இலங்கையில் பல தசாப்தகாலமாக இடம்பெற்ற யுத்தமானது, சமூகத்தில் ஆழமாக வடுக்களை விட்டுச்சென்றுள்ளது. நல்லிணக்கம் மற்றும் நிலைமாறுகால நீதியை அடைவது இன்னும் கடினமாகவே உள்ளது. இவ்வாறான பின்னணியில், கலாசார செயற்பாடுகள் எவ்வாறு காயங்களைக் குணப்படுத்தும் மற்றும் கலந்துரையாடலை ஊக்குவிக்கும் என்பதை ஜயதிலக பண்டாரவின் வாழ்க்கை வெளிப்படுத்துகின்றது. பாடகர், சமாதான ஆர்வலர் மற்றும் கலைஞரான பண்டாரா, பிளவுகளைக் குறைப்பதற்காக கலையை பயன்படுத்துவதில், 50 வருடங்களுக்கு மேல் செலவிட்டுள்ளார். மோதலுக்குப் பிந்தைய சமூகங்களில் கலாச்சார வெளிப்பாட்டின் மாற்றும் சக்தியை அவரது மரபு எடுத்துக்காட்டுகிறது.
இசையிலிருந்து செயற்பாட்டியம் வரை : ஆரம்ப காலம்
ஜயதிலக பண்டாரவின் பயணம் அனுராதபுரம் மத்திய கல்லூரியில் தொடங்கியது, அங்கு அவர் இசை மற்றும் நாடகத்தின் மீதான ஆர்வத்தை அடையாளம் கண்டுகொண்டார். எனினும், கலாச்சார செயற்பாட்டிற்கான அவரது பயணம் 1971 இளைஞர் எழுச்சியின் போது ஆரம்பமாகியது. இது, இறுதியில் அவர் சிறை செல்வதற்கு வழிவகுத்தது. பண்டார ஒரு அரசியல் கைதியாக, உயிர்வாழ்தல் மற்றும் எதிர்ப்பிற்கான கருவிகளாக இசை மற்றும் நாடகத்தை நோக்கி தன் வாழ்க்கையை திசைதிருப்பினார்.
“அந்த இருண்ட நாட்களில்,” என அவர் நினைவுகூருகின்றார். “இளைஞர்கள் கலக்கமடைந்தனர். அவர்களது நண்பர்கள் இறந்துவிட்டார்கள், அவர்கள் தனியாக இருந்தனர். சிலர் சிறையிலிருந்து தப்பிக்க திட்டமிட்டனர். சிலர் உண்மையாகவே அதனைச் செய்தனர். எனவே, அவர்களின் மனதை வலுப்படுத்த, நாம் பாடல்களைப் பாடி, நாடகங்களை உருவாக்கி, இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட வேண்டியிருந்தது”.
சிறைச்சாலையில் பண்டாரவின் கலை முயற்சிகள் அவரது மீளுந்திறனை பிரதிபலித்தது மற்றும் கலை என்பது, ஆற்றுப்படுத்துவதற்கும் ஒற்றுமைக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்க முடியும் என்பதை அவர் உணர்ந்தார்.
பிரிந்திருக்கும் தேசத்திற்கு பாலமாக அமையும் கலை
இலங்கையில் 1980 மற்றும் 1990ஆம் ஆண்டு காலப்பகுதிகளில், இன ரீதியான வன்முறை, அரச அடக்குமுறை மற்றும் பிளவுகள் அதிகரித்து காணப்பட்டன. இந்த காலகட்டத்தில், பண்டாரவின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்பட்டது. காரணம், பிளவுபடுத்தும் செயற்பாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் அவரது பாடல்களை பயன்படுத்தினார். அவரது கலையானது, “ஏனையோரை” மனிதாபிமானம் உள்ளவர்களாக மாற்றவும், ஆழமாக புரையோடிப்போயிருந்த மாறாத நிலைகொண்ட தன்மையை நீக்கவும் முயன்றது.
உண்ணாவிரதப் போராட்டத்தின் போது இறந்த தமிழ் அரசியல் தியாகிக்கு அஞ்சலி செலுத்தும் திலீபன் பாடல் அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகளில் ஒன்றாகும்:
“வானத்தைப் பார்த்து, அநீதியின் தீப்பிழம்புகளைச் சகித்துக் கொள்ளுங்கள். உங்கள் இரத்தத்தால் கடல் அழுவதைப் பாருங்கள். திலீபனே, உனது உயிரை தியாகம் செய்த எம் சகோதரனே, ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளான நாம் உடன்பிறந்தவர்கள்.”
தமிழ்க் கிளர்ச்சியாளர்களை தென்னிலங்கை எதிரிகளாக நோக்கிய காலகட்டத்தில், ஜயதிலக பண்டார துணிச்சலாக இந்தப் பாடலை பாடினார். பெரும்பான்மை சமூகம் வடக்கில் உள்ள தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்கான போராட்டத்தை அங்கீகரித்து அவர்கள் மீது இரக்கத்தையும் மனிதாபிமானத்தையும் காட்ட வேண்டும் என்பதாய் அமைந்த இந்த பாடலை பௌத்த பிக்கு ஒருவர் எழுதினார்.
அவர்களின் இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், ஜயதிலக பண்டார, கருணாரத்ன திவுல்கனே மற்றும் குணதாச கபுகே ஆகியோர் குறிப்பாக தெற்கில் உள்ள தேசியவாத குழுக்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டனர். அப்போது அவர்கள் பணிபுரிந்த ரஜரட்ட வானொலி சேவையில் அவர்களது படைப்புகள் தணிக்கை செய்யப்பட்டு, அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
தேசியவாத குழுக்கள் மற்றும் அரச அதிகாரிகளிடமிருந்து ஜயதிலக பண்டார விமர்சனங்களை எதிர்கொண்டார். அவரது பணியானது, சிங்கள அடையாளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக அவர்கள் கருதினர். “அவர்களது காரணத்தை நான் பலவீனப்படுத்துவதாக சிலர் கருதினர்” என பண்டார குறிப்பிட்டார். “ஆனால் மற்றவர்களிடம் உள்ள மனிதாபிமானத்தை உணரவும், அணுகவும், அங்கீகரிக்கவும் நான் வலிமையைக் காட்டினேன்”
அச்சுறுத்தல்களும் தணிக்கைகளும் நீடித்தபோதும், பண்டார தனது பணியை தொடர்ந்து செய்தார். அவரது மீளுந்திறன், நவீன கலாச்சார ஆர்வலர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த பாடமாக செயற்படுகிறது. அவர்கள் பெரும்பாலும் இதேபோன்ற பிளவுபட்ட சூழல்களுக்கு செல்லலாம்.
செயற்பாட்டியம் மற்றும் நிலைமாறுகால நீதி
கலாச்சார செயற்பாட்டியம் எவ்வாறு நிலைமாறுகால நீதியை ஆதரிக்கும் என்பதை, பண்டாரவின் வாழ்க்கை எடுத்துக்காட்டுகின்றது. மோதலில் இருந்து வெளிவரும் சமூகங்களில், சட்ட பொறிமுறைகள் பெரும்பாலும் உணர்வு மற்றும் உளவியல் ரீதியான காயங்களை நிவர்த்திக்க தவறுகின்றன. உண்மையை கூறுவதற்கும், ஏற்றுக்கொள்வதற்கும், கூட்டாக ஆற்றுப்படுத்துவதற்கும் ஒரு தளத்தை வழங்குவதன் மூலம், கலையானது இந்த இடைவெளியை நிரப்புகின்றது. சித்திரவதை செய்யப்பட்ட, கொல்லப்பட்ட, காணாமல் போனவர்களின் குரல்களுக்காகவும், உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கத்திற்கான வேண்டுகோளுக்காகவும் ஜயதிலக பண்டார பாடினார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கிடையில் அவரது நிகழ்ச்சிகள் ஆழமாக எதிரொலித்து, அவர்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்தது. இடம்பெயர்ந்தவர்களின் முகாம்கள் மற்றும் மோதல் வலயங்கள் உட்பட மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பண்டார அடிக்கடி நிகழ்ச்சிகளை நடத்தினார். அவர்கள் பட்ட துன்பங்களை உணர்வதாகவும் அனுபவங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் பண்டாரவின் பாடல்கள் அமைந்தன.
இச்செயற்பாடுகள், அடையாளப்பூர்வமான இழப்பீட்டின் ஒரு வடிவமாக செயற்பட்டது. இது, தப்பிப்பிழைத்தவர்கள் தமது ஆற்றுப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்கவும், நல்லிணக்கத்தை நோக்கி நகரவும் உதவியது.
தமிழ் சமூகங்களுடனான அவரது தொடர்புகள் உரையாடல் மற்றும் புரிந்துணர்வை ஊக்குவித்து, நல்லிணக்கத்திற்கான அடித்தளத்தை உருவாக்க உதவியது.
பண்டாரவின் அனுபவங்கள் நிலைமாறுகால நீதி முயற்சிகளுக்கு முக்கியமான படிப்பினைகளை வழங்குகின்றன. முதலாவதாக, மோதலின் உணர்ச்சிகரமான அம்சங்களைக் கையாள வேண்டியதன் அவசியத்தை அவை எடுத்துக்காட்டுகின்றன. சட்ட பொறிமுறைகள் பொறுப்புக்கூறலை வழங்கினாலும், ஆற்றுப்படுத்தலுக்கு கலை உதவுகின்றது.
இரண்டாவதாக, அனைவரையும் உள்வாங்கவேண்டியதன் அவசியத்தை அவரது செயற்பாடுகள் வலியுறுத்துகின்றன. ஓரங்கட்டப்பட்டவர்களின் குரல்களை உள்வாங்குவதன் மூலம், மோதல் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய ஆழமான புரிதலை உருவாக்குவதற்கு கலை முயற்சிகள் உதவும் என்பதை பண்டார நிரூபித்தார். “நல்லிணக்கம் என்பது வெறுமனே ஒரு அரசியல் செயற்பாடல்ல” என அவர் குறிப்பிட்டுள்ளர். “இது மனிதம். ஒவ்வொருவரின் வலியை புரிந்துகொள்வதில் இருந்து இது ஆரம்பமாகின்றது”.
71 வயதிலும் பண்டார தமது பணியில் உறுதியாக உள்ளார். அவரது பணியின் தாக்கத்தை அளவிடுவது சவாலானது என்றாலும், அவரது முயற்சிகள் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன என்ற நம்பிக்கையில் அவர் ஆறுதலடைகின்றார். பண்டாரவைப் பொறுத்தவரை, கலாச்சார செயற்பாட்டின் பயணம் இன்னும் வெகு தொலைவில் உள்ளது. நல்லிணக்கத்தை யதார்த்தமாக்குவதற்கு கலைஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இடையே தொடர்ச்சியான ஒத்துழைப்பை அவர் வலியுறுத்துகிறார்.
“நல்லுள்ளம் கொண்ட மற்றும் நல்லொழுக்கமுள்ளவர்களின் பங்களிப்புகள் காரணமாக இந்த சமூகம் குழப்பத்தில் விழவில்லை என்று நான் நம்புகின்றேன். இந்த சமுதாயம் இன்னும் உண்மையான நல்லொழுக்க நிலையை அடையாததால் நாம் எமது பணியைத் தொடரவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நல்லிணக்கத்தை அடைவதற்கும், நீதி மற்றும் மனிதநேயத்தை மேம்படுத்துவதற்கும், நாம் தொடர்ந்து பாடல்களைப் பாடி, எமது முயற்சிகளைத் தொடர வேண்டும்”.