ஓகஸ்ட் 30 அன்று, உலகம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தைக் குறிப்பதுடன், இது ஒரு தடயமும் இல்லாமல் காணாமல் ஆக்கப்பட்ட தனிநபர்களின் அவலத்தையும், வேதனையில் பின்தங்கிய குடும்பங்களின் அவலத்தையும் எடுத்துக்காட்டுகிறது. உலகளவில் வலிந்து காணாமலாக்கப்பட்ட விகிதங்கள் அதிகம் உள்ள நாடான இலங்கையில், இந்த நாள் ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் தலைவரான திரு. பிரிட்டோ பெர்னாண்டோ, பிரச்சினையின் வரலாறு, சட்டப்பரப்பு, தற்போதுள்ள சவால்கள் மற்றும் சாத்தியமான தீர்வுகள் பற்றிய முக்கியமான உட்பார்வைகளை வழங்குகிறார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உலகளாவிய மற்றும் உள்ளூர் சூழல்

“பல நாடுகளில் வலிந்து காணாமல் ஆக்கப்படல் எதிர்ப்புகளை மௌனமாக்குவதற்காக ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது” என்று பெர்னாண்டோ விளக்குகிறார். ஆசியா முதல் லத்தீன் அமெரிக்கா வரை, அரசாங்கங்கள் அச்சத்தைத் தூண்டுவதற்கும், எழுச்சிகளை அடக்குவதற்கும் தனிநபர்களை மறையச் செய்வதை நாடியுள்ளன. இலங்கையின் அனுபவமும் அதிலிருந்து வேறுபட்டதல்ல.

1971 கிளர்ச்சி, 1988-89 தெற்கு கிளர்ச்சி மற்றும் 1983 முதல் 2009 வரையிலான உள்நாட்டுப் போர் போன்ற காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அதிகரித்த நாட்டின் வரலாற்றில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களை பெர்னாண்டோ அடையாளம் காட்டுகிறார். 1988-89 எழுச்சியின் போது மட்டும், சுமார் 60,000 பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்றாலும் ஒரு ஆணைக்குழுவால் 1994 ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வமாக 27,526 சம்பவங்களே பதிவு செய்யப்பட்டன என்று அவர் குறிப்பிடுகிறார்.

உள்நாட்டுப் போரின் எண்ணிக்கை இன்னும் ஆபத்தானது. பெர்னாண்டோ மன்னார் ஆயர் போர் வலயங்களுக்குள் பிரவேசிப்பதற்கும் வெளியேறுவதற்கும் இடையில் உள்ள 147,660 பேர் வரையிலான வேறுபாடுகளை அவதானித்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க புள்ளிவிபரத்தை மேற்கோள் காட்டுகிறார். உத்தியோகபூர்வ பதிவுகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் உலகளவில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதுடன், பெர்னாண்டோ உண்மையான புள்ளிவிவரங்கள் 100,000 முதல் 150,000 வரை இருக்கும் என்று மதிப்பிடுகிறார்.

அரசு மற்றும் கலக தரப்பினர்களின் வகிபங்கு

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் அரச செயற்பாட்டாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கவில்லை என பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக 1988-89 கிளர்ச்சி மற்றும் உள்நாட்டுப் போரின் போது, ​​வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் குற்றம் சாட்டப்பட்ட அதேவேளை, விடுதலைப் புலிகளும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டனர். “காணாமல் ஆக்கப்படுவது அரசியல் ஒடுக்குமுறைக்கான ஒரு கருவியாக மாறியது,” என்று பெர்னாண்டோ கூறுவதுடன், இந்த நடைமுறை பெரும்பாலும் நீதித்துறை ஆய்வுக்கு வெளியே செயற்படுத்தப்பட்டது.

சட்டப்பூர்வ பதில்கள் மற்றும் அவற்றின் வரம்புகள்

2018 ஆம் ஆண்டில், இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படுதலை ஒரு குற்றவியல் தவறாக அறிவிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியதுடன், அதற்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுவதுடன் (2018ம் ஆண்டின் 5ம் இலக்க வலிந்து காணாமல் ஆக்கப்படலில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச பிரகடன சட்டமூலம்) பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது ஒரு மைற்கல்லாக இருந்தபோதிலும், பெர்னாண்டோ அதன் முக்கியமான குறைபாட்டை வலியுறுத்துகிறார்: சட்டம் பின்னோக்கிப் பிரயோகமாகாது. “இதன் காரணமாக, 1988-89 காலகட்டத்திலோ அல்லது போரிலோ நடந்த குற்றங்களை இந்த சட்டத்தின் கீழ் நிவர்த்தி செய்வதற்கு முடியாது,” என்று அவர் கூறுகிறார்.

மற்றொரு பொறிமுறையான ஆட்கொணர்வு மனு, காணாமல் ஆக்கப்பட்ட நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குடும்பங்கள் கோருவதற்கு அனுமதிக்கிறது. எவ்வாறாயினும், இந்த செயன்முறை பெரும்பாலும் நீதியை வழங்குவதில் குறைவினை ஏற்படுத்துகிறது என்று பெர்னாண்டோ குறிப்பிடுகிறார். “ஆட்கொணர்வு மனு வழக்குகள் தனிநபரை நீதிமன்றம் கண்டறிய வேண்டும் என்று மட்டுமே கோருகிறது. அவை குற்றவாளிகளுக்கு குற்றவியல் தண்டனையை வழங்காது, ”என்று அவர் விளக்குகிறார்.

பொறுப்புக்கூறல் முயற்சிகள்: முன்னேற்றம் மற்றும் குறைபாடுகள்

2017 இல் காணாமல் போனோர் அலுவலகம் (OMP) நிறுவப்பட்டமை குடும்பங்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆயினும்கூட, பெர்னாண்டோ அதன் குறைபாடுகளை எடுத்துக்காட்டுகிறார். இராணுவ வீரர்கள் சம்பந்தப்பட்ட 4,000 முறைப்பாடுகள் உட்பட 14,000 முறைப்பாடுகளைப் பெற்ற போதிலும், OMP இன்னமும் கணிசமான முடிவுகளை வழங்கவில்லை. “உண்மையில் என்ன நடந்தது என்பதை வெளிக்கொணர்வதற்காக ஒரு வழக்கு கூட முழுமையாக விசாரிக்கப்படவில்லை” என்று பெர்னாண்டோ கூறுகிறார்.

அரசியல் விருப்பமின்மையே இந்தத் தோல்விக்குக் காரணம் என்று அவர் கூறுகிறார். “இலங்கையில் தேவையான சட்ட கட்டமைப்பு மற்றும் நிறுவனங்கள் உள்ளன, ஆனால் அரசியல் தலைமைத்துவத்திற்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அர்ப்பணிப்பு இல்லை,” என்று அவர் வலியுறுத்துகிறார்.

இழப்பீடு  தொடர்பான பிரச்சினை

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது பற்றிய வினா சர்ச்சைக்குரிய ஒன்றாக உள்ளது. பெர்னாண்டோ இழப்பீடு நடைமுறைகளில் உள்ள சீரற்ற தன்மையை விமர்சிக்கிறார். சமத்துவமற்ற முறையில் நடாத்தப்பட்ட பல உதாரணங்களை அவர் நினைவு கூர்ந்தார்: 2022 போராட்டத்தின் போது கொல்லப்பட்ட அரசியல்வாதிக்கு ரூ. 10 மில்லியன் இழப்பீடு வழங்கப்பட்டதுடன், சாதாரண குடிமக்களின் குடும்பங்களுக்கு மிகவும் குறைவாகவே வழங்கப்பட்டது.

“இழப்பீட்டினால் மட்டும் காயங்களை குணப்படுத்த முடியாது,” பெர்னாண்டோ கூறுகிறார். இருப்பினும், அதனை வழங்கும்போது, ​​​​அது இழப்பின் தாக்கத்தை பிரதிபலிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். தற்போதைய இழப்பீட்டு செயன்முறைகள், வினைத்திறனின்மையில் சிக்கியுள்ளதுடன் குடும்பங்கள் சுமக்கும் உணர்வு மற்றும் நிதியியல் சுமைகளை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டன என்று அவர் மேலும் கூறுகிறார்.

சர்வதேச மேற்பார்வையின் வகிபங்கு

சர்வதேச ஆய்வானது இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்கள் மீது, குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மீது கவனத்தை ஈர்த்துள்ளது. 2015 இல் UNHRC தீர்மானம் 30/1 உண்மையைத் தேடுதல் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கு அழைப்பு விடுத்ததாக பெர்னாண்டோ குறிப்பிடுகிறார். இருப்பினும், பின்னர் வந்த அரசாங்கங்கள் இதைப் பின்பற்றுவதில் குறைவானளவிலேயே அக்கறை காட்டியமையை அவர் அவதானிக்கிறார்.

“சர்வதேச அழுத்தம் இல்லாமல், இலங்கையின் தலைமை செயற்படுவது போல நடிக்கக்கூட மாட்டாது” என்று பெர்னாண்டோ வலியுறுத்துகிறார். சர்வதேச விசாரணைகள் போன்ற தலையீடுகளுக்கு ஒருமித்த கருத்தை அடைவதில் உள்ள சவால்களை அவர் ஏற்றுக் கொண்டாலும், தொடர்ச்சியான சர்வதேச ஈடுபாடு இன்றியமையாதது என அவர் கருதுகிறார்.

முன்னோக்கி செல்லும் பாதை: உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கம்

பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உண்மையை வெளிக்கொணர்வதும், நீதியை உறுதிப்படுத்துவதும், குடும்பங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்குவதும் அவசியம் என்று பெர்னாண்டோ வலியுறுத்துகிறார். “நாம் வெறும் சைகையாக அல்லாமல், துன்பத்தை நிவர்த்தி செய்வதற்கான உண்மையான முயற்சியாக உண்மையை வெளிப்படுத்த வேண்டும், நீதி வழங்க வேண்டும் மற்றும் இழப்பீடுகளை வழங்க வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.

 

பெர்னாண்டோவைப் பொறுத்தவரை உண்மையைத் தேடுவதே முதன்மையானது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள குடும்பங்கள் மத்தியில் OMP எதிர்கொள்ளும் நம்பிக்கைப் பற்றாக்குறையை அவர் எடுத்துரைத்தார். “வடக்கில் உள்ள பெற்றோர்கள் OMP ஐ நிராகரிக்கிறார்கள், ஏனெனில் அது உண்மையான பதில்களை வழங்கும் என்று அவர்களுக்கு நம்பிக்கை இல்லை” என்று பெர்னாண்டோ விளக்குகிறார். நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு வெளிப்படைத்தன்மை மற்றும் பக்கச்சார்பற்ற தன்மைக்கு அவர் அழைப்பு விடுக்கிறார்.

செயற்பாடற்ற தன்மையின் பரந்த தாக்கம்

பெர்னாண்டோ காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தத் தவறினால் நீண்டகால விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கிறார். “ஒவ்வொரு 20 முதல் 30 வருடங்களுக்கும், இலங்கை எழுச்சிகளை எதிர்கொண்டுள்ளதுடன், அவை பெரும்பாலும் காணாமல் ஆக்கப்படல் மற்றும் கொலைகள் மூலம் ஒடுக்கப்பட்டது. நீதி இல்லாமல், இது போன்ற சுழற்சிகள் மீண்டும் நிகழ வாய்ப்புள்ளது,” என்று அவர் எச்சரிக்கிறார்.

அரசு மற்றும் இராணுவத்தின் வகிபங்கு

காணாமல் ஆக்கப்படல் தொடர்பான பிரச்சினையை நிவர்த்திசெய்வது இராணுவத்தின் ஒருமைப்பாட்டிற்கும் முக்கியமானது என பெர்னாண்டோ வாதிடுகிறார். அவர் உரையாடிய பல இராணுவ வீரர்கள் ஒரு சிலரின் செயல்களுக்கு கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டியிருப்பதில் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். “அரசியல் நோக்கத்துடன் காணாமல் ஆக்கப்பட்டதற்காக முழு நிறுவனமும் ஏன் குற்றம் சாட்டப்பட வேண்டும்?” என அவர்கள் கேட்கிறார்கள் என்று அவர் பகிர்ந்து கொள்கிறார்.

கடற்படை காவலில் இருந்த 20 நபர்கள் காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பாக 2019 இல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தாமதமான நீதிக்கான உதாரணம் என்று அவர் குறிப்பிடுகிறார். “நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன, இந்த வழக்கில் ஒரு விசாரணை கூட நடாத்தப்படவில்லை” என்று பெர்னாண்டோ குறிப்பிடுகின்றார்.

ஓகஸ்ட் 30 ஐக் குறிப்பிடல்: நீதிக்கான அழைப்பு

ஓகஸ்ட் 30 அன்று, பெர்னாண்டோ மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தூதரகங்களுக்குச் சென்று, இலங்கையை பொறுப்புக்கூறுமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்தும் மனுக்களை சமர்ப்பித்தனர். “நீதி கிடைக்கும் வரை ஜெனிவாவில் இலங்கையை நிகழ்ச்சி நிரலில் வைக்குமாறு நாங்கள் அவர்களிடம் கேட்போம்,” என்று அவர் கூறுகிறார்.

முடிவுரை

பெர்னாண்டோவின் பிரதிபலிப்புகள் இலங்கையில் வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்படுதல்களைச் சுற்றியுள்ள பிரச்சினைகளை எடுத்துக்காட்டுகின்றன. சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்புகள் இருந்தாலும், அரசியல் விருப்பமின்மை நீதியைத் தொடர்ந்து தடுக்கின்றது. காணாமலாக்கப்பட்ட குடும்பங்கள் பதில்களை கோரி நிற்கையில், பெர்னாண்டோவின் செய்தி தெளிவாக உள்ளது: “உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாமல், கடந்த காலத்தின் காயங்கள் ரணமாகவே இருப்பதுடன், வரலாறு மீண்டும் மீண்டும் ஏற்படலாம்.”

அஜித் பெரகும் ஜயசிங்கவுடன் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலின் அடிப்படையிலானது.