உள்ள திருச்சபைக்கு இல்லாதது துரதிஷ்டவசமானது.
இந்தக் கடிதம் இலங்கை அரசின் கோபத்தை கிளறி, என்னை கொல்லும் அளவிற்கு பழிவாங்கும் என்பதை நான் அறிவேன்.
உங்கள் பரிசுத்த ஆசிர்வாதங்களை கோரிக்கொண்டு,
வண. அருட்தந்தை. ஜி. ஏ. ஃபிரான்சிஸ் ஜோசப்
(ஃபிரான்சிஸ் அவர்களின் கடிதத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகளே இவை)
இந்தக் கடிதத்தை அவர் பதுங்குக் குழிக்குள் இருந்து எழுதியதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்ட, காணாமல் போன தமிழ் மக்களுக்காக தற்போது அந்த பதுங்குக் குழியில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
2009 மே 18ஆம் திகதியன்று, அருட்தந்தை பிரான்சிஸ் தலைமையில் ஒரு குழுவினர் சரணடைவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதென சாட்சிகள் தெரிவிக்கின்றன. இந்தக் குழுவில் புலி உறுப்பினர்களும் பொதுமக்களும் உள்ளடங்குவர். அவர்களுள் இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளும் உள்ளடக்கம். அவர்கள் வட்டுவாகல் பாலத்தைக் கடந்து புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளிலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நுழைந்து இராணுவப் பேருந்துகளில் ஏறிச் சென்றுள்ளனர். (Wikipedia) (Matters India).
மோசஸ் அருளானந்தம் என்பவர் அருட்தந்தை ஃபிரான்சிஸ் அவர்களின் உறவினர் ஆவார். நீதிமன்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஊடாக அருட்தந்தையைப் பற்றிய விபரங்களைக் கண்டுபிடிக்க முயற்சித்த போதும் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தன என்று, 2019ஆம் ஆண்டு இவர் பிபிசி செய்திச்சேவையிடம் தெரிவித்துள்ளார். அப்போது அவருக்கு 90 வயது.
“அவரை நினைத்து வேதனையடையவும் கண்ணீர் சிந்தவும் மட்டுமே எம்மால் முடியும். நாம் உறவினர்கள் என்றபோதும் எமக்குள் நெருக்கமான பிணைப்பு காணப்பட்டது. ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் போல வாழ்ந்தோம். குடும்பத்தில் அவர் ஒரே பிள்ளை. அவர் தேவாலயத்தில் இருக்க வேண்டியதால், அவரின் தாயை நானே கவனித்துக்கொண்டேன்”
“அவர் இருக்கும் இடத்தைக் காட்டித்தருமாறு ஆண்டவரிடமும் அன்னை மரியாளிடமும் வேண்டுகின்றேன். அல்லது அவருக்கு என்ன நடந்ததென அறிய வழிகாட்டவேண்டுமென வேண்டுகின்றேன்”
அருட்தந்தை ஃபிரான்சிஸ், யாழ்ப்பாணத்திலுள்ள புனித பத்திரிசியார் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை கற்றார். கத்தோலிக்க பாதிரியாராக ஆன பின்னர், பாடசாலையின் ஆங்கில கல்வி ஆசிரியாக பணியாற்றினார். பின்னர் பாடசாலையின் அதிபரானார். அவரது முழு வாழ்க்கையும், வகுப்பறைகள், பாடசாலையின் தேவாலயம் மற்றும் பாடசாலையின் கிரிக்கெட் அணியினர் அடிக்கடி விளையாடும் பாடசாலை மைதானம் ஆகியவற்றைச் சுற்றியே காணப்பட்டது. அவர் விளையாட்டுப் போட்டிகளை பார்வையிடச் செல்வதோடு, அணியை உற்சாகப்படுத்தி வந்தார்.
அதே பாடசாலையின் முன்னாள் மாணவராக இருந்த அருட்தந்தைக்கு, பாடசாலையில் அனைத்து மாணவர்களையும் பெயர்கள் அடிப்படையில் தெரியும் என கூறப்படுகின்றது. அவரது மரபு இன்னும் பாடசாலையில் விரவிக் காணப்படுகின்றது. பாடசாலை நூலகத்தில் அவர் மாணவர்களை பார்த்துக்கொண்டிருக்கும் முழுமையான நிழற்படம் ஒன்று காணப்படுகின்றது.
அரச படையினரின் செயற்பாடுகள் குறித்து அருட்தந்தை ஃபிரான்சிஸ் கடுமையான விமர்சன நிலைப்பாட்டை கொண்டிருந்த நிலையில், புலிகளின் அட்டூழியங்கள் குறித்து மௌனமாக செயற்பட்டதாக சிலர் குறிப்பிடுகின்றனர்.
யுத்தத்தின் இறுதி நாட்களில் தம்முடைய தலைவிதியை இராணுவம் தீர்மானிக்கும்வரை, விடுதலைப் புலி உறுப்பினர்களும் பொதுமக்களும் ஒரு விசாலமான இடத்தில் வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஜெயக்குமாரி கிருஷ்ணகுமார் என்பவர், புலிகளின் பிரதான உறுப்பினர் ஒருவரை திருமணம் செய்திருந்தார். அவரது கணவரும் அருட்தந்தை ஃபிரான்சிஸ் அவர்களுடன் பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளார். ஒப்படைக்கப்பட்டவர்களின் பட்டியல், அருட்தந்தை பிரான்சிஸுடன் இணைந்தே தயார்செய்யப்பட்டதென அவர் குறிப்பிடுகின்றார்.
யக்குமாரி கிருஷ்ணகுமார் குறிப்பிட்டதாவது : “எனது கணவர்தான் முதலில் பேருந்தில் ஏறினார். அதன் பின்னர் மற்றொரு குழுவினர் ஏறினர். இறுதியாக அருட்தந்தை ஃபிரான்சிஸ் பேருந்தில் ஏறினார். மதகுரு என்பதால் இராணுவம் தம்மை மதிக்கும் என்றே அவர் நம்பினார். அவரும் அச்சத்துடன் தான் காணப்பட்டார். ஆனால், எல்லா விடயங்களும் சுமூகமாக இடம்பெறும் என நம்பினார். மதகுருவுடன் இருப்பதால் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றே அங்கிருந்த ஏனையோரும் நம்பினர்”
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவின் உறுப்பினர் யஸ்மின் சூக்கா குறிப்பிட்டுள்ளதாவது : “இலங்கை இராணுவத்திடம் பெருமளவானோர் சரணடைந்த பின்னர் அவர்கள் காணாமல் போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை, இந்த சம்பவத்தின் முக்கிய விடயமாகும். இராணுவத்திடம் யாரேனும் சரணடைந்தால், அவர்களுக்கு மனித உரிமைகளின் கீழ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்”
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் முன்னாள் தலைவரான சட்டத்தரணி சாலிய பீரிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் : நாம் களத்திற்குச் சென்று காணாமல் போனோரை தேட வந்துள்ளோம் என்று கூற முடியாது. அவ்வாறு செய்ய முடியாது. கண்டுபிடிக்கும் செயன்முறை, பட்டியல்படுத்தும் செயன்முறை, தகவல் அமைப்பொன்றை உருவாக்குதல் என இச்செயன்முறைகளை மேற்கொள்ள காலம் செல்லும்”
காணாமல் போனோரின் மனைவிமார், அவர்களுடைய கணவன்மாரின் நினைவாக இன்றும் நெற்றியில் சிவப்பு குங்குமத்துடன் காணப்படுகின்றனர். தமது பெற்றோருக்காக குழந்தைகள் காத்திருக்கின்றனர். ஃபிரான்சிஸ் அருட்தந்தையை அவர்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை.
அருட்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உறவினரான மோசஸின் நம்பிக்கையை இதுவரை யாராலும் தகர்க்க முடியவில்லை. அதனால் அவர் இன்னும்,
“என்றோ ஒருநாள் உண்மை வெளிவரும் ” என கருதுகின்றார்.
அருட்தந்தை ஃபிரான்சிஸ் ஜோசப் காணாமல் போனமை தொடர்பாக பிபிசி செய்திச்சேவை தயாரித்துள்ள காணொளியை இந்த இணைப்பில் காணலாம்.