Jayani Abesekaraஜயனி அபேசேகர

நல்லிணக்கம் என்பது ஒரு நெடுதூர பயணமாகும். பல தசாப்தங்களாக ஒருவருக்கொருவர் மீது கொண்ட அவநம்பிக்கை, வெறுப்பு, கோபம் மற்றும் வலி ஆகியவற்றைக்கொண்ட கசப்பான வரலாற்று நிகழ்வுகளை தாண்டி நல்லிணக்கத்தை அடைய நாம் நிறைய கடக்க வேண்டியுள்ளது. பல இனங்கள், பல மதங்களைக் கொண்ட மனிதர்கள் வாழும் இலங்கை நாட்டில், நாம் இன்னும் மற்றவரைப் பார்த்து அச்சமின்றி, சந்தேகமின்றி வாழத் தவறியுள்ளோம்.

கடந்த காலத்தை கையாளுதல்

போருக்குப் பிறகு ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலப்பகுதிக்குள்  நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் பயங்கரவாதத் தாக்குதல், 2018 ஈஸ்டர் ஞாயிறு அன்று நூற்றுக்கணக்கான அப்பாவி உயிர்களைக் கொன்றது. அப்படி என்றால் எதுவும் இன்னும் முழுமையாக முடிவுபெறவில்லை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். போர்க்களத்தில் முடிவடைந்த போரோ, அல்லது தென்னிலங்கையில் கடுமையான அடக்குமுறையுடன் முடிவடைந்த இளைஞர் கிளர்ச்சியோ முழுமையாக முடிந்துவிட்டதாக யாரால் கூற முடியும்? அந்த கசப்பான நிகழ்வுகள் நிறுத்தப்பட்ட காலத்திலிருந்தே இவ்வாறான நெருக்கடிகள் தோன்றுவதற்கான காரணங்கள் யாவை என்று சமூகத்தின் மத்தியில்  அவ்வப்போது கேட்கப்பட்டும், அதனை நிவர்த்தி செய்ய எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அந்தக் கடந்த காலத்தை உன்னிப்பாகக் கவனிக்கும்போதே  நிலைமாறுகால நீதிச் செயன்முறை பற்றிய யோசனைமேல் எழுகின்றது.

நிலைமாறுகால நீதி என்பது நமக்குப் புதியது என்றாலும் கூட, அதனை ஒரு புதிய நீதிக் கோட்பாடாகக் கருத முடியாது. ஆனால் அங்கு வரையறுக்கப்பட்டுள்ள நீதி என்பது சாதாரண நீதி செயல்முறையிலிருந்து வேறுபட்டது. கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது பற்றிய உண்மையைக் கண்டறிதல், குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடுத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் அது மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்தல் ஆகிய நான்கு தூண்களில் நிலைமாறுகால நீதிச் செயல்முறை கட்டமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளுக்கு ஏற்பத் தயாரிக்கப்பட்ட கருத்தாக்கம் இந்த நிலைமாறு கால நீதியாகும். 2016 ஆம் ஆண்டில் நல்லிணக்கத்திற்கான விளம்பரச் செயலணி சுமார் ஒரு வருட காலம் இலங்கை முழுவதும் பயணம் செய்து கடந்த காலம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் என்ன என்பதை  ஆராய்ந்தது.

இலங்கை அனுபவம் 

கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளுக்கு எதிராக நீதியை நிலைநாட்டிய அனுபவம் இலங்கையில் எமக்கு இல்லை என்று கூற முடியாது. அந்த நேரத்தில் அரசாங்கத்தினால் 1971 கிளர்ச்சியுடன் தொடர்புடைய சுமார் 18,000 கிளர்ச்சியாளர்களை கைது செய்ய முடிந்தது மற்றும் அவர்களின் வழக்குகள் சாதாரண சட்டத்தின் கீழ் அல்ல மாறாக விசேடமாக நிறைவேற்றப்பட்ட 1972 ஆண்டு 14 ஆம் இலக்க குற்றவியல் நீதி ஆணைக்குழு சட்டத்தின் கீழ் குற்றவியல் நீதி ஆணைக்குழுவை நிறுவி விசாரிக்கப்பட்டது. அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பிரேமவதி மணம்பேரி கொலையில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலும் பொதுவாக, அன்றிலிருந்து இன்றுவரை அரசு செய்த குற்றங்களுக்குப் பல சந்தர்ப்பங்களில் நீதி கிடைக்கப்பெறவில்லை என்பதே உண்மை.

அதற்குப் பிறகு, கறுப்பு ஜூலை 83 அல்லது 1988-89 ஆயுதக் கிளர்ச்சி அல்லது போரின் தீவிர மோதல்கள் தொடர்பாக என்ன நடந்தது என்பது குறித்து முறையான விசாரணை நடத்தப்படவில்லை.

கடந்த காலத்தை அலட்சியம் செய்தல்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரை யுத்தத்தின்போது இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கோ முன்னைய அரசாங்கங்கள் எவ்வித கரிசனையோ தேவையோ காட்டவில்லை. குறிப்பாக 2009க்குப் பிறகு, சிவில் சமூகக் குழுக்கள் அது தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்தபோது அப்போதைய அரசாங்கம் அந்தக் கோரிக்கைகளை நிராகரித்ததுடன் நின்றுவிடாது அந்தக் குரல்களை ஒடுக்க அடக்குமுறைகளைப் பயன்படுத்தியது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக 2009 இல் கொண்டுவரப்பட்ட விசேட தீர்மானத்தின் மீது எவ்வித கருசனை போக்கையும் வெளிப்படுத்தாத இலங்கை அரசு யுத்தகாலங்களில் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எவ்வித பொறுப்புக்கூறலுக்கும் தாம்  தயாரில்லை என்பதை அந்த அரசாங்கத்தின் செயல்பாட்டின் மூலம் நமக்குப் புரிந்துகொள்ள முடியுமாக இருந்தது. இலங்கை அரசாங்கம் யுத்தத்தை வென்ற  மனோநிலையுடன் செயற்பட்ட காரணத்தால், ஐரோப்பிய ஒன்றியம் எமக்கு வழங்கியிருந்த ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையும் பறிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்நாட்டில் ஆடைத் தொழில்துறைக்கு ஏற்பட்ட இழப்பு மிகப்பெரியதாகும். அதன் பின்னர், 2010ஆம் ஆண்டு ஐ.நா பொதுச் செயலாளர் பேங்கி மூன் நியமித்த இலங்கை தொடர்பான நிபுணர் குழுவை எதிர்த்த அரசாங்கம், எந்தவொரு விசாரணையையும் அனுமதிக்கவில்லை. இறுதியில், போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசுமீது கடுமையான குற்றச்சாட்டுகள் அடங்கிய அறிக்கையை அந்தக் குழு 2011ல் சமர்ப்பித்தது. அதன் பின்னர் 2012ஆம் ஆண்டு இலங்கையில் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையை மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா சமர்ப்பித்து, அது பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 2013ல் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டிய பரிந்துரைகள் அடங்கிய தீர்மானம் முன்வைக்கப்பட்டு, அதன் பிறகு அதுவரை மறைத்துவைக்கப்பட்டிருந்த சில குற்றங்கள் தொடர்பில் அரசு விசாரணை நடத்த வேண்டியேற்பட்டது. அப்போதும், தனது அரசாங்கத்தின் கீழ் பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக உள்நாட்டில் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளைப் புறக்கணிக்கும் அளவுக்குச் சென்ற ராஜபக்ச அரசாங்கம், உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தத்தின் காரணமாக மேலும் அதனைப் புறக்கணிக்க இயலாது போனது.

30/1 தீர்மானம்

ஆனால் 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் அமைதியை நிலைநாட்ட நேர்மையான முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்தது. நல்லாட்சி அரசாங்கம் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதாக நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வாக்குறுதியளித்தது. இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன், 30/1 தீர்மானம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உறுதியளிக்கப்பட்டது. இலங்கையில் இறுதிப் போரின் இறுதிப் பாதியில் இடம்பெற்ற பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை மேம்படுத்துதல், காணாமல் போனோர் தொடர்பான விசாரணை போன்றவற்றை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் சபையின் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதாக இலங்கை உறுதியளித்த போதிலும், இலங்கை அதை அவ்வாறே நிறைவேற்ற இயலாமல் போனது.

எவ்வாறாயினும், வலுக்கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்படுதலை குற்றமாக்குதல், காணாமற்போனோர் அலுவலகம் மற்றும் சேதங்களுக்கான அலுவலகம் நிறுவுதல், காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழ்களைக் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்குதல், காணி விடுவித்தல் போன்ற நடவடிக்கைகள் இதன் அடிப்படையிலேயே படிப்படியாக ஆரம்பிக்கப்பட்டன.

உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு

தற்போதைய அரசாங்கத்தின் கீழ், முன்னாள் காணப்பட்ட ஆணைக்குழு மற்றும் குழுக்கள் தொடர்பாக ஆராய்வதற்கே நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான குழுவொன்று நிறுவப்பட்டமை, உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு சட்ட வரைவு வெளியிடப்பட்டமை என்பன 30/1 தீர்மானத்தின் நீடிப்புகளாகும். அவசர அவசரமாகச் சட்டங்களைக் கொண்டு வருவதால் மாத்திரம்  மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனமையே இங்குப் பிரதான சிக்கலாகும். உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அவசியம்  மற்றும் பயன்பாடுகுறித்த பொது உரையாடலை உருவாக்குவதன் மூலம் பாதிக்கப்பட்ட சமூகங்களின் நம்பிக்கையை உண்மையாக வென்றெடுப்பதே அரசாங்கத்திற்கு காணப்படும் பிரதான சவாலாகும். குறிப்பாக, காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் வேளையில், உண்மையைக் கண்டறியவோ நீதியை நிலைநாட்டவோ எந்தவிதமான மனப்பூர்வமான விருப்பமுமின்றி, சர்வதேசத்தை மகிழ்விப்பதற்காகத் தொடர்ச்சியாகக் குழுக்களையும் ஆணைக்குழுக்களையும் நியமிப்பதன் மூலம் நாட்டில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.

பல்வேறு அரசியல் போராட்டங்கள், கலவரங்களில் காலங்காலமாகப் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் அனைத்து பிரச்சனைகளுக்கும் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவால் தீர்வு காண முடியாது என்பது வெளிப்படையான உண்மையாகும். இன்றும் முன்னுதாரணமாகப் பயன்படுத்தப்படும் தென்னாபிரிக்க உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு செயற்பாடு கூட அனைவரையும் திருப்திப்படுத்தவில்லை அல்லது மிகவும் வெற்றிகரமான பொறிமுறையாகக் கருத முடியாது உள்ளது. ஒரு உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு குற்றவாளிகளுக்குத் தண்டனையையோ, அவர்களின் கேள்விக்கான முழுமையான பதிலையோ அல்லது உடனடி நல்லிணக்கத்தையோ முன்வைக்கவில்லை, மாறாக நல்லிணக்கத்திற்கு தேவையான பாதையைத் திறக்க முற்படுகின்றது. மறுபுறம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் மேற்கொண்டவர்கள் நியாயமான முறையில் தண்டிக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு நிறுவுவதன் மூலமும் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நீதிச் செயற்பாட்டின் ஊடாகவும் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நேர்மையான கவனம் செலுத்துவது அவசியமாகும். சகவாழ்வுக்கான உண்மையான அர்ப்பணிப்பை வெளிப்படுத்த அரசாங்கம் செயல்பட வேண்டும். அது வேறு எதனாலும் அல்ல,  நாம் முன்பு கூறியது போல், உண்மையைத் தேடுவதும் நீதியை நிலைநாட்டுவதும் நல்லிணக்கத்தின் கடைசி எல்லையை அடைந்துவிடுவதற்காக அல்ல மாறாக நல்லிணக்கத்திற்கான பாதையை நோக்கிய பயணம் என்பதனால் ஆகும்.