இலங்கையின் உள்நாட்டு யுத்தம் ஆயிரக்கணக்கான குடும்பங்களை சிதைத்தது. குறிப்பாக, தமிழ் சமூகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், எதிர்பாராத துயரங்களையும், நிரந்தரமான விளைவுகளையும் ஏற்படுத்தின. காணாமல் போனவர்களின் கதை ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட துயரத்தை மட்டுமல்ல, ஒட்டு மொத்த சமூகத்தின் அடக்குமுறைகளையும் வெளிப்படுத்துகிறது. பல ஆண்டுகளாக பாதிக்கப்பட மலையக சமூகத்தை சேர்ந்த சந்தனாம் செல்வநாதனின் கதை இந்த பாடங்களை நினைவூட்டும் வகையில் முக்கியமானதாக உள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை
1980 மற்றும் 1990, 2000 களில் உச்சிக்கட்டத்தை எட்டிய இலங்கையின் உள்நாட்டு யுத்தம், அரசியல் அடக்குமுறை, போர் மற்றும் இன அடையாளங்களை மையமாகக் கொண்டு நடந்தது. எல்லை மீறப்பட்ட மனித உரிமை மீறல்களில் காணாமல் ஆக்கப்படுத்தலும் ஒரு பங்கானது. சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் மதிப்பீட்டின் படி, இலங்கையில் 20,000-க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.. இவர்கள் பெரும்பாலும் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களர்களும் உள்ளனர்.
மலையகத் தமிழர்கள், காலனித்துவ காலத்தில் இந்தியாவில் இருந்து வேலைக்காகக் கொண்டு வரப்பட்ட ஒரு சமூகமாக, இன்னும் பல்வேறு இனரீதியான மற்றும் பொருளாதார அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்கள் முக்கியமாக தோட்டத் தொழிலாளர்களாகவே இருந்து, பொருளாதாரப் பின்னடைவுகளும் சமூக புறக்கணிப்பும் இன்றும் தொடர்கின்றன.
இந்த சூழலில், சந்தனாம் செல்வநாதனின் கதை, மலையகத் தமிழ் சமூகத்தின் நிலைமையையும் காணாமல் போனவர்களின் பிரச்சினையையும் இணைக்கும் முக்கிய எடுத்துக்காட்டாக உள்ளது.
சந்தனாம் செல்வநாதனின் கதை
சந்தனாம் செல்வநாதன் ஒரு தோட்டத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தார். பதுளை, பஸ்ஸரை பகுதியில் வசித்து வந்த அவரின் ஒன்பது சகோதரர்கள் மற்றும் தாயார் பசியுடன் போராடிக் கொண்டிருந்தனர். தனது குடும்பத்திற்குப் போதுமான ஆதரவை வழங்க முடியாமல் தவித்த செல்வநாதன், 1990ஆம் ஆண்டில் கல்முனை, அட்டப்பாலம் அரிசி மில்லில் வேலைக்கு பயணமானார். அவர் மட்டுமல்ல, அவரது பகுதிச் சமூகத்திலிருந்து பலரும் வேலைவாய்ப்புக்காக கிளம்பினர்.
அதே சமயம், யுத்தம் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது.
மாதங்கள் சில கழிந்த நிலையில், செல்வநாதனின் குடும்பத்திற்கு அவரிடம் இருந்து எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை. கல்முனையிலிருந்து செல்லும் லாரி ஓட்டுனர்கள் வழியாக அவ்வப்போது வரும் தகவல்களை எதிர்பார்க்கும் குடும்பம், அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லாமல் கவலையில் மூழ்கியது. மாதங்கள் கடந்ததும், ஒரு லாரி ஓட்டுனரிடம் இருந்து வந்த தகவல் குடும்பத்தின் மனதை நொறுக்கியது:
“ அவருக்காக காத்திருக்காதீர்கள், அவர் வரபோறதில்லை. இறந்தவர்களுக்கான சடங்குகளை செய்யுங்கள்.”
அந்த ஓட்டுனரின் தகவல்படி, செல்வநாதன் மற்றும் சிலர், யுத்தத்தின் நடுவே வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு இராணுவ சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டனர். வாகன ஓட்டுனருக்கு செல்ல அனுமதி கிடைத்தாலும், வாகனத்தில் பயணித்த அனைவரையும் தடுத்து வைத்து விட்டனர். இதுவே செல்வநாதன் பற்றி குடும்பத்திற்கு கிடைத்த ஒரே தகவல்.
அவர் குடும்பம் பேரதிர்ச்சியில் மூழ்கியது, லாரி ஓட்டுநர்கள் சொல்லுவதைக் நம்புவதா இல்லையா என்ற குழப்பத்தோடு, குடும்பம் அவருடைய நிலையைத் தெரிந்துகொள்வதற்கான முயற்சியில் முழுமையாக தோல்வியடைந்தது. காவல்துறை, மனித உரிமை அமைப்புகள் மற்றும் அதிகாரிகளிடம் செய்த மேல்முறையீடுகளும் எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை.
அதிகாரிகள் கொடுத்த மௌனமும், மரணச் சான்றிதழ் கிடைக்காத நிலையும் குடும்பத்தைக் கொடுமை படுத்தின. செல்வநாதனின் முந்தைய வேலைக்கான அடிப்படை சம்பளமும் அவரின் பெயரில் இருந்த பணத்தையும் பயன்படுத்த முடியாத சூழல், ஏழ்மையில் இருந்த குடும்பத்தை இன்னும் அதிகமாக பாதித்தது.
செல்வநாதனின் குடும்பத்துக்கு, பதில்களற்ற காலம் ஒரு தீராத துயரமாகவே இருந்து வருகிறது. “அவருக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை,” என அவரது தம்பி குருஸ் பிள்ளை வேதனையுடன் கூறுகிறார். “நாங்கள் கேள்விப்பட்டது வாகன ஓட்டிகளின் வாயிலாகவே. ஆனால் எந்த அதிகாரிகளிடமும் சரியான பதில்களைப் பெற முடியவில்லை. தற்போது எங்கள் ஒற்றை நம்பிக்கையானது, ஒரு நாளில் அவர் தொடர்பான தகவல் கிடைக்கும் என்பதுதான்.”
நீதி எப்போது?
செல்வநாதனின் காணாமல் ஆக்கப்படுதல் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் கறைபடிந்த கதைகளின் ஓர் பகுதியே. மனித உரிமை அமைப்புகளின் மதிப்பீட்டின்படி, 20,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டு யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இந்த காணாமல் ஆக்கப்படுதல் தனிப்பட்ட குடும்பங்களை மட்டுமல்லாமல், மலையகத் தமிழர்கள் போன்ற பொருளாதார மற்றும் சமூக அடக்குமுறைகளைச் சந்திக்கும் சமூகங்களையும் ஆழமாக பாதித்துள்ளது. ஏழ்மையில் தத்தளிக்கும் இந்தக் குடும்பங்கள், அன்புக்குரியவர்களை இழந்த துயரத்தோடு, அவர்களின் வாழ்வாதார உதவியாளர்களை இழப்பதன் பொருளாதார சிக்கல்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.
மலையகத் தமிழ் சமூகமானது, இலங்கையின் சமூக மற்றும் அரசியல் சூழலில் எப்போதும் புறக்கணிக்கப்படும் ஒரு பிரிவு. அவர்கள் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் நேரடியாக ஈடுபடாதிருந்தாலும், அதன் விளைவுகளை அதிகமாக அனுபவித்தனர். செல்வநாதனைப் போல பலர், வாழ்வாதாரத் தேவைக்காகவே போர்ப் பிரதேசங்களில் வேலை தேடிச் சென்று ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமைக்கு ஆளானவர்கள்.
இது மட்டுமல்லாமல், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் இன்னும் நீதிக்காகவும் ஆதரவுக்காகவும் போராடி வருகின்றன. இலங்கையின் போர் முடிவுக்கு வந்த 15 வருடங்களுக்கு பின்னாலும், காணாமல் போனவர்களின் கதை முடிவற்றதுதான்.
நீதிக்கான அழைப்பு
இலங்கை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினையைத் தீர்க்க காணாமல் போனவர்களின் அலுவலகம் (OMP) போன்ற அமைப்புகளை உருவாக்கியுள்ளது. எனினும், இந்த முயற்சிகளின் முன்னேற்றம் மிகவும் மந்தமாகவே உள்ளது, மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த செயல்முறையில் நம்பிக்கை குறைவாகவே உள்ளது.
மலையகத் தமிழ் சமூகத்துக்கு நீதி என்பது, காணாமல் போனவர்களின் மறைவு தொடர்பான உண்மையை கண்டறிவதற்கான முயற்சிகளுக்கு மட்டுமல்ல. அது, அவர்கள் சந்தித்த வரலாற்று புறக்கணிப்பையும் பொருளாதார சிக்கல்களையும் நிவர்த்தி செய்யவும், அவர்களின் குரல்களை தேசிய மறுமலர்ச்சிக்குச் சேர்க்கவும் வலியுறுத்துகிறது.
இலங்கை தனது எதிர்காலத்தை அமைக்க கடந்த காலத்தின் கண்டுகொள்ளப்படாத வேதனைககளை நேர்முகமாக அணுகுவது அவசியம். காணாமல் போனவர்களின் கதைகள், நாட்டின் மறுமலர்ச்சியில் முக்கிய பங்காக இருந்து, வரலாற்றை மறுபரிசீலனை செய்யும் இடமாக இருக்க வேண்டும்.
செல்வநாதனின் குடும்பம் போன்றவர்களுக்கு நீதி என்பது சட்ட செயல்முறையை தாண்டி, அவர்களின் துயரத்தை அங்கீகரித்து, அவர்கள் அனுபவித்த இழப்புகளுக்கு நியாயமான மதிப்பளிக்கவும், வாழ்க்கையை புதிய நம்பிக்கையுடன் தொடங்கவும் உதவும் ஓர் ஆற்றலாக இருக்க வேண்டும்.