பிரசன்ன பிரதீப் குமார்

இலங்கையில் நடந்த சிவில் போர் இலங்கை வரலாற்றின் இருண்ட காலப்பகுதியாகும். அதன்படி முப்பது வருடங்களாக நீடித்த இந்தப் போரினால் இந்நாட்டு மக்களின் இதயங்களில் ஏற்பட்ட வலி விவரிக்க முடியாதது என்பதை நீங்கள் சந்தேகமில்லாமல் ஏற்றுக் கொள்வீர்கள்.இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டது என்பது ரகசியமல்ல. ஆனால், அதற்காக உயிரையும், உடல் உறுப்புகளையும், நேசிப்பவர்களையும் விலையாகக் கொடுத்த பலர் இன்னும் வடக்கில் வாழ்கின்றனர். அவர்களுக்கு உயிர் மட்டுமே மீதம் இருந்தது. அந்த வாழ்வில் அவர்கள் உடலால் உயிருடன் இருந்தாலும், மனதளவில் இறந்த நிலையில் வாழ்ந்தார்கள் என்பதை கீழே உள்ள சிறிபாலவின் கதையிலிருந்து நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

பத்தராகே  சிறிபால வவுனியா நகரிலிருந்து முப்பது கிலோமீற்றர் தொலைவில் உள்ள கெலேபோகஸ்வெவ பிரதேசத்தில் தற்போது வசித்து வருகிறார். ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் வாழ்க்கையை இருளில் ஆழ்த்திய யுத்தம் அவரது வாழ்க்கையையும் இருளில் மூழ்கடித்துள்ளதால் தற்போது தனிமையில் சமயப் பணிகளில் ஈடுபட்டு தனது வாழ்க்கையை கழிக்கிறார்.

இந்த நாட்டின் போர் வரலாற்றில் இடம்பெற்ற மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஒன்று கெப்பித்திகொல்லேவ பிரதேசத்தில் பொதுமக்கள் பயணித்த பேருந்து மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஆகும். நான்காம் ஈழப்போருக்கு கூட வழி வகுத்த தாக்குதலாக இது கருதப்படுகிறது. 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி யகாவெவ , இந்திக்கொல்லேவ பிரதேசத்தில் இந்த குண்டு வெடிப்பு தாக்குதல் இடம்பெற்ற போது இதன் சோகமான அனுபவத்திற்கு  முகம் கொடுத்தவர் இந்த கதையின் நாயகன் சிறிபால ஆவர்.

அந்த இருண்ட நாளின் இருண்ட நினைவுகளை சிறிபால இவ்வாறு விவரித்தார்: ‘’ கெப்பித்திகொல்லேவ பஸ் குண்டுவெடிப்பு என் இறப்பு வரை என் மனதில் நிற்கும் ஒன்று. எனது மொத்த குடும்பமும் என் கண் முன்னே அழிந்தது. எனது குடும்பத்தை சேர்ந்த 18 பேரை ஒரே நேரத்தில் ஒரே குழியில் அடக்கம் செய்ய வேண்டியதாயிற்று.

‘’நான் அன்று 2006 ஜூன் 13ம் திகதி என் மனைவியின் தாய், தந்தையை அதாவது எனது மாமா மாமியை பார்ப்பதற்காக என் மனைவியின் கிராமத்திற்கு சென்றிருந்தேன். அப்போது நான் வவுனியா மகாகச்சக்கொடியில் வசித்து வந்தேன். நாங்கள் கெப்பித்திகொல்லேவைக்கு   செல்வதற்கு முந்தைய நாள் மாலை, நானும் என் மனைவியும் அந்த பயணத்தைப் பற்றி பேசினோம். அதேபோல் நங்கள் அவர்களை பார்க்கச்செல்ல உணவுகளை தயாரித்தோம். குழந்தைகள் அன்று மாலை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஏனென்றால் இரண்டு குழந்தைகளும் பேருந்தில் செல்ல விருப்பமுடையவர்கள். மேலும் பட்டி தாத்தாவிடம் செல்லவும் குழந்தைகள் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள். ஆனால், அன்று மாலை, நாங்கள் மகிழ்ச்சியாக இருந்ததுதான் இறுதியாக இருக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை ஐயா.

அன்றைய தினம் காலையிலேயே நாங்கள்  பேருந்தில் ஏறி கெப்பித்திகொல்லேவ  யக்காவெவ கிராமத்தில் உள்ள எங்களது மாமனார் மாமியார் வீட்டிற்கு சென்றோம். நாங்கள் அங்கு சென்று அன்றிரவு இருக்கும் பொழுது என் மனைவியின் தந்தை எனக்கு எடுத்துச் செல்லச் சொல்லி துவிச்சக்கர வண்டி ஒன்றை கொடுத்தார். அதனால் நாங்கள் 18 ஆம் திகதி அங்கிருந்து  திரும்புவதற்கு எண்ணியிருந்தோம். ஆனால் அன்று இரவு எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்திருந்தது. அது என் மனைவியின் உறவினரின் மகனை 14 ஆம் திகதி அதிகாலையில் புலிகள் சுட்டுக் கொலை செய்திருந்தனர். அதைக் கேள்வி பட்டவுடன் நாங்கள் பொறுமையை இழந்து விட்டோம். பின்னர், நானும் எனது மனைவியின் குடும்பத்தினரும் 15ஆம் திகதி வவுனியா செல்ல தீர்மானித்தது இன்று போல் எனக்கு நினைவிருக்கிறது. ங்கள் குடும்பத்தைச் சேர்ந்த இருபது பேர் பேருந்தில் ஏற எங்கள் மாமியாரின் வீட்டின் அருகில் இருந்தோம். நான் என் மனைவியிடம் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பேருந்தில் வருமாறும் நன் துவிச்சக்கர வண்டியில் வருவதாகவும் கூறி விட்டு அவர்களை பேருந்தில் ஏற்றி விட்டு நன் துவிச்சக்கர வண்டியில் கிளம்பினேன். எப்படியோ, வழியில் பஸ்ஸில் கூட்டம் அதிகமாக நிரம்பியது. ஆட்களை ஏற்றிச் செல்ல பேருந்து இடக்கிடையில் நின்றதும் நான் பேருந்தைக் கடந்து துவிச்சக்கர வண்டியில்  சென்றுவிட்டேன். அன்று பேருந்தில் புதுமையான கூட்டம் இருந்தது, அதில் அதிகமானோர் அன்றைய தினம் கிளினிக்கிட்ற்கு குழந்தைகளை அழைத்து செல்லும் தாய்மார்கள் ஆவர்.

‘’ பேருந்தை கடந்து சிறிது தூரம் சென்ற போது பலத்த சத்தம் கேட்டு உடனே திரும்பி பேருந்தை பார்த்தேன். நான் பார்த்தபோது புகை மூட்டத்துடன் பஸ் கால்வாயில் கவிழ்ந்து கிடந்தது. “அட கடவுளே” என்று பேருந்தை நோக்கி ஓடினேன். ஆனால் அங்கு எனது மனைவி மற்றும் குழந்தைகளை கண்டுபிடித்துக்கொள்ள முடியாமல் போனது. பேருந்தில் தைப்பிண்டங்கள் மட்டுமே அதிகம் இருந்தது. சிலர் வாயைத் திறக்கிறார்கள், யாரும் கத்தவில்லை. உடல்களை அங்கும் இங்கும் நகர்த்திவிட்டு எனது குழந்தைகளையும் குடும்பத்தினரையும் தேடினேன். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் அங்கிருந்து கூச்சலிட்ட போது நிறைய பேர் திரண்டு பேருந்தில் இருந்தவர்களை ஏற்றிக்கொண்டு கெப்பித்திகொல்லேவ வைத்தியசாலைக்கு சென்றனர். நான் பேருந்து வெடித்து சிதறிய இடத்தில இருந்து காலணி கூட இல்லாமல் வைத்தியசாலைக்கு ஓடினேன். இறந்த உடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக போடப்பட்டிருந்தன. கடவுளே , என் மனைவி மற்றும் குழந்தைகள் அதில் இருந்தனர். நான் யாரிடம் சொல்வேன்? துக்கப்படுவதற்கு கூட சுதந்திரம் இருக்கவில்லை. அங்கு எனது ஒரு குழந்தையின் உடல் மட்டுமே இருந்தது. மற்ற குழந்தையைத் தேடி மருத்துவமனை முழுவதும் நடந்தேன். பார்க்கும் போது அவர் உயிருடன் இருந்தார். நான் பைத்தியம் போல் இருந்தேன். ஒரு மணி நேரத்திற்கு முன்பு நான் இருந்த அழகான குடும்பத்தை இழந்தேன். என் மனைவி எங்கே. உபமாவதியுடன் எனது மூத்த மகனை இழந்தேன். கையில் இருந்த குழந்தையை மனைவி அணைத்தது வைத்திருந்ததால் சிறு காயங்களுடன் உயிர் தப்பியது. வவுனியாவுக்கு வருவதற்காக பேருந்தில் ஏறிய எனது குடும்பத்தைச் சேர்ந்த 18 பேரும் அவ்விடத்திலேயே இறந்து விட்டனர். கச்சக்கொடியில் மூடியிருந்த வீட்டிற்கு நான் திரும்பிச் செல்லாமல் நன் எனது எஞ்சியிருந்த குழந்தையை அழைத்துக்கொண்டு ஒவ்வொரு இடங்களில் தங்கி இருந்து இந்த போகஸ்வெவைக்கு வந்தேன். நான் எப்படி ஐயா மனதில் துக்கத்துடன் என் மனைவி பிள்ளைகள் வாழ்ந்த வீட்டில் தனியாக இருப்பது. அதனால் சாகும் வரை அந்த வீட்டுக்கு போக மாட்டேன். உயிர் பிழைத்த என் மகனுக்கு திருமணமாகிவிட்டது. நான் இப்போது என் மனைவி மற்றும் குழந்தைகளின் நினைவோடு தனியாக வாழ்ந்து வருகிறேன். இந்த நினைவுகளுடன் நான் இறந்துவிடுவேன் என்பதுதான் இப்போது ஒரே எதிர்பார்ப்பு, அதற்கு மேல் எனக்கு எதிர்பார்ப்பு இல்லை” திரு. சிறிபால கண்ணீருடன் தனது உரையை முடித்தார்.

கெப்பித்திகொல்லேவ பேருந்து குண்டுவெடிப்பில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள். இவ்வாறான சம்பவங்களில் இருந்து ஒதுங்கிய சிலர்  வடக்கில் காணப்படுகின்றனர். அவர்களுக்கு இன்னும் உயிர் மட்டுமே எஞ்சியுள்ளது. போர் நடந்த இடம் அழகற்றது. போரில் வெற்றி பெற்றவன், தோற்றவன் என்று யாரும் இல்லை. போராடியவர்கள் அனைவரும் இன்று தோற்றவர்கள். இதற்கிடையில், தாக்கப்பட்ட பொதுமக்களும் தோற்றவர்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற சோகக் கதைகளைக் கேட்கவோ பார்க்கவோ கூடாது என்பதே எங்களின் பிரார்த்தனை.

புகைப்பட விவரங்கள்:

01 பி. திரு. சிறிபால