‘1990ஆம் ஆண்டு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நான் விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், மட்டக்களப்பு வந்தாறுமூலையில் உள்ள அகதிகள் முகாமை மேற்பார்வையிடும் பொறுப்பு எமக்கு வழங்கப்பட்டது. விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் 158 பேரை புனர்வாழ்வு அளிப்பதற்காக 1990 செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி நான் எழுத்துபூர்வமாக இராணுவத்திடம் ஒப்படைத்தேன். இராணுவத்தினர் அவர்களை பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர். அன்று ஒப்படைத்தவர்களில் யாரையும் இதுவரை நான் ஒருபோதும் பார்க்கவில்லை. நான் மட்டக்களப்பில் வசிக்கின்றேன். அவர்களது உறவினர்களை நான் இன்றும் சந்திக்கின்றேன். அப்போதெல்லாம் அவர்கள் தமது உறவினர்களுக்கு என்ன நடந்ததென என்னிடம் கேட்கின்றனர். நான் என்ன சொல்வது? இருக்கின்றனர் என்று கூறுவதா இல்லையென கூறுவதா? அவர்களுக்கு என்ன நடந்ததென எனக்குத் தெரியாது. அந்த முகாமில் இருக்கின்றனர் இந்த முகாமில் இருக்கின்றனர் எனக் கூறினர். மக்கள் அந்த இடங்களுக்குச் சென்று தமது உறவுகளை தேடுகின்றனர். பின்னர் செம்பியாவில் ராஜபக்ஷ குடும்பத்தினருக்குச் சொந்தமான பண்ணையில் அவர்கள் வேலை செய்வதாக மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்று பார்க்கவா என என்னிடம் வந்து கேட்டனர். நான் என்ன சொல்வது? அதுபற்றியும் உறவினர்கள் தேடினர். தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று அறிந்துகொள்ளவே இம்மக்கள் விரும்புகின்றனர். யுத்தத்தின்போது ஜப்பானுக்கு தப்பிச்சென்ற ஒருவர் மீண்டும் வந்தார். தேடிக்கொண்டிருந்தவர்களில் மீண்டும் கிடைத்த ஒரே ஒரு நபர் அவர் மட்டுமே.’

 

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் கலாநிதி த.ஜயசிங்கம் இந்தக் கருத்துக்களை எம்மிடம் தெரிவித்தார். தேசிய சமாதான பேரவையில் அவர் நீண்டகால உறுப்பினராகவும் பணிப்பாளராகவும் உள்ளார். மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் வசிக்கும் இவர், யுத்தத்தின் போது அரசியல் தீர்வை முன்வைத்த தமிழ் புத்திஜீவிகளில் ஒருவராவார். யுத்தத்தில் கொல்லப்பட்ட, காணாமல் போன தமது உறவினர்களை நினைவுகூரும் நாளில், வன்முறை, கொலைகள், காணாமல் போதல், அமைதிக்கான அர்ப்பணிப்பு போன்றவற்றில் வாழ்நாள் முழுவதும் நேரடி அனுபவம் பெற்றவர் என்ற ரீதியில் அவரை நாம் தேடிச்சென்றோம்.

மட்டக்களப்பிற்கு பொறுப்பாக வந்த கடற்படை அதிகாரி ஒருவர், 34 பேரை மாத்திரமே தாம் பொறுப்பேற்றதாகவும் பின்னர் இராணுவத்தினரால் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் விசாரணை ஆணைக்குழுவிடம் தெரிவித்தார். 1990 செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி காணாமல் போனோர் குறித்து நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரிகள் முன்னிலையில் பல தடவைகள் சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. கலாநிதி ஜயசிங்கத்தின் பொறுப்பில் கையளிக்கப்பட்ட 158 பேர் தொடர்பாக அவரிடம் காணப்பட்ட அனைத்து விபரங்கள், அப்போது தமிழ் மக்களுக்கு பொறுப்பாக செயற்பட்ட அனைத்து இராணுவ அதிகாரிகளினதும் விபரங்கள் என்பன ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. எனினும், அங்கு பிரசன்னமான மேஜர் ஜெனரல் ஒருவர்,  காணாமல் போன 158 பேர் குறித்து பேசவேண்டியதில்லை என்றும், அவர்கள் அனைவரும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்றும் கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஒவ்வொரு ஆணைக்குழுவின் முன்னிலையிலும் பிரசன்னமாகி தமக்குத் தெரிந்த அனைத்துத் தகவல்களையும் கூறியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது சம்பந்தப்பட்ட குடும்பங்களின் வேதனையையும் விரக்தியையும் அதிகப்படுத்தியுள்ளது. பின்னர் குறித்த ஆணைக்குழுக்களை சந்திக்க அவர்கள் மறுப்புத் தெரிவித்தனர். இழப்பீடு வழங்குவதா அல்லது தண்டனை வழங்குவதா என்பதை பின்னர் தீர்மானிக்கலாம். அவர்களுக்கு என்ன நடந்ததென்ற ‘உண்மை’ முதலில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

கலாநிதி த.ஜயசிங்கம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பதவியேற்ற பின்னர், பல்கலைக்கழகத்திலும் சமூகத்திலும் இவ்வாறான கேள்விகளை எழுப்பிய போது அரசாங்கத்திற்கு எதிரானவர் என்று அவர்மீது முத்திரை குத்தப்பட்டது.

‘எனக்கு வேறு எதுவும் தெரியாது. நான் பார்த்ததைப் பற்றித்தான் நான் கதைக்கின்றேன். நான் அரசாங்கத்தை திட்டிக்கொண்டு வீதியில் செல்லவில்லை. என் கண் முன்னால், எனக்குத் தெரிய காணாமல் போனவர்கள் பற்றி எனக்குத் தெரியும். அதுபற்றி எனக்கு கதைக்க முடியாவிட்டால், என்ன பிரயோசனம் உள்ளது? ‘

காணாமல் போனோர் நெருக்கடி மற்றும் விடுதலைப் புலிகள்

கலாநிதி த. ஜயசிங்கம் தாம் கையளித்த 158 பேர் தொடர்பான அனுபவத்தின் ஊடாக, முழு யுத்தத்திலும் காணாமல் போனவர்கள் பற்றி தேடிப்பார்க்கும் பழக்கம் அவருக்கு காணப்பட்டது. யுத்தத்தின் போது தமிழர் பகுதிகளில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களைப் பார்க்கும் போது, தான் கையளித்த 158 பேரின் அனுபவம் நினைவுக்கு வருவதாக கூறுகின்றார். யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள், இலங்கை வரலாற்றில் இருந்து அழிக்கப்பட்டுள்ளனர் என்பது அவரது கருத்தாக உள்ளது. இலங்கையில் இடம்பெற்றது மோதலே அன்றி, அது யுத்தமில்லை என்று கூறிய அவர், மக்கள் விடுதலை முன்னணிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் அவ்வாறானதொரு மோதலே காணப்பட்டது என்றும் குறிப்பிட்டார். குறித்த மோதலுக்குப் பின்னரான காலத்தில் உள்ளூராட்சி சபை, மாகாண சபை, பாராளுமன்ற தேர்தல்களில் அவர்கள் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினர்களாகி அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டனர். அதற்கு எவ்வித பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால், விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஏன் அந்த உரிமை இல்லை என அவர் கேள்வியெழுப்பினார்.

‘இராணுவத்திடம் சரணடைய வரும்போது, அவர்களை அடையாளம் காண்பதற்கு ‘தலையாட்டிகள்’ அல்லது உளவாளிகள் பயன்படுத்தப்படுகின்றனர். அவர்கள் தலையசைக்கும் விதத்திற்கு ஏற்பவே மக்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர். இச்செயற்பாடு ஊடாக, விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு தெரிவுசெய்யும் முறையில் பிரச்சினைகள் ஏற்பட்டது. மட்டக்களப்பில் விடுவிக்கப்பட்ட பகுதிகள், விடுவிக்கப்படாத பகுதிகள் என இரண்டாக பிரிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட பகுதிகளில் காணப்பட்ட மக்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள், விடுவிக்கப்படாத பகுதிகளில் காணப்பட்டன. இதன் காரணமாக, விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள விவசாயிகள், விவசாய தேவைகளுக்காக விடுவிக்கப்படாத பகுதிகளுக்குச் செல்வது வழமையாக காணப்பட்டது. அந்த மாகாணங்களில் நடக்கும் விடுதலைப் புலிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் போதும், இராணுவத்தின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் போதும், அந்த கூட்டங்களில் மக்கள் கலந்து கொள்வது வழமையான விடயமாகும். அது தவிர்க்க முடியாத விடயமாக காணப்பட்டது. அத்துடன் யுத்த காலத்தில் புலிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களுக்கு வடக்கு கிழக்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அரச அதிகாரிகளும் செல்ல வேண்டியிருந்தது. அரசாங்க அமைச்சர்களும் இங்கு வந்து கூட்டங்களை நடத்தினர். விடுதலைப் புலிகள்  ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் கலந்து கொள்வதால் அவர்களை விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்று அழைக்க முடியாது. வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மக்களும் புலி உறுப்பினர்களோ அல்லது அவர்களுக்காக செயற்பட்டவர்களோ கிடையாது. அவர்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களாக இருந்தாலும், அவர்களை கைது செய்வதன் மூலம் மற்றும் சரணடைந்த பின்னர் அவர்களை காணாமல் ஆக்குவது நியாயமானதல்ல’ என்று கலாநிதி த.ஜயசிங்கம் குறிப்பிட்டார். 

காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு காணப்படும் நெருக்கடி

காணாமல் போனோரின் குடும்பங்கள் அனைத்தையும் தனக்கு நன்கு தெரியும் என்றும், தான் தயாரித்த பட்டியலில் காணப்படும் மிகவும் வயது குறைந்த ஆண் சுமார் 11 வயது சிறுவன் என்றும், வயது கூடியவருக்கு 56 வயது என்றும், அவர்களில் குறைந்தபட்சம் 50 வீதமானோர் திருமணமானவர்கள் என்றும் கலாநிதி ஜெயசிங்கம் கூறுகின்றார். அவர்களில் ஒருவருடைய மனைவி, அப்போது சில மாதங்கள் கர்ப்பமாக இருந்துள்ளார். அந்தத் தாயின் குழந்தை தந்தையை பார்த்ததில்லை. ஒரு இளம் பெண் கணவன் இல்லாமல், ஒரு குழந்தைக்கு தந்தை இல்லாமல், குறிப்பாக யுத்தகாலத்தில் வாழ்வது மிகவும் கடினம். தமக்கு வேறு எதுவும் வேண்டாம் என்றும், தமது பிள்ளைகளுக்கு, தந்தைக்கு, கணவருக்கு என்ன நடந்தது என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டுமென்றே அவர்கள் கூறுகிறார்கள். தமது உறவினர்களுக்கு மதச் சடங்குகளை செய்யவோ, புண்ணியதானம் வழங்கவோ முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். அவர்களின் வலியும் நிலையற்ற தன்மைக்கும் இன்னும் தீர்வு கிட்டவில்லை. ஒவ்வொருவரும் தமது வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மரணத்தை சந்திக்க வேண்டும். அப்போது சமய ரீதியான உரிய சடங்குகளை செய்து மனரீதியில் ஓரளவு நிம்மதியை பெற்றுக்கொள்கின்றனர். ஆனால் வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கை தொடர்பான இந்தப் பிரச்சினைகள் முடிவுக்கு வராமல் இருப்பதானது, உளவியல் ரீதியான பாரிய நெருக்கடியாகும்.

காணாமல் போனவர்களுக்காக வழங்கப்படும் காணாமல் போனதற்கான சான்றிதழைப் பெறுதல், சான்றளிக்கப்பட்ட கடிதம் மற்றும் இறப்பு சான்றிதழ் ஆகியவற்றை வழங்குவதற்கு நீண்ட காலம் சென்றது. யுத்தத்திற்குப் பின்னர், சில குடும்பங்கள் இந்தச் சவால்களை முறியடித்து வாழ்ந்தாலும், பல குடும்பங்கள் பெரும் துன்பங்களுக்கு மத்தியில் தமது வாழ்க்கையை கொண்டுசெல்கின்றனர். ஆரம்பத்தில் அரசாங்கம் 50,000 ரூபாயும் பின்னர் 100,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கியது. ஆனால் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் தீர்மானம் குறித்து அவர்களுக்குள் கேள்வி எழுந்தது. குறித்த குடும்பங்களுக்கு தொழில் வழங்குவது அதை விட பலனளிக்கும் என அவர்கள் கருதுகின்றனர்.

இந்தக் கட்டுரையானது, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் சபை உறுப்பினருமான கலாநிதி த.ஜயசிங்கம் அவர்களுடனான கலந்துரையாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

சுதேஷ் சில்வா